Monday, November 11, 2013

பேரரசர் அசோகர் பற்றி நாம் அறியாத தகவல்கள்...!

கலிங்கப்போர். எல்லோருக்கும் தெரிந்த கதைதான். மாவீரனான அசோகன் மனமாற்றம் அடைந்து அகிம்சைக்கு மாறிய கதை. ஆனால் கலிங்கப் போருக்கு முந்தைய அசோகனையும் நாம் தெரிந்து வைத்துக் கொண்டால் தேவலை.

மவுரிய வம்சத்தை நிறுவியவர் சந்திரகுப்தர். அவருடைய மகன் பிந்துசாரன். பிந்துசாரனின் எண்ணற்ற மனைவியர்களில் ஒருவர் சுபத்ராங்கி. சம்பா என்கிற நகரத்தைச் சேர்ந்த ஒரு பிராமணரின் மகள். இவரை கைப்பிடித்தால் அரசனுக்கு ஜோதிட அடிப்படையில் உயர்வு கிடைக்குமென்று ஜோதிடர்கள் கதைவிட, பிந்துசாரரின் மனைவியானார் சுபத்ராங்கி. பேரரசருக்கும், அரசிக்கும் அப்போது ஏதோ மனத்தாங்கல் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தனக்கு மகன் பிறந்தபிறகு ‘நான் இப்போது வருத்தமில்லாமல் இருக்கிறேன்’ என்று பொருள் வரும்படியான பெயரை மகனுக்கு சூட்டியிருக்க மாட்டார். அசோகரின் பெயருக்கு இப்படியொரு கதை சொல்லப்படுகிறது.

அசோகருக்கு முன்பே பிந்துசாரருக்கு நிறைய மனைவிகள் மூலமாக ஏராளமான மகன்களும், மகள்களும் உண்டு. தனக்கும், தன்னுடைய அம்மாவுக்கும் பேரரசில் போதிய முக்கியத்துவம் இல்லையென்று நினைத்தாரோ, என்னவோ தெரியவில்லை. அரச குடும்பத்துப் பண்புகளை மீறி முரடராகவே வளர்ந்தார் அசோகர். மற்ற இளவரசர்கள் பட்டாடை அணிந்து பளிச்சென்று இருக்க எப்போதுமே அசோகர் மட்டும் கடுமையான இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வியர்வை வழிய, கடைமட்ட போர்வீரன் மாதிரி திரிவார். ஒரு முறை அரசர் பரிவாரங்களோடு வேட்டைக்குச் சென்றபோது, இளவரசரான அசோகரும் கூட சென்றிருந்தார். காட்டில் திடீரென்று சிங்கத்தின் கொடூரமான உறுமல். வேட்டைக்குச் சென்றவர்கள் ஒருகணம் விக்கித்துப் போனார்கள். வாளையும், வேலையும் தயார் நிலையில் வைத்துக்கொண்டு சுற்றிலும் கவனமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். அசோகரை திடீரென்று காணவில்லை. அவரிடம் வாள் கூட இல்லை. இளவரசரை காணோமென்று பயங்கர பரபரப்பு.

மீண்டும் சிங்கத்தின் உறுமல் கேட்டது. ஆனால் இம்முறை சற்று பலகீனமாக. சத்தம் வந்த திசைக்கு எல்லோரும் ஓடிச்சென்று பார்த்தபோது, மரணமடைந்துவிட்ட சிங்கத்தின் மீது கம்பீரமாக நின்றிருந்தார் அசோகர். அவரது கையில் சிங்கத்தின் ரத்தம் சொட்டச் சொட்ட வெறும் மரக்கட்டைதான் இருந்தது. கட்டையால் அடித்தும், குத்தியும் மட்டுமே சிங்கத்தோடு தீரமாக போரிட்டு வென்றிருந்தார் இளவரசர். மரணத்துக்கு சற்றும் அஞ்சாத தன்னுடைய மகனை பேரரசை விரிவாக்கும் போர்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தார் பிந்துசாரர். அவந்தி மாகாணத்தில் அரசுக்கு எதிராக நடந்த கிளர்ச்சியை அடக்க அசோகர் விரைந்தார். சற்றும் மனச்சாட்சியற்ற இராணுவ இயந்திரமாக போர்க்களத்தில் அவர் செயல்பட்டார். எதிரிகளுக்கு மரணத்தைத் தவிர வேறெதையும் அளித்திட அசோகருக்கு மனமில்லை. மவுரிய பேரரசுக்கு டேக்கா கொடுத்துக் கொண்டிருந்த பல சிற்றரசர்களை வாள்முனையில் சந்தித்தார். வீரத்துக்குப் பரிசாக உஜ்ஜயினியின் ஆளுனராக அசோகர் நியமிக்கப்பட்டார்.

பிந்துசாரரின் மறைவுக்குப் பிறகு பதவியேற்க பல மூத்தவர்கள் இருந்தாலும் அசோகர் அரசியல் சூழ்ச்சிகளின் மூலம் பேரரசர் ஆனார். குறிப்பாக அப்பாவின் அமைச்சரவையில் இருந்த ரதகுப்தாவின் ஆதரவு அவருக்கு அமோகமாக இருந்தது. பதிலுக்கு ரதகுப்தா அசோகரின் அமைச்சரவையில் முதலமைச்சர் ஆனார். இயல்பிலேயே மூர்க்கத்தனமும் சந்தேகக் குணமும் கொண்டவராக ஆரம்பகால பேரரசர் அசோகரை வரலாறு பதிவு செய்கிறது. அரசவையில் இருந்தவர்களுக்கு விசுவாச சோதனை வைப்பாராம். அதில் தோற்பவர்களுக்கு மரணம்தான் கதி. நூற்றுக்கணக்கானவர்கள் இம்மாதிரி கொல்லப்பட்டதாக கூறுகிறார்கள்.

ஆனாலும் அசோகரின் ‘அந்தப்புரம்’ அமோகமாகதான் இருந்திருக்கிறது. ஐநூறு மனைவியராவது இருந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அடாவடியாக அரசி ஆக்கப்பட்டவர்கள். முரட்டுத் தோலும், சிடுசிடு முகமுமாக இருந்த அசோகரை பல அரசிகள் விரும்பவில்லை. இல்லறத்துக்கு முரண்டு பிடித்த பல அரசிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அசோகரின் அரசாங்கத்தில் ‘டார்ச்சர் முகாம்’கள் இருந்ததாகவும், தண்டனைக்கு உள்ளானவர்கள் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளானதாகவும் தெரிகிறது. இதனாலேயே மன்னருக்கு ‘சண்டா அசோகா’ என்கிற பட்டத்தை பயத்தோடு மக்கள் சூட்டியிருக்கிறார்கள்.

ஆட்சிக்கு வந்த எட்டே ஆண்டுகளில் மவுரியப் பேரரசை பரப்பளவில் பன்மடங்கு விரிவுப்படுத்தினார். ஆனால் எட்டாண்டுகளாக போர் நடந்தும் கலிங்கத்தை மட்டுமே அவரால் வெல்ல முடியவில்லை. நேரடியாக அசோகர் படைகளுக்கு தலைமை தாங்கி களமிறங்கியதும் நிலைமை வெகுவேகமாக மாறியது. வெற்றியை உரித்தாக்கிக்கொள்ள மவுரியர்கள் இழந்தது அதிகம். போர் முனையில் ஒரு லட்சம் வீரர்கள் உயிரிழந்தார்கள். ஒன்றரை லட்சம் பேர் அங்கஹீனமானார்கள். கலிங்கமே மவுரியப்படையில் அழிக்கப்பட்டு எரிக்கப்பட்டது. மூர்க்கத்தனமான முரடரும், கொடூர மனம் படைத்தவருமான அசோகருக்கே அந்த கோரம் சகிக்கவில்லை.

“நான் என்னதான் செய்திருக்கிறேன்? அப்பாவி குழந்தைகளையும், பெண்களையும் கொல்வதை வெற்றி என்றா சொல்லமுடியும்? பலர் கணவர்களை இழந்திருக்கிறார்கள். அப்பாவை இழந்திருக்கிறார்கள். குழந்தைகளை இழந்திருக்கிறார்கள். பெற்றோர் அற்ற அனாதைக் குழந்தைகள் ஏராளம். காக்கைகளுக்கும், கழுகுகளுக்கும் இரையாகவா மனிதர்கள் பிறந்தார்கள்?” என்று புலம்பினார். இந்த குற்றவுணர்ச்சியே அவர் பவுத்தத்தை தழுவ காரணமானது.

அதுவரை கொடூரமானவராகவும், கொலை பாவங்களுக்கு அஞ்சாதவருமாக பார்க்கப்பட்ட மாமன்னர் அசோகர் அகிம்சை வழிக்கு மாறியபிறகு உலகப்புகழ் பெற்றார். புத்தருக்கு ஞானம் கிடைத்த கயாவுக்கு சென்றார். மகாபோதி ஆலயத்தை நிறுவினார். தன்னுடைய மகனையும், மகளையும் பவுத்தத்தை பரப்ப வெளிநாடுகளுக்கு அனுப்பினார்.

ஒரே ஒரு மாற்றம் போதும். வரலாறே மாற்றி எழுதப்பட்டு விடும்.


நன்றி : https://www.facebook.com/ssssaravanans

நமக்கு தெரியாத தகவல்கள் இதில் இருப்பதால் உங்களோடும் பகிர்கிறேன் நண்பர்களே.

14 comments:

  1. அசோகரின் இன்னொரு முகத்தை அருமையாக விவரித்து இருகிறீர்கள். அப்பப்பா என்ன பயங்கரம்!.

    ReplyDelete
  2. கலிங்கப்போருக்குப் பின்னான நிகழ்வைத்தான் வரலாறு பதிவு செய்திருக்கிறது... அசோகரின் முந்தைய வாழ்க்கை உண்மையிலேயே கொடூரமானதுதான்.

    ReplyDelete
  3. பின்னால் இருக்கும் சிங்கத்தின் முகம் இவ்வளவு டெர்ரர்ரா இருந்திருக்கே..

    ReplyDelete
  4. /// இந்த குற்றவுணர்ச்சியே அவர் பவுத்தத்தை தழுவ காரணமானது...///

    இன்றைக்கு....? யோசிக்கிறேன்....!!!

    ReplyDelete
  5. தவற்றை உணர்ந்து மனம் திருந்தியதால் இந்த உயர்ந்த நிலைக்கு வந்துள்ளார் அசோகர். பகிர்வுக்கு நன்றிண்ணா!

    ReplyDelete
  6. அட வரலாறு வேறுமாதிரியல்லவா சொல்கிறது.? அ-சோகம்.. விளக்கம் புரிகிறது. அற்புத பதிவு

    ReplyDelete
  7. அரசர்கள்னாலே இப்படி தான் இருந்துருப்பாங்களோ.... நினச்சாலே பயமா இருக்கு

    ReplyDelete
  8. அசோகரின் மறுபக்கம் இதுதானா? வியப்பாக இருக்கிறது

    ReplyDelete
  9. அசோகரின் இன்னொரு பக்கத்தை பகிர்ந்தமைக்கு நன்றி! அறியாத பல தகவல்கள் அறிந்துகொண்டேன்! நன்றி!

    ReplyDelete
  10. சிறப்பான பகிர்வு

    ReplyDelete
  11. இதுவரை அறியாத அசோகரின் முன்கதையை
    அருமையான பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா...

    ReplyDelete
  13. மறுமுகம் சற்றே கோரமாகத்தான் இருக்கிறது... பகிர்வுக்கு நன்றி மனோ.

    ReplyDelete
  14. நானும் அசோகரை பற்றி நிறைய வாசித்திருக்கிறேன். ஒரே ஒரு சந்தேகம். மனம் மாறினார் என்று வரலாறு கூறுகிறது. இதை ஏற்றுக் கொள்ள சிரமமாக இருக்கிறது. அனைத்தையும் கைப்பற்றினார். அடாவடித்தனங்களை நிறைவேற்றினார். பிறகு மனம் மாற்றம் அடைந்தார். ஆனால் மனம் மாற்றம் அடைந்த பிறகு அடாவடித்தனத்தாலும் அக்கிரமத்தாலும் கைப்பற்றிய பகுதிகளை திருப்பி ஒப்படைத்தாரா? திரும்ப ஒப்படைத்திருந்தால் தானே அதை மனமாற்றம் என கருத முடியும்? என்னைப் பொறுத்தவரையில், அனைத்தையும் கைப்பற்றி விட்டோம். இனி கைப்பற்ற எதுவும் இல்லை என்ற நிலை வந்த போது தான் மனம் மாற்றம அடைந்திருக்கிறார். (ஓய்வெடுத்திருக்கிறார்). இது என் சொந்த கருத்து..பிழை என்றால் தெரிவியுங்களேன்...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!