Sunday, November 4, 2012

நாங்கள் வெளிநாட்டில் இருக்கும் ஏழைகள்...!

ஊருக்கு போகும்போதெல்லாம்  எங்கம்மாவின் நச்சரிப்பில் ஒன்று, எலேய் தம்பி அதோ அவனைப்பாரு இப்போதான் வெளிநாடு போனான், பதினைந்து லட்சம் ரூபாய்க்கு வீடு வைத்து இருக்கிறான், இதோ நம்ம சொக்காரன் அவனப்பாரு முப்பது லட்சம் ரூபாய்க்கு வீடு போட்டுருக்கான், இதோ நம்ம பக்கத்து வீட்டுக்காரனை பாரு வெளிநாடு போயி ரெண்டே வருஷத்துல இருவது லட்சம் ரூபாய்க்கு வீடு வச்சிருக்கான்.
நீயும் வெளிநாடு போயி பல வருஷம் ஆச்சே மக்களே......இதோ இந்த ஓட்டு வீடு குடிசையில்தானே இன்னமும் அம்மாவை வச்சி இருக்கே..? அம்மாவின் புலம்பல் இது....!

என்னடா லட்சம் லட்சம் ரூபாய்க்கு இவிங்க வீடு வைக்க இவனுகளுக்கு பணம் எங்கிட்டு இருந்து வருதோன்னு நானும் நினைப்பதுண்டு, ஆனால் சற்று உன்னிப்பாக இவர்களில் சிலரை கவனிக்க தவறிவிட்டேன் பலகாலமாக...!

இந்தமுறை ஊர் போனபோது என் மனைவியின் முன்பாக என்னை குத்திகாட்ட நினைத்த அம்மா, இதே டயலாக்கை சொல்ல....என் மனைவிக்கும் சற்றே சந்தேகம் வர, அதான் நான் மும்பையில் சொந்தவீடு வாங்கி இருக்கேனேன்னு சொன்னாலும் அவள் கொஞ்சம் சந்தேகமாகவே பார்க்க...எனக்கு மனசில் வலி...!
ஒருநாள் எங்க சித்தப்பா, மற்றும் உறவினர்கள் என்னை பார்க்க வந்தபோதும் அம்மா என்னை அவர்கள் முன்னிலையில் குற்றப்படுத்தினார்கள், அவமானப்பட்டுப்போனேன், பேங்கில் போயி [[ஏற்கனவே]] வீடு கட்ட கடன் கேட்டதுக்கு அந்த பேங்க் டேமேஜர் பிச்சைக்காரனைப் பார்ப்பதுபோல் பார்த்த நியாபகம் எனக்கு வந்துபோக.....கோபமாகி கொதித்துபோனேன்.

எங்கள் தெருவில் வெளிநாடு போயி இரண்டே வருஷத்தில் இருபது லட்சம் ரூபாய்க்கு வீடு வைத்தவன் ஒரு கொத்தனார், கொத்தவேலைக்கு போயி [[சவூதி]] ரெண்டே வருஷத்தில் பேங்க் லோன் இல்லாமல், அப்பன் பாட்டன் சொத்தும் இல்லாமல் [[ஒன்னும் கிடையாது]] எப்படி இது சாத்தியமாகிற்று...? என்று என் சித்தப்பாக்களிடம் ஒரு கணக்கு சொன்னேன்...

கொத்த வேலைக்கு வளைகுடா நாடுகளின் சம்பளம் என்பது ஒருநாளைக்கு ஐநூறு ரூபாயிலிருந்து எழுநூறு வரை உண்டு, கஷ்டப்பட்டு ஓவர்டைம் பார்த்தாலும் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என்று வைத்தாலும், இவன் சாப்பாடு செலவு, டெலிபோன் செலவு எல்லாம் கணக்கு பார்க்கும்போது, ஒரு நாளைக்கு எண்ணூறு ரூபாய் என்றே வைத்தாலும், அடுத்து வாரவிடுமுறைகள்...சரி அதை விடுங்க....
ஒரு நாளைக்கு எண்ணூறு ரூபாய் சம்பளமேன்றால் மாசம் எவ்வளவு..? 24'000 rs

அப்போ ஒரு வருஷத்துக்கு? 2'88000rs

ரெண்டு வருஷத்துக்கு? 5'76000rs இதுல பாதிகூட மிச்சம் வராது என்பது என் கணிப்பு, இப்படி இருக்க இவன் எப்படி ரெண்டே வருஷத்துல இருவது லட்சம் ரூபாய்க்கு வீடு வைக்க முடியும் என்று நான் கேள்வி எழுப்ப.....சித்தப்பனுக யோசிக்க......

நீங்களும் யோசிங்க.....எப்பிடி...?

கொய்யால அவன் "களவு" செஞ்சிருப்பான்ய்யா இது சம்பாதிச்சு வந்த பணத்துல கட்டுன வீடு இல்லவேயில்லை என்று சொல்ல, எங்க அம்மா விஷயம் புரிந்து விழிக்க...சித்தப்பாக்களுக்கு விஷயம் தெரியவர...இது ஊர்முழுக்க பரவிடுச்சு, அந்த வீட்டுக்காரனை நட்பாக நண்பர்கள் மூலம் பிடித்து [[தண்ணி]] விசாரிக்க...
இவன் கொத்தவேலை செய்யாமல் சவுதியில் ஒரு கன்ரக்ஷன் கம்பெனியில் வாட்ச்மேன் வேலை செய்யுமிடத்தில் இரும்பு, விலையுயர்ந்த கேபிள் வயர்கள் அப்படி இப்படியென்று களவாண்டு வித்துருக்கான் என்பது தெரிய வந்தது...! [[இப்போ அந்த ஊரை காலிபண்ணிட்டே ஓடிவிட்டான் பாவம், அந்தவீடும் சாபம் பிடித்தாற்போல் இருக்கிறதாம் அம்மா சொன்னார்கள்]]

அதுக்கப்புறம் எங்கம்மா வீடு பற்றி பேசுவதே இல்லை, நானும் பணம் வரும்போது கட்டலாம் என்று சொல்லிவிட்டேன்.

வெளிநாடு போயிட்டு லட்சம் லட்சம் ரூபாய்களுக்கு வீடுகட்டுறவனை நல்லா உத்துப்பாருங்க நல்லாவே தெரியும் அண்ணன் எப்பிடிபட்டவன்னு, நாங்களும் நாயா பேயா உழைக்குறோம் ஒன்னும் மிஞ்சவில்லை சாப்பாட்டைத்தவிர....!
வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு நாங்கள் பந்தாவாக தெரிவோம் ஆனால் எங்கள் வறுமைகள் எங்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை, வெளி உலகுக்கு தெரியாது...!

கருப்பு பணம் ஆறாக பாய்ந்தோடும் நாட்டில் இருக்கும் நண்பனிடம் நானும் சொல்வதுண்டு, "ஏண்டா உன் ஊர் வழியாகத்தானே நம்ம பணம் எல்லாம் சுவிஸ் போகுது அதுல கொஞ்சம் நண்பனுகளுக்கு கொடுத்து உதவலாம்தானே...?"

"ஓஹோ அப்பிடியா, ராஸ்கல் நோகாம நோம்பு கும்புடப்போறியாக்கும்" என்று அடிக்கடி என்னை கேப்பான், அதன் அர்த்தம் என்ன "உழைக்காமல் சாப்பிட ஆசையா என்பது" 
நான் எல்லாரையும் சொல்லவில்லை களவானிகளை சொன்னேன், மற்றபடி உழைத்து கடன் உடன் வாங்கி வீடுகட்டும் அன்பர்களும் உண்டு...!

இனி இந்த தடவை ஊர்வரும்போது எங்க ஊர் பேங்க் டேமேஜருக்கு இருக்கு ஆப்பு....கொய்யால முறையா வெளிநாட்டுவாசிகளுக்கு வீட்டு கடன் தரலைன்னா தர்ணா போராட்டமே நடத்தி குலுங்க வைக்கனும்னு இருக்கேன்...!

24 comments:

  1. //வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு நாங்கள் பந்தாவாக தெரிவோம் ஆனால் எங்கள் வறுமைகள் எங்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை, வெளி உலகுக்கு தெரியாது...!//
    சத்தியமான வார்த்தைகள், அங்கே இருந்து பார்த்தால் தான் புரியும்.

    ReplyDelete
  2. உண்மைதான்...அவன் இப்படி இவன் அப்படி சம்பாதித்தான்...அது போல நாமும் போகோனும் என்று கொள்வது தவறு...நாம் நேர் வழியில் பணம் ஈட்டுவோம் நண்பா...நம் கையில் பல கோடி ரூபாய் அடுத்தவர் பணம் இருந்தாலும்...அது நம்முடைய உதிரும் முடிக்கு சமானம் என்று கொண்டால்...என்றாவது ஒரு நாள் நம் உழைப்புக்கான சரித்திரம் இருக்கும்!

    ReplyDelete
  3. நச்னு ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க மனோ.... உண்மை உண்மைப்பா...

    நேர்மையாக உழைத்து சம்பாதிப்பவருக்கும் இடையில் சட்டுனு பணக்காரன் ஆகிறவங்களுக்கும் இருக்கும் வித்தியாசம் பார்த்தாலே தெரிஞ்சிரும்.. அம்மாவும் மனைவியும் வெள்ளந்தியா இருந்ததால தான் உங்களை திட்டி இருக்காங்க....

    இங்கே எங்களிடம் ஹௌசிங் லோன் வாங்க வருபவர்களுக்கு முறையாக எங்களால் முடிந்தவரை உண்மையை இருக்கும் நிலையைச்சொல்லி தான் வீட்டுக்கடனுக்கு உதவுகிறோம்பா....

    நான் ஹௌசிங் லோனுக்கு அப்ளைப்பண்ணப்ப இதே கூத்து தான் நடந்தது.... ரிஜக்ட் பண்ணிட்டாங்க...
    ரொம்ப பாடுபட்டு கடன் வாங்கி இந்தமுறை ஊருக்கு போனபோது தான் முழுமையாக அடைத்து முடித்தோம். ஒருவழியா பெரிய வேலை முடிந்த திருப்தி....

    சரியா கால்குலேட் பண்ணி சொல்லிட்டீங்க. எனக்கு தெரிஞ்ச ஒருவர் மிக குறைவான சம்பளம் ஆனால் நாங்க இம்முறை ஊருக்கு போனப்ப அவங்க வீட்டுக்கு போயிருந்தோம் அசந்து தான் போய்விட்டோம்.. சுட்டக்காசெல்லாம் அங்கே மார்பிளாக :) அழகிய வீடாக உருமாறி இருந்தது...

    என்னைக்கும் நல்லமுறையில் சம்பாதித்து உருவாக்கும் எதுவுமே நிலைக்கும் என்பதை நச் நு சொல்லவைத்தது உங்க பகிர்வு மனோ..

    என்னடா இது நம்ம மனோவின் டச் இல்லையேன்னு பார்த்தேன் அதாம்பா சிரிக்கவைப்பீங்களே... கடைசி வரி அதையும் பூர்த்தி பண்ணிவிட்டது. எந்த பேங்க் மேனெஜர் உங்கக்கிட்ட அடி வாங்கப்போறாரோன்னு பயமா இருக்குப்பா :)

    ReplyDelete
  4. வெளிநாட்டுக்கு வேலைக்கு போனாலே கூரையை பிச்சுக்கிட்டு கொட்டும்ன்னு எல்லாருக்கும் நினைப்பு. ஆனா, அவங்க படுற வேதனைலாம் யாருக்கு தெரிய போகுது?!

    ReplyDelete
  5. வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு நாங்கள் பந்தாவாக தெரிவோம் ஆனால் எங்கள் வறுமைகள் எங்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை, வெளி உலகுக்கு தெரியாது...


    சத்தியமான உண்மை மனோஅண்ணா, இன்னைக்கு காசு பணம் சம்பாதிச்சா போதும் ஆனா எப்படி சம்பாதிக்கிறோம்ங்கிறத மறந்து பணத்தோட நாமளும் ஒரு பிணமா தான் சுத்திட்டு இருக்க இந்த மாதிரி ஆளுங்களால நம்மளோட தன்மானமும் கொஞ்சம் சுரண்டப்படுது, நாம ஈட்டும் தொகை குறைவா இருந்தாலும் நிம்மதிக்கு குறைவில்லா ஒரு வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கோம் அவர்களுக்கு இதெல்லாம் நிலைப்பது இல்லை... ஏதோ சோகமா இருக்கிற மாதிரி இருக்குன்னா உங்க பதிவு, விட்டு தள்ளுங்க உங்க ஏரியா மேனஜர் லோன் குடுக்கலனா ஒரு வழி பண்ணிடுங்க.. மறக்கமா ஓசி சோறுக்கு கூப்பிட்டுறுங்க அண்ணா :)

    ReplyDelete
  6. 100% உண்மை மக்கா...... நானும் பலவாட்டி யோசிச்சிருக்கேன்.... கணக்கு போட்டும் பாத்திருக்கேன்...

    ReplyDelete
  7. மக்கா உண்மை உண்மை

    ReplyDelete
  8. அண்ணே, இது மட்டுமா, சமீபத்தில ஒருத்தரு 'நீ ஃபாரின்ல இருக்கே..எங்க கஷ்டமெல்லாம் உனக்கு என்ன புரியும்?'ன்னாரு..கொடுமை என்னன்னா, அண்ணாச்சிக்கு வேலைன்னு பெருசா ஒன்னும் கிடையாது, ஆனாலும் கார் வாங்கிட்டாரு..ஆனால் நாம பாரின்ல இருந்தாலும் இன்னும் கார் வாங்க யோசிச்சுக்கிட்டுத் தான் இருக்கோம்..நாம உழைச்சுத் தான் சாப்பிடணும்னு நினைக்கிறோம், அதான் அந்த மாதிரி ஆட்களுக்கு நம்மளைப் பார்த்தால் இளக்காரமாத் தெரியுது.

    ReplyDelete
  9. இக்கரைக்கு அக்கரை தான்! அடி மேல் அடி வைத்து முன்னேறுவோம்..அகலக்கால் வேண்டாம்!

    ReplyDelete
  10. பக்கத்து வீட்டுக்காரர்களின் வருமான கணக்கு எல்லாம்.. உங்களுக்கே ஓவரா இல்லை.! உழைப்பாகக்கூட இருக்கலாம் மனோ. இங்கே தையல் கடையில் வேலை செய்ய வந்த ஒருவர், இப்போ தையல் கடைக்கே முதலாளி. மலேசியரை விட அவருக்கு பிஸ்னஸ் ஜாஸ்தி. `தைக்க முடியல ஆள விடுங்க’ என்கிறார்.. நானும் கணக்கு பண்றேன், சராசரி ஒரு ஆளுக்கு ரவிக்கை ஒன்று தைக்க 35வெள்ளி வாங்குகிறார் என்றால், ஒரு நாளைக்கு எத்தனை ரவிக்கை தைப்பார்? ரவிக்கை மட்டுமா தைப்பார், மற்ற துணிகள், கூலி, வாடகை போனாலும்.. ம்ம்ம் மாதத்திற்கு? வருடத்திற்கு? ஓர் ரெண்டு ரெண்டு, ஈரெண்டு நாலு.. (வாய்ப்பாடு.. :P) நானும் மனக்கணக்கு செய்கிறேன்.. ஹஹ.

    ReplyDelete
  11. உண்மையான உண்மை...

    தங்களின் ஆதங்கம், வலி புரிகிறது...

    ReplyDelete
  12. தல நல்ல சொன்னிங்க நானும் என்னலாமோ செஞ்சு பார்த்துட்டேன் வயித்துக்கும் வாயிக்கும் தான் சரியாய் இருக்கு ஒன்னும் மிச்சம் பட மாட்டேன்குது

    ReplyDelete
  13. குழப்பம் தீர்க்கும் பதிவு
    வழக்கம்போல் ரசிக்கும்படியாக சுவாரஸ்யமாக
    சொல்லிப்போனவிதம் மனம் கவர்ந்தது
    பதிவுகள் தொடரவும் அடுத்தமுறை அவசியம்
    வீடி வாங்கி அம்மாவின் ஆசையை நிறைவேற்றவும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. நிஜம் இது தான் அண்ணாச்சி அவன் அவன் செய்யும் குழப்பங்கள் பலருக்கு புரியாது ஆனால் வெளிநாட்டில் இருக்கின்றாய் ஒரு வீடு வாங்க துப்பு இல்லையா என்கின்றபோது கூனிக்குறுகும்  நிலைதான் அண்ணாச்சி .சூப்பரா உறைக்கும்படி சொன்னீங்க!

    ReplyDelete
  15. பலபேரின் மனசில் உள்ளதை அப்படியே சொல்லிட்டீங்க மனோ ..
    நிறைய பேரின் ஆதங்கம் இதுதான் ...

    ReplyDelete
  16. உண்மை நிலவரத்தை தெளிவு படுத்தி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  17. வணக்கம் மனோ.....

    நீண்ட நாள் கழித்து நல்ல பதிவு....
    வாழ்த்துக்கள்.........
    ஹி...ஹி...ஹி...

    ReplyDelete
  18. it is 100% correct

    ReplyDelete
  19. இக்கரைக்கு அக்கரை பச்சை ! இங்குள்ளவர்கள் ஐநூறு நூறுகளை நோட்டுகளை சர்வசாதரணமாக புழங்கும் போது வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தான் மலைத்து போகவேண்டும்.காலம் முழுவதும் உழைத்தால் கூட வீட்டை தவிர வேறு எதையும் மிச்சம் செய்ய முடியவில்லை . இங்குள்ளவர்கள் சாதரணமாக சாராய கடைக்கு மட்டும் குறைந்தது நூறில் இருந்து முன்ணூறு ரூபாய் வரை செலவளிகிறார்கள் இது எப்படி சாத்தியம் என்பது தான் தெரியவில்லை ?

    ReplyDelete
  20. நல்ல பகிர்வு மக்கா...

    கஷ்டம் தான்.

    ReplyDelete
  21. Arumaiyaana padhivu. Unmaiyai alagaga eduththuraiththirukkireergal. Pls visit my site: http://newsigaram.blogspot.com

    ReplyDelete
  22. அப்படியே மனசுல இருக்கறதை சொல்லிட்டீங்க....நல்ல பகிர்வு சகோ!!

    ReplyDelete
  23. உண்மைதான்.

    அதுவும் எங்க நாடுபோல மூச்சுமுட்டும் அளவுக்கு வரிகளை அடைச்சபிறகு என்ன மிஞ்சுது?

    பல்லைக்கடிச்சு நாலு காசு சேர்த்து பேங்குலே போட்டா.... அதுலே வர்ற வட்டிக்கும் வரி:(

    ReplyDelete
  24. அந்தேரியிலோ அல்லது விராரிலோ வீடிருப்பது அம்மாவிற்கு பெருமையில்லை, காலங்காலமாய் வாழுகின்ற ஊரில் என் மகன் கட்டிக் கொடுத்த வீடு என்ற பெருமை வேண்டும் விரைவில் செய்து கொடுங்கள்

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!