Monday, July 2, 2018

மனம் நிறைவான ஊர் பயணம் 5...!


இரும்புத்திரை படத்தை பார்த்துட்டு வடசேரில இருந்து பஸ் ஏறினேன், ராங் ரூட்டுல  போன பஸ்சில் ஏறி கண்டக்டரை தலை சுற்ற வைத்துவிட்டு பொற்றையடியில் இறங்கி ஊரை நோக்கி நடந்தேன், நாஞ்சில் நாட்டின், வாழை தோப்புகள், தென்னந்தோப்புகள், மாந்தோப்புகள், குளம், கால்வாய் என  ரசித்தவாறே...அடடா அழகோ அழகு...!

அடுத்தநாள் கல்யாண வீடு, அன்றே சாயங்காலம் திருநெல்வேலியில் நம்ம ஆபீசரை சந்திக்கும் பரபரப்பு மனதில் தொற்றிக்கொள்ள...குடும்பம் கல்யாண வீட்டிற்கு சென்றுவிட்டதால் மனது வெறுமையாக இருக்கவே...தூங்கிப்போனேன்.

அடுத்தநாள் காலையிலேயே வீட்டம்மா போன் வந்துருச்சு, "மாமா சீக்கிரமா வாங்க, பொண்ணை அலங்கரிச்சுட்டு இருக்கோம்"ன்னு...பரபரன்னு எழும்பி பஸ் பிடிச்சு நாகர்கோவில் வந்து, பேரூந்து நிலையத்தில் காலை உணவை முடித்து, வள்ளியூர் பஸ் பிடிச்சேன், வானம் மப்பும் மந்தாரமுமாக மேகங்களை விரட்டியடித்துக் கொண்டிருந்தது சற்றே அச்சத்துடன்...

நான் எப்போ பஸ்ஸில் பிரயாணம் செய்தாலும் கண்டக்டர் சீட்டில் அவருடன் அமர்ந்து கொள்வது வழக்கம் அப்போதான் டிஸ்டப் இல்லாமல் இருக்குமென அமர்ந்து கொண்டேன், ஒழுகினசேரி தாண்டியதும் மழையும் காற்றுமாக சீற...பஸ்  தன் வேகத்தை குறைக்காமல் போக...

குடைக்குள் மழைபோல பஸ்சுக்குள் மழை, சமூக வலைத்தளங்களில் இதனை வாசித்தும், பார்த்தும் இருந்தாலும் நேரில் பார்த்தபோது அதிர்ந்து போனேன், இருக்கைகளில் அமர முடியாமல் பயணிகள் யாவரும் பல்லி போல ஒட்டிக்கொண்டும், எழும்பியும் நிற்க, கண்டக்டரோ டிரைவரோ எதையும் கண்டுக்கவேயில்லை [பின்னே...ரோஷமில்லாத பயணிகள் காசும் கொடுத்து இப்படி மௌனமாக பயணிக்கும் போது அவர்களுக்கென்ன ?]

போன் கோமாவிலிருந்தபடியால் வீடியோ எடுக்க முடியலையேன்னு கோவம் ஒருபுறம், ஊரின் அழகை அமர்ந்து ரசிக்க முடியவில்லையே என்ற வேதனையுமாக கண்டக்டரிடம் நான் வெடிக்க...அவர் திரும்ப வெடிப்பார்ன்னு சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை !

"ஏன் சார் வண்டி இந்த லட்சணத்துல இருக்கு காசும் வாங்குறீங்க...ரிப்போர்ட் பண்ணக்கூடாதா ?"

"ஏன் நீ பண்ணு, போட்டோ எடு, வீடியோ பிடிச்சு வாட்சப், பேஸ்புக், யூடியூப்ல போடு [வலைத்தளம் இருப்பது தெரியாது போல அவ்வ்வ்] ஒரு மண்ணாங்கட்டியும் பண்ண முடியாது"ன்னுட்டு எழும்பி போயிட்டார்.

என்ன நினைச்சாரோ கொஞ்சம் கழித்து அருகில் வந்து, "தம்பி...எம்புட்டோ ரிப்போர்ட் பண்ணியாச்சு மேலதிகாரிங்ககிட்டே, அவங்க கேக்குறது கலெக்ஷன் எம்பூட்டுய்யா ஆச்சுக்குற கேள்விகள் மட்டும்தான், அதையும் மீறி நாங்க கேட்டா...உனக்கென்ன உன் வேலையை மட்டும் பாரு, கலெக்ஷனை கூட்டுற வழியைப்பாருன்னு சொல்றான், நாங்க என்ன செய்ய தம்பி ? காவிரி மேலாண்மை வாரியம் அமைங்கன்னு சுப்ரீம் கோர்ட் சொல்லியும் அதை மதிக்காதவங்க இருக்கும் உலகம் தம்பி, இவனுககிட்டே சொல்லியா நடக்கப்போகுது"ன்னு வேதனையாக சொல்ல...நானும் அமைதியானேன்.

வள்ளியூர் பஸ்நிலையம் அதே மாதிரிதான் இருக்கு ஒரு மாற்றமுமில்லை, நெல்லை, வள்ளியூர் எப்போ போனாலும் பழச்சாறு குடிக்க மறப்பதில்லை, ரெண்டு கிளாஸ் வாங்கி அருந்தினேன், சீயோன் மலை பஸ் வர தாமதமாகியதால்...ஆட்டோ பிடிக்கப்போனால், யானை விலை குதிரை விலை, போங்கடான்னுட்டு பஸ்சுக்காக காத்திருந்தபோது உள்ளே ஒரு ஆட்டோ வர, கேசுவலா எம்பூட்டுன்னு கேட்டதும் 200 ஓவான்னு சொல்ல...உடனே ஏறி அமர்ந்து கொண்டேன்.

ஆட்டோ விரைந்து கொண்டிருக்க...வீட்டம்மா போன் "மாமா எங்கே இருக்கீங்க ?"

"நடு ரோட்டுல இருக்கேன்"ன்னு சொன்னதும் ஆட்டோவை நிறுத்திவிட்டு டிரைவர் சிரிச்ச சிரிப்பில் நான் பீதியாக...எதிர்முனையில்..."இங்க வா அப்புறமா இருக்கு"ன்னு சொல்ல...இன்னும் பீதியா போயி சேர்ந்தேன்...

தொடரும்...

படங்கள் : நன்றி கூகுள்.

4 comments:

  1. இன்னும் பீதியா போயி சேர்ந்தேன்.
    தொடரட்டும்

    ReplyDelete
  2. எழுத்து நடை நல்லா இருக்கு ஒய். வெளிநாட்ல தப்பு பண்ணினாலும் எழுத்தில் தப்பில்லை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. ஆட்டோக்கள் தனித்தனி கட்டணம் அறவிடுவது என்றுதான் மாறுமோ?

    ReplyDelete
  4. யதார்த்தமாக சொன்னால் அவங்கள் பாதார்த்தமாக பார்ப்பாங்க))) ஆட்டோவின் அடுத்த நிலை தணிக்கைக்கு உட்பட்டது ))))

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!