Sunday, January 3, 2021
ஆட்டோ சங்கர் 1
By வரலாறு சுரேஷ்
#ஆட்டோ_சங்கர்
நாள் 1
தமிழகத்தை உலுக்கிய எத்தனையோ கொலை, கொள்ளை, கடத்தல் , பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கேட்டிருக்கிறோம். சமீப காலங்களில் அதனை பார்க்கவும் செய்கிறோம். நாகரீகம் நம்மை வாழ வைக்கும் என்கிற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு கணமும் கண்டு பிடிப்புகளோடும், ஆக்கங்களோடும் புதிய உலகை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது மனிதர்களின் வாழ்க்கை. ஆனால், நம்முடைய
நல்மனதுக்குள் ஆசைகளும் வஞ்சமும் நுழைந்து, போட்டியும் பொறாமையும் வளர்ந்து, சமூகத்தில் நம்முடைய நிலையை மோசமான ஒரு பதிவாகவே விட்டு செல்கிறது. அதற்கெல்லாம் காரணமாக அமைந்து விடுகிறது பேராசை. இந்த சம்பவங்களின் பின்னணியில் ஒரு எடுத்து காடடாக, 20ம் நூற்றாண்டில் ஒரு நபரை குறிப்பிட்டு சொல்ல முடியும் என்றால், சொகுசு வாழ்க்கைக்கும் சுகபோகத்துக்கும் ஆசைப்பட்டு கொலை கொள்ளை என களத்தில் இறங்கி அடித்து, சிறை கம்பிகளுக்கு முன்னே தூக்கிலிட்டு கொல்லப்படட ஆட்டோ சங்கரை தவிர வேறு யாரும் அத்தனை பொருத்தமாய் இருக்க மாடடார்கள். தமிழகத்தின் தலைநகரத்தில் தொடங்கி தேசத்தை உலுக்கிய ஆட்டோ சங்கரின் வாழ்க்கை வரலாற்றை பார்க்கலாம் வாருங்கள்...
1988ம் ஆண்டு மே மாதம் 9ம் தேதி சென்னை மந்தவெளியை சேர்ந்த மோகன், சம்பத், கோவிந்தராஜ் ஆகிய மூன்று இளைஞர்களை காணவில்லை என அவர்களது குடும்பத்தினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இங்கு தான் இந்த கதைக்கு ஆரம்ப புள்ளி எழுதப்பட்டது. காணாமல் போனவர்கள் வீடு திரும்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே அந்த புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதில் சம்பத், டெய்லர் தொழில் செய்து வந்தார். மோகன், பொதுப்பணித்துறையில் ஊழியராக இருந்தார். இவர்கள் இருவரின் நண்பர் கோவிந்தராஜ். இந்த மூவரும் காணாமல் போனது தொடர்பாக விசாரணை நடத்திய திருவான்மியூர் போலீசார், அவர்கள் மூவரும் பாலியல் தொழிலில் கொடிகட்டி பறந்த ஆட்டோ சங்கரின் வீட்டுக்கு கடைசியாக சென்றதை கண்டுபிடித்தனர். ஆட்டோ சங்கரின் வீட்டுக்கு இவர்கள் சென்றதை அறிந்த போலீசார் இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தினர். போலீஸாரின் விசாரணையில் கிடைத்த பல்வேறு தகவல்கள் தமிழகத்தை உலுக்கும் வண்ணம் இருந்தன.
இந்த சம்பவத்தில் காணாமல் போன மூன்று நபர்களும் கண்டுபிடிக்கப்பட்டார்களா எனும் கேள்விக்கு விடை தேடும் முன்பாக ஆட்டோ சங்கர் குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. 1980 ஆண்டு காலகட்டம் என்பது தமிழகத்தில் சாராய வியாபாரம் கொடி கட்டி பறந்த நேரம் என சொல்லலாம். அப்போதெல்லாம் மதுக்கடைகள் தனியார் வசம் இருந்ததால் மதுக்கடை நடத்துபவர்கள் அந்தந்த பகுதிகளில் குட்டி தாதாவாகவே வளம் வர தொடங்கியிருந்தார்கள். கோவில் திருவிழா தொடங்கி, கட்சி கூட்டம் நடத்துவது வரை இவர்களின் நன்கொடைகள் இல்லாமல் எதுவும் நடக்காது என்பதால் காவல் துறையினரை கையில் போட்டுக் கொண்டு சாராய வியாபாரத்தில் கோடி கோடியாய் கொடி கட்டிப்பறந்தனர். அந்த தொழிலில் ஈடுபட்டிருந்த பலரில் குறிப்பிட்டு சொல்லும் படியாக இருந்தவன் தான் சென்னை திருவான்மியூரை சேர்ந்த ஆட்டோ ஷங்கர். இவனை தெரியாதவர்கள் யாரும் இல்லை எனும் அளவுக்கு திருவான்மியூர் சுற்று வட்டாரங்களில் செல்வாக்கு பெற்றவனாகவும், பணபலம் படைத்தவனாகவும் இருந்தான் ஆட்டோ சங்கர்.
கௌரி சங்கர் எனும் இயற்பெயர் கொண்ட ஆட்டோ சங்கர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவன். சின்ன வயதிலேயே சென்னைக்கு வந்து டீ கடை வைத்திருந்தார் ஆட்டோ சங்கரின் தந்தை தங்கராஜ். இங்கு வந்த பிறகு வேலூரை சேர்ந்த ஜெயலட்சுமியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்தவன் தான் சங்கர். ஆனால் சில ஆண்டுகளிலேயே ஜெயலட்சுமி பிரிந்து சென்று வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த சூழலில் தான் சங்கர் தந்தையால் வளர்க்கப்பட்டான். சங்கருக்கு சிறு வயதிலேயே பணக்காரனாக வாழ வேண்டும் என்கிற ஆசை தொற்றி கொண்டுவிட்ட்து. அதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்ய தீர்மானித்திருந்தான். பியுசி வரை படித்திருந்த சங்கருக்கு அதற்கு மேல் படிப்பில் நாட்டமில்லாததால், ஆட்டோ ஓட்டும் நண்பர்களின் அறிமுகம் இருந்ததால், தானும் ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபடுவதென முடிவெடுத்தான். இப்படித்தான் சங்கரின் முன் கதை சுருக்கம் ஆரம்பிக்கிறது...
நாளை!!!!
Subscribe to:
Post Comments (Atom)
அப்பன் வளர்ப்பு தப்பாகிவிட்டதே!
ReplyDelete