Thursday, June 21, 2012

மண்பானை தண்ணீரில் தாய்மை இருக்கு....!

நான் குழந்தையாக இருக்கும் போது [[ விவரம் அறிந்து]] சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமத்தார் எல்லாரும் போவது சாமிதோப்பு அய்யா பதி பின்புறமுள்ள தெற்கு வீட்டு நாடார் என்று சொல்லப்படும் தெக்குட்டி நாடார் வீட்டு முன்புதான் மீன்கடை [[சந்தை]] கூடும், காலை ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் சந்தை பதினோரு மணிக்குதான் முடியும். அக்கம் பக்கத்து கிராம மக்கள் தங்கள் தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறி, பழங்கள், கிழங்குகள், நெல்லிக்காய்கள், மாங்கா, மாம்பழம் என சந்தையில் வைத்து விற்பதும், என்னைப்போல வெளி தேசத்துக்கு போயி திரும்புவர்களை கண்டால் அன்பாக காசின்றி கொடுத்தும் மகிழ்வார்கள்.



மீன்கள்......... கீழமணக்குடி, கன்னியாகுமரி, வடக்கு தாமரைகுளம் இப்பிடியாப்பட்ட இடங்களில் இருந்து வியாபாரிகள் மீன்களை கொண்டு வருவது உண்டு, ஞாயிறு தவிர எல்லா நாட்களும் சந்தை உண்டு, சந்தை என்று யாரும் சொல்லமாட்டார்கள், மீன்கடை என்றே சொல்வது வழக்கம் இப்போதும்...!


நாங்கள் பள்ளிக்கூடம் போகனும்னாலும் மீன்கடை போகனும்னாலும் ஒரே வழிதான், ஸ்கூல் லீவு நாட்களில் அம்மாவின் முந்தானையை பிடித்து கொண்டு மீன்கடை போவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, [அதிலும் நான் கடைகுட்டி செல்லபிள்ளை வேறு] அம்மா என்னை கண்டிப்பா கூட்டிட்டு போயி நெல்லிக்காய் மாம்பழம் கொய்யா எல்லாம் அன்பா வாங்கி முந்தானையில் துடைத்து திங்க தருவாள்....!


கையில் காசில்லைன்னா அம்மா மீன்கடைக்கு கூட்டிப்போகாமல் செய்யும் தந்திரம் எனக்கு இப்பவும் நியாபகம் இருக்கு...!!! 'எலேய் தம்பி.........அம்மா மீன்கடைக்கு போறேன், நீ வீட்டுல சும்மா இருக்காம மேல உரியில வச்சிருக்குற கருப்பட்டியை எட்டாதுன்னு நினைச்சி ஸ்டூலை போட்டு ஏறி எடுத்து தின்னேன்னு வச்சிக்க அம்மா வந்து பிச்சிபுடுவேன் பிச்சி'ன்னு அழகா வழிகாட்டி தந்துட்டு போவாங்க, அப்புறம் மீன்கடைக்கு நான் போவேனாக்கும்...? கருப்பட்டி காலி ஆகி இருக்கும், அம்மா வந்து ஒன்னுமே சொல்லமாட்டாள்...!!

[[இந்த செடிக்குள்ளே பாம்பு இருப்பதாக சொல்வார்கள், ஆனால் நான் பார்த்ததே இல்லை]]

அப்பா வியாபாரம் விஷயமாக தூத்துக்குடி [[சீசன் நேரம்]] அடிக்கடி போவார், அண்ணன்கள், அக்கா வெளியே கான்வென்ட் படிப்பு, நான் மட்டும் அம்மா கூட சுத்திட்டு இருப்பேன். எங்கம்மாவுக்கு எல்லாமே நான்தான்....!!!


ஸோ சொல்ல வந்ததை விட்டுட்டு எங்கேயோ போயிட்டேன் சரி விஷயத்துக்கு வருவோம், அப்படி மீன்கடை, ஸ்கூல் போகும் போதும் திரும்பும் போதும் ஒரு வீட்டில் "மண்பானையில்" தண்ணீர் ஊற்றி வைத்து ஒரு அலுமினிய கிளாசையும் கயிற்றில் கட்டி தொங்க விட்டுருப்பார்கள் அந்த வீட்டில், போவோர் வருவோர் எல்லாருமே அங்கே தண்ணீர் குடிப்பது வழக்கம்...!


அந்த காலகட்டத்தில் நல்ல குடிநீர் எங்கும் கிடைக்காது, [[இப்போதான் கார்பரேஷன் தண்ணி வந்துருக்கு]] எங்களுக்கும் குடிநீர் வேண்டுமானால் ஒன்னரை கிலோமீட்டர் நடந்து போயிதான் எடுத்து கொண்டு வரவேண்டும் அப்படி தண்ணிக்கு கஷ்டபட்ட நேரமது...!!!

நான் ஸ்கூல் போகும் போதும் திரும்பும் போதும், மீன்கடை போகும் போதும் திரும்பும் போதும் நானும் அம்மாவும் அங்கே மண்பானை தண்ணீர் குடிப்பதுண்டு, சில நேரங்களில் அந்த பானைக்குள் கொஞ்சம் வேர்களை போட்டு வைத்து தண்ணீர் நிரப்பி வைத்திருப்பார்கள், அய்யோ மணம்னா அப்பிடி ஒரு மணம்...! [என்ன வேர்'ன்னு நியாபகம் இல்லை] 


இது தொடர்கதையா நடக்கும் போது, எனக்குள் ஒரு கேள்வி எழும்பியது, ஏன் நம்ம வீட்டுலும் அப்பிடி ஒரு "மண்பானை" வைத்து தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று தோன்றியது. அம்மாவிடம் கேட்க பயம் காரணம் ஒன்னரை கிலோமீட்டர் தாண்டி போயி தண்ணீர் பிடித்து வருகிறாள் அம்மா, இப்போ சொன்னோம்னா அடி மங்காத்தாதான்னு நினச்சு பேசாம இருந்துட்டேன்.

அப்புறம் கொஞ்ச நாளைக்கு அப்புறம் தூங்கும் போது அம்மா பாசத்தோடு என் தலையை கோதிகொண்டிருக்கும் போது கேட்டேன், அம்மா எதுக்கும்மா அந்த வீட்டுல மட்டும் தண்ணீர் பானை வச்சிருக்காங்க வேற யார் வீட்டுலயும் அப்பிடி இல்லையேன்னு கேட்டேன், அம்மா சுருக்கமா ஒரு கதை சொன்னாள் அந்த வீட்டைப்பற்றி.....


'தம்பி, கொஞ்சநாளைக்கு முன்னாடி............ அந்த வீட்டுல வெள்ளை சேலை உடுத்துட்டு ஒரு அக்கா இருக்காங்களே அவங்க மாப்பிளை ஒரு விபத்தில் சிக்கி தண்ணீர் தாகத்தால் தண்ணீர் கிடைக்காமல் இறந்து போனாருப்பா, தண்ணீர் மட்டும் குடிக்க கிடச்சிருந்தால் பிழைச்சிருப்பாராம், அந்த இடத்தில் தண்ணீர் இல்லாததால் அவர் செத்து போயிட்டார். இவளவுக்கும் அந்த அக்காளும் அந்த அண்ணனும் வீட்டை எதிர்த்து காதல் கல்யாணம் செய்து கொண்டவர்கள்...! [[அந்த காலத்து காதல் கல்யாணம்னா நமக்கு தெரிஞ்சதுதானே யப்பா...!!!]]

அவங்க கல்யாணம் செய்தது அந்த அண்ணன் வீட்டுல பிடிக்காததால் ஏத்துக்கிடல, ஆனா அந்த அக்கா வீட்டுல ஏத்துகிட்டாங்க, நல்லா படிச்சவங்க, இந்த விபத்துல அந்த அண்ணன் இறந்து பத்து வருஷமாகியும் அந்த அக்கா வேற கல்யாணமே கட்டிக்கல, இதை அறிந்த அந்த அண்ணன் வீட்டார் அந்த அக்காவை காலில் விழுந்து மருமகளா ஏத்துகிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சொத்தில் பங்கும் கொடுத்துட்டாங்க...!


இனி கல்யாணமே வேண்டாம் என்றிருந்த அந்த அக்காவுக்கு தன் மாப்பிளை தண்ணீர் கிடைக்காமல்தானே செத்து போனாருன்னுட்டு, இப்படி "மண்பானை" வைத்து ஊருக்கே தண்ணி ஊத்திட்டு இருக்காள் புரியுதா...?

அம்மா சொன்னது அப்போ எனக்கு புரியாவிட்டாலும்......... இப்போது எங்க ஊர் மீன்கடை அடுத்த [[கோட்டையடி]] ஊருக்கு மாறிடுச்சு [[அப்பவே]] 


இந்தத்தடவை ஊர் போனபோது என் மனைவியும் நானும் [[அம்மாவுக்கு நடக்க முடியாது]] மகளுமாக மீன்கடை போவது வழக்கமாக இருந்தது, போகும் வழியில் ஒரு மண்பானை கடையை கண்டேன், மண்பானை தண்ணீர் சூப்பராக இருக்குமேன்னு நினச்சி ஒரு பானை வாங்கி வந்து தண்ணீர் ஊத்தப்போனேன், இதை கவனித்த எங்கள் பக்கத்து வீட்டு பாட்டி எலேய் என்ன பண்ணுத...? புது பானையை சூடு பண்ணி ஆவி காட்டித்தான் தண்ணி ஊத்தி வைக்கணும்னு சத்தம் போட்டு விட்டு அவர்களே அடுப்பில் வைத்து சூடு பண்ணி ஆவி காட்டி தந்தார்கள். ரெண்டு நாள் தண்ணி ஊத்தி ஊத்தி தூர ஊத்திட்டு அப்புறமா தண்ணீர் ஊத்தி வச்சி குடிங்க என்றார்...!

அப்புறம் அந்த தண்ணீரை நானும் அம்மாவும்தான் விரும்பி குடிப்போம், மனைவி பிள்ளைங்களுக்கு பிடிக்கலை, [[ம்ஹும் மும்பை ஜீவிகளுக்கு தெரியுமா இதன் ருசி..?]] 

இப்படி இருக்கையில் ஒரு நாள் வழிபோக்கர்கள் நான்கு பேர் என் அண்ணன் வீட்டு பின்னாடி களைப்பால் வந்து [[சைக்கிளில்]] இறங்கி நிழலில் இளைப்பாறிக்கொண்டிருந்தார்கள் நான் பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தேன், அப்போது எங்க வீட்டு காம்பவுண்டுக்குள் வந்த அவர்களில் ஒரு முதியவர் [[என் அண்ணன் வீட்டில் யாருமில்லை அப்போது]] என்னிடம், தம்பி குடிக்க கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமான்னு கேட்டார்.

நானும் ஓடிப்போயி செம்பில் சாதாரண [[குடிநீர்தான்]] தண்ணீர் கோரினேன், என்ன நினைத்தேனோ தெரியவில்லை பாவம் என்று நினைத்து அந்த "மண்பானை" தண்ணீரை மொண்டு கொடுத்தேன், முழுவதையும் குடித்தவர்.......தம்பி இன்னொரு செம்பு தண்ணீர் கிடைக்குமா என்றார். ஓ தாராளமா என்று சொல்லி மீண்டும் மொண்டு கொடுத்தேன். குடித்தவர் என் கையை பிடித்து கொண்டு சொன்னார், தம்பி.............25 வருஷத்துக்கு முன்னாடி இறந்துபோன என் மனைவியின் கையால் குடித்த இந்த "மண்பானை" தண்ணீரை இன்னைக்குதான்ய்யா உன் கையால குடிச்சிருக்கேன்......!


என்னா மணம்ய்யா என்னா மணம், நம்ம மண்ணுக்கு உயிர் இருக்குய்யா உயிர் இருக்கு, அதில் தாயின் கருணை இருக்கு, உங்களைப்போல உள்ளவர்கள் எல்லாம் இதை அறியாமல் இருக்கிறீர்களேன்னு நான் வருந்தின நாட்கள் உண்டுய்யா, ஆனா உன்னை மாதிரி மண்ணை நேசிக்கிற தம்பிகளும் இருக்கீங்கன்னு இப்போ புரிஞ்சிகிட்டேன் நல்லா இருய்யா ராசா'ன்னு ஆசீர்வதிச்சுட்டு போனார், நான் நெகிழ்ந்து போனேன் என் மனைவி பிள்ளைகள் "ங்கே"........பின்னர் அவர்களுக்கும் விளக்கி சொன்னேன்...!

அப்புறம்தான் எனக்கு அந்த மீன்கடை அக்காவின் தண்ணீர் பந்தல் நினைவுக்கு வர, அம்மாவிடம் ஓடிபோயி கேட்டேன், அம்மாவுக்கு நினைவில்லை, நாங்கள் தண்ணீர் குடித்தது, அந்த அக்காளின் கதை எல்லாம் அம்மாவுக்கு கொஞ்சம்தான் நியாபகம் இருக்கு மறந்து போச்சாம் [[வயசாகிருச்சுல்ல]]

நண்பனை அழைத்து கொண்டு அந்த வீட்டுக்கே போயி பார்த்தேன் விசாரித்தேன், ஆனால் எப்பவோ அந்த வீட்டை வித்துவிட்டு எங்கே போனார்கள் என்றே யாருக்கும் தெரியவில்லை, தனிமையில் இருக்கும் போது அந்த அக்காளையும், "மண்பானை" தண்ணீரையும் நினைத்தால் கண்கள் கண்ணீரால் முட்டும்....!!!

இந்த நிகழ்ச்சி என் அடி மனதில் இப்போதும் ரணமாய் முனகி கொண்டேதான் இருக்கிறது, ஒரு "மண்பானை" வாங்கப்போயி, புரியாத வயசில் கேட்ட சம்பவம், நாம் விவரம் அறியும் போது நினைத்து பார்க்கையில் என்னா வலி வலிக்குது மனசுக்கு இல்லையா......

அந்த அக்கா இப்போ எங்கே எப்படி இருக்கிறாளோ...? ஆனால் அவளின் வைராக்கியமான நல்ல குணத்திற்கு அந்த அக்காள் இப்போது நல்லாத்தான் இருப்பாள் என்று என் உள் மனசு நிச்சயமாக சொல்கிறது...!

அக்கா...... இந்த பதிவு உன் புனிதமான கால்களுக்கு சமர்ப்பணம்.

டிஸ்கி : நான் வாங்கிய அந்த "மண்பானை"தான் என் மகள் தலையில் சுமந்து வருகிறாள், இது ஏற்கனவே பேஸ்புக்'கில் போட்ட படம்தான் இருந்தாலும் உங்கள் பார்வைக்காக மறுபடியும் பகிர்ந்துள்ளேன்.



26 comments:

  1. மண்ணை நேசிக்கிற 'மன்னன்' மனோ அவர்களே பதிவு அருமை

    ReplyDelete
  2. மண்பானை தண்ணி அனுபவம் அருமை தண்ணியை போலவே நன்றாக உள்ளது. அது போல மண்பானையில் வைக்கும் மீன் குழம்பும் அருமை. அதை பற்றி அனுபவ கதை ஒன்று இருந்தால் எடுத்துவிடவும்

    ReplyDelete
  3. நிறைய அற்புதமான விவரங்கள் அடங்கிய ஒரு அழகிய பதிவு இது வாழ்த்துகள் மனோ..

    அப்புறம் உண்மையிலே அவர் அப்படிச்சொன்னாரா? மனைவி கையிலே..தண்ணீ... புண்ணியம்... ??? :) புல்லரிக்கிறது போங்க.

    ReplyDelete
  4. ம்.... நெகிழ்ச்சி மனதை உலுக்கியது

    ReplyDelete
  5. சிறந்த பதிவு மனோ. நகரத்தில் தவிச்ச வாய்க்கு தண்ணி கேட்டு உள்ளே புகுந்து கொலை செய்யும் கொடூரங்கள் அடிக்கடி நிகழ்வது கொடுமை. அந்த பானை ஸ்டில் உங்க தொப்பையை மாடலாக வைத்து உருவாக்கப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது

    ReplyDelete
  6. தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுப்பது கோடி புண்ணியம் என்று எங்க பாட்டி சொல்லுவாங்க.....நெகிழவைத்த பதிவு!

    ReplyDelete
  7. அந்த அக்கா இப்போ எங்கே எப்படி இருக்கிறாளோ...? ஆனால் அவளின் வைராக்கியமான நல்ல குணத்திற்கு அந்த அக்காள் இப்போது நல்லாத்தான் இருப்பாள் என்று என் உள் மனசு நிச்சயமாக சொல்கிறது...!

    அக்கா...... இந்த பதிவு உன் புனிதமான கால்களுக்கு சமர்ப்பணம்.//நெகிழ வைத்த பகிர்வு!

    ReplyDelete
  8. அருமையான பகிர்வு மனோ.

    ReplyDelete
  9. சிறந்த பதிவு சார் ! என்ன தான் Fridge-தண்ணீரைக் குடித்தாலும், அந்த மண் பானைத் தண்ணீர் போல் ஒரு சுவை வராது.

    படித்து முடித்தவுடன் மனதிற்குள் ஏதோ ஒரு பாரம் ..... நன்றி சார் !

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு,பானை பிடித்தவள் பாக்கியசாலின்னு ஒரு பழமொழி உண்டு. இப்ப அந்த ப்ழமொழி தங்கள் மகளுக்கு பொருந்தும்.மண்பானைத்தண்ணீர் யாருக்கு தான் பிடிக்காது.பானையை எப்படி பக்குவமாய் பயன்படுத்தனும்னு சொன்ன கூடுதல் தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  11. மண் பாணைத் தண்ணியில் வெட்டி வேர் மற்றும் சில விதைகளை போட்டு வைத்துக் குடித்தால்... ம்... என்ன ஒரு சுகம்...
    அழகான பகிர்வு... கடைசியில் நெகிழ்ச்சி.

    ReplyDelete
  12. அருமையான பதிவு! மண்பானைகளை குளிர்சாதன பெட்டிகள் மறைத்துவிட்டாலும் அதன் சுவையை வெல்ல முடியுமா? அருமை!

    ReplyDelete
  13. மனதை நெகிழ வைத்த பதிவு மனோ.....

    என்ன தான் குளிர்சாதனப் பெட்டிகள் வந்தாலும், மண் பானை தண்ணீருக்கு இணை இல்லை.... இப்பவும் எனது பெரியம்மா வீட்டில் [திருப்பராய்த்துறை] பானையில் தான் தண்ணீர்... பானைத்தண்ணீர் குடித்தால் என்னவொரு சுகம்....

    மண் வாசம் வீசும் பகிர்வு மக்கா....

    ReplyDelete
  14. ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல பதிவு போட்டிருக்கீங்க போல....

    ReplyDelete
  15. மனம் ஒன்றிப்படித்த பதிவு. நன்றி மனோ.

    ReplyDelete
  16. மிகவும் ரசித்து எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  17. மண் பானை ஊடே ஊர்க்கதைகள் பல ஞாபகப்படுத்தும் பதிவு அண்ணாச்சி!ம்ம்ம்

    ReplyDelete
  18. பழமை என்று நாம் ஒதுக்கும் ஜீவன்கள் பல உயிர் வாழ்வது கிராமத்தில் அதில் மனோவின் மகள் செல்லமாக மண்பானையோடு வரும் .அழகை ரசித்தேன் கிராமத்து இளவரசியாக அண்ணாச்சியின் ம்கள் முகம் தரும் காட்சிகள் எல்லாம் எங்கள் கிராமத்தை மீண்டும் ஞாபகப்படுத்துகின்றது!ம்ம் அழித்தது யுத்தம் ஆயிரம் மண்பானை கிராமங்களை!ம்ம்

    ReplyDelete
  19. மண்பானை வாசம் தனிதான்..........

    ReplyDelete
  20. நல்ல பதிவு. தண்ணீர் இல்லாமல் எதுவும் இல்லை.

    ReplyDelete
  21. கனவுலே வந்து கண்ணைக் குத்தி விடுவீகலோன்னு பயந்து ....
    அருமையான பதிவுங்க.எங்கள் ஊரில் ஈர மணலின் மேல் பானையில் நீர் நிரப்பி மண் வட்டினால் மூடி வைத்திருப்பர். ஆற்று நீர்,வெட்டிவேர் / நன்னாரி அதில் போட்டு வைத்திருப்பர். ஈரமணலில் வெந்தயம் முளைத்திருக்கும்.கோடையில் தேவாம்ருதமாய் இருக்கும்.

    ReplyDelete
  22. அருமையான பதிவு...படங்கள் சிரிக்கின்றனஃஃமண் என்றாலே வாசம்.தங்கள் படைப்பும் வாசம்...தாய்மை

    ReplyDelete
  23. மனதை நெகிழச் செய்து போகும்
    அருமையான பதிவு
    சொல்லிச் சென்ற விதம்
    அந்தப் பானை நீராய் உள்ளம் நிறைத்தது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. Aqua guard, Pure it எல்லாம் பானைக்கு பக்கத்துல கூட வரமுடியாது. சுவாரஸ்யமான பதிவு.

    ReplyDelete
  25. அருமையான பகிர்வு!!!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!