Saturday, January 14, 2017

சந்தோஷமான வெளிநாட்டு வாழ்க்கை 5...!



திருநெல்வேலி வந்ததும் போன் பண்ணுங்க மனோ"ன்னு ஆபீசர் சொல்லி இருந்தார், சரின்னு நானும் சொல்லிருந்தேன்...அப்படியே நெல்லை வந்துகிட்டு இருக்கேன் ஆபீசர்.... தங்கச்சி வீட்டுக்குப் போயிட்டு, மாலையில் நாம சந்திப்போம்ன்னு போகிற வழியில் சொல்லிகிட்டே நெல்லைக்கு பயணத்தை தொடர்ந்தேன்...
தங்கையின் வீடு.

பாளையங்கோட்டை சமாதானபுரம் தாண்டி தங்கையின் வீடு, போயி புதிதாக மலர்ந்த குழந்தையைப் பார்த்து சந்தோஷப்பட்டு, பேசிக் கொண்டிருந்தோம், குழந்தையை தொட்டிலில் போட்டிருந்தார்கள் இடுப்புக்கு கீழே துணி மட்டும் கட்டப்பட்டிருந்ததால் குழந்தை தூக்கம் வராமல் அங்கிட்டும் இங்கிட்டுமாக புரண்டு கொண்டிருந்ததை கவனித்த என் வீட்டம்மா...
 தங்கை மகள் காவ்யா"வுடன் என் மகள் ஜோய்.

குழந்தையை நன்றாக குளிப்பாட்டி சற்று இறுக்கமாக துணியைக் கட்டி மறுபடியும் தொட்டிலில் வைக்க...குழந்தை நிம்மதியாக தூங்கிற்று, ஏன்னு கேட்டதுக்கு, "தொட்டிலில் இப்படி உருண்டு புரண்டால் குழந்தைக்கு மேல் வலிக்கும்" என்றாள் மனைவி.

காலையில் காபி குடித்த நினைவு, அப்படியே குழந்தை காவ்யா, திவ்யா அருகில் அமர்ந்தவாறே கட்டிலில் தூங்கிப்போனேன், மத்தியானம் தங்கச்சி வீட்டில் மட்டன் சமையல் செய்து சாப்பிட அழைத்தும், மறுத்துவிட்டு தூங்கிப்போனேன், அம்புட்டு அயர்வு உடலிலும் மனசிலும்...

சாயங்காலம் வரைக்கும் ஆபீசர் மற்றும் விஜயன், நண்பர்கள் பலர் போன் செய்தும் நான் அயர்ந்து தூங்கியதால், தூங்கும் குழந்தைக்கு போன் சத்தம் டிஸ்டர்ப் ஆவதாலும், வீட்டம்மா போனை ஆஃப் செய்துவிட்டாள்...

ஆபீசர், மற்றும் ரமேஷ் சந்திரசேகர் சார், காளிமுத்து சார் மற்றும் பல நண்பர்கள் எனக்காக காத்திருந்துவிட்டு போன் எடுக்காததாலும்  நேரம் ஆகிவிட்டதாலும் கிளம்பி விட்டார்கள் என்று ஆபீசர் சொன்னார்.

ஒருவழியா சாயங்காலம் எழும்பி போனை ஆன் செய்தால், உடனே ஆபீசர் போன்...என்ன மனோ எம்புட்டு நேரமா போன் பண்ணிக்கிட்டு இருக்கோம், போன் ஆஃப் பண்ணி வச்சிருக்கீங்கன்னு அன்புடன் கடிந்து கொண்டார்...

நெல்லை ஆர் எம் கே வி"யில் குழந்தைகளுக்கு துணிமணி எடுக்கும் போது மறுபடியும் ஆபீசர் போன் "மனோ எங்கே இருக்கீங்க ?" பதில் சொன்னதும், சரி அங்கேயே இருங்க நாங்க அங்கே வந்து விடுகிறோம் என்றார், மனைவி குழந்தைகளை அவர்கள் வந்த ஆட்டோவிலேயே திருப்பி அனுப்பிவிட்டு நானும் மகேஷும் அங்கேயே வெயிட் பண்ணினோம்.

ஆபீசரும், நண்பர் குமரேசன் [செட்டியார்ன்னு நாங்க அன்பாக அழைப்போம்] வந்து, பக்கத்திலிலுள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றார்கள், ரமேஷ் சந்திரசேகர் சாருக்கு ஆபீசர் போன்ல லைன் போட்டு பேச செய்தார், கொஞ்ச நேரத்தில் காளிமுத்து சாரும் வந்து விட்டார், அமர்ந்து நலம் விசாரித்து ஆறுதல்கள் சொல்லி தேற்றி, மும்பை வடாபாவ் [[ஆமா திருநெல்வேலியிலேயும் கிடைக்குது] வாங்கி சாப்பிட தந்தார்கள்...
 குமரேசன் செட்டியார், நான், மகேஷ் மற்றும் காளிமுத்து சார்.[ஆபீசர் எடுத்த போட்டோ]

"மனோ, டின்னர் சாப்பாடு ஃபுல் கட்டு கட்டணும்ன்னா ரூம் போட்டுருவோம், நன்றாக அமர்ந்து சாப்பிடலாம், மிதமா சாப்பிடணும்ன்னா நல்ல ருசியான சாப்பாடு கிடைக்கும் ஹோட்டல் இருக்கு அங்கே போயிருவோம், வசதி எப்படின்னு நீங்களே சொல்லுங்க என்றார் ஆபீசர்....சாப்பிட அவ்வளவு விருப்பம் இல்லாததால் மிதமான சாப்பாடு ஹோட்டலுக்கே போவோம் என்றதும்...
குமரேசன் செட்டியார், நான், மகேஷ், ஆபீசர் [போட்டோ எடுத்தது காளிமுத்து சார்]

"சரி நீங்க போயிட்டு வாங்க நான் வீட்டுக்கு கிளம்புறேன், வெளியே சாப்பிட்டா என்னை வீட்ல குழம்பு வச்சிருவாங்க"ன்னு அலறி விடை பெற்றார் ஆபீசர் காளிமுத்து...எங்களை நெல்லை தமிழ்நாடு ஹோட்டலுக்கு அழைத்து சென்றார் ஆபீசர்...

சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே குருஜி"க்கும் கேசவன் பிள்ளை சாருக்கும் ஆபீசர் போனடித்து பேச வைத்தார்...அடுத்து...சுவாதி சுவாமி அவர்களுக்கும் போன் காண்டாக்ட் பண்ணிக்  கொடுத்தார் ஆபீசர்...அவர்களும் போனில் உருக்கமாக ஆறுதல் கூறினார்கள்...

மிதமான சாப்பாடு அன்லிமிட்டை தொடும் வரை ஆறுதலுக்கு போனில் நண்பர்களை அழைத்து பேச வைத்துக் கொண்டிருந்தார் ஆபீசர் என்னை...

சுகமாக வீடு வந்து சேர்ந்தால்...இங்கே ஒரு அலப்பறை...நண்பன் ஒருத்தனை போலீஸ் பிடிச்சு உள்ளே போட்டுட்டாங்கன்னு வீட்டு பொம்பளைங்க பீதியாக்கிட்டாங்கே...மகேஷ் எல்லாரையும் அமர்த்தி என்னை தூங்க அனுப்பிட்டான்...

அடுத்தநாள் காலை, பரபரன்னு எழும்பி ரயில்வே ஸ்டேஷன் ஓட்டம்...ஓடிப்போயி பிளாட்பாரத்தில் நின்ற பின்புதான் சற்று ஆசுவாசம்...கொஞ்ச நேரத்தில் ஆபீசரும் வந்துவிட்டார், வீட்டுக்கு வரவிருந்த ஒரு டாக்டர் விருந்தாளியை கொஞ்சம் பொறுத்து வரசொல்லிவிட்டு இங்கே வந்து விட்டார்...
நெல்லையில் வழியனுப்ப வந்த ஆபீசர், ஜோய், தங்கை மகள் திவ்யா மற்றும் நான்.

8.30 மணிக்கு அவர் வீடு போக வேண்டும், ரயில் தாமதமாக...பிளாட்பாரமும் சேன்ஜ் ஆக...ஆபீசரை கிளம்ப சொன்னேன், முக்கியமான மீட்டிங்...அப்படியே எங்களை வழி அனுப்பிவிட்டு சந்தோஷமாக கிளம்பி சென்றார் ஆபீசர்...
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ஆபீசரும் நானும்.

அடுத்து விஜயன் போன் "மனோ...ரயில்ல ஏரியாச்சா ? தட்கல் டிக்கெட் ஓகேதானே ? அப்போ ரிசர்வேஷன் டிக்கெட்டை கேன்சல் பண்ணிறட்டுமா ? என்று கிளியர் செய்து அவரும் போனில் வழியனுப்பினார்.

அம்மாவின் நினைவுகளை சுமந்த வண்ணம், என்னையும் ரயில் சுமந்து கொண்டு மும்பை நோக்கி விரைந்தது...
அம்மாவின் இறுதி யாத்திரை.

அம்மா மறைவுக்கு இன்று வரை என் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீரும் வரவில்லை, இன்னும் மனசு அதை நம்பவுமில்லை...வீட்டம்மா அடிக்கடி கேட்ட வண்ணமும் மற்றவர்களிடம் சொன்னதுமாக இருப்பாள்...

ஒரே ஒருநாள் இரவு இரண்டு மணிக்கு "அம்மா" என்று ஒரு அலறல் சத்தம் என்னிடமிருந்து வந்ததாக வீட்டில் சொன்னார்கள்...
அம்மா.....

அம்மா.... நீ பரலோகத்தில் உன்னை இரட்சித்த தேவனிடத்தில் இன்பமாக இளைப்பாறு... அங்கே... அதே பரலோகத்தில் ஆண்டவரையும் உன்னையும் தேடி... நானும் வருவேன்...காத்திரு எனக்காக...

எனக்கு ஆறுதல் அளித்த, உதவிகள் செய்த என் எல்லா உறவுகளுக்கும் நான் வணங்கும் தெய்வத்திற்க்கும் கோடானுகோடி நன்றிகளை மனமாரக் கூறிக் கொள்கிறேன் நன்றி நன்றி...

பயணங்கள் முற்றும்.




3 comments:

  1. அம்மாவின் நினைவுகளோடு தொடர்ந்து வாழ்க்கைப் பயணத்தினைத் தொடருங்கள் மனோ.....

    ReplyDelete
  2. உங்கள் மனபாரம் குறைய வேண்டுகிறேன்...

    ReplyDelete
  3. அம்மாவின் இழப்பு அதிக துயரம் தரும் ஒரு துன்பியல்! தொடர்ந்து வாழ்க்கைப் பயணம் தொடரத்தானே வேண்டும் அண்ணாச்சி.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!