Sunday, January 3, 2021

ஆட்டோ சங்கர் 3

By வரலாறு சுரேஷ் ஆட்டோ சங்கர் நாள் 3 என்ன செய்யலாம் என யோசித்த காவல் துறையினர், சங்கரின் நெருங்கிய நண்பர்களான ஆட்டோ மணி, பாபு, ஜெயவேல் உள்ளிட்டோரை மடக்கி விசாரணையை தொடர்ந்தனர். இவர்களை கண்காணிக்க பல்லாவரம் ஆய்வாளர் தங்கமணி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தான் விசாரணையில் மணியும், ஜெயவேலும் உண்மையை மறைத்து விட பாபு நடந்த அனைத்தையும் உளறி கொட்டினான். பாபு கூறியதை கேட்டு ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் காவல்துறை அதிகாரிகள். ஆட்டோ ஷங்கருடன் இணைந்து சம்பத், மோகன், கோவிந்தராஜ் உள்ளிட்ட 5 பேரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டான் பாபு. எதிர்பார்க்காத இந்த பதிலை கேட்டு தூக்கிவாரி போட்டது போலீசாருக்கு. பாபுவின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு சென்னை திருவான்மியூர் பெரியார் நகர் பகுதியில் உள்ள தெனாலி கால்வாய்க்கு அருகே இருந்த பெரிய குடிசை வீட்டுக்குள் நுழைந்தனர் போலீசார். தோண்ட தோண்ட வரிசையாக அழுகிய நிலையில் 3 பிணங்களை கண்டெடுத்த போலீஸாருக்கு தலை சுற்றியது என்றே சொல்லலாம். இதுமட்டுமல்லாமல், அருகேயிருந்த குடிசை வீட்டின் பின்புறமும் தோண்டும் படலம் தொடர்ந்தது. அங்கேயும் ஒரு பிணம். ஒரே நாளில் 4 சடலங்கள் தோண்டி எடுக்கப்படட சம்பவம் செய்திகளில் பரவ தமிழகம் பரபரப்பாகியது. இது தொடர்பான விசாரணையில் சம்பத், மோகன், கோவிந்தராஜ் மட்டுமல்லாது மேலும் இருவர் கொல்லப்பட்டதில் ஒருவர் ஆட்டோ ஓட்டுநர் ரவி என்பதும் மற்றொருவர் பாலியல் தொழிலுக்கு பெண்களை கொண்டு வரும் சுடலை என்பதும் தெரிய வந்தது. மேலும் 4 பேரை புதைத்துவிட்டு சுடலையை எரித்து கடலில் கரைத்து விட்டதாகவும் தெரிவித்தனர். இந்த வழக்கில் கடந்த 1988ம் ஆண்டு ஆட்டோ சங்கரும் அவனுடைய தம்பி மோகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இவர்களையும் சேர்த்து 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உயிரிழந்த நிலையில், அவருடைய மனைவி ஜானகி தலைமையிலான ஆட்சியும் பெரும்பான்மையின்றி ஆட்சி கவிழ்ந்து தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அந்த தருணத்தில் தான் இதுபோன்ற கொலை சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால் இதுகுறித்து உடனே விசாரிக்கும் படி ஆளுநர் பி.சி.அலெக்ஸ்சாண்டர் உத்தரவிட்டார். இந்நிலையில், சங்கரின் நண்பர்களில் ஒருவரான பாபு அப்ரூவராக மாறிவிட, அடுத்த கட்ட விசாரணையை தொடங்கினார்கள் போலீசார். சங்கரின் மனைவியிடமும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களிடமும் விசாரணை நடைபெற்றது. பிணங்களை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சங்கரின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட அவனுடைய டயரியில் அரசியல் புள்ளிகள், காவல் அதிகாரிகள் உள்பட பலருக்கு பணம் கொடுத்த விவரங்கள் தெரிய வந்தன. தன்னுடைய காதலிகளோடு சங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களோடு அவனுடைய மெத்தையில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், கடைசி வரையிலும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது தொடர்பான உண்மைகள் வெளியில் வராத வண்ணம் பார்த்து கொண்டனர் போலீசார் என கூறப்படுகிறது. சங்கரும் அவனுடைய தம்பியும் இணைந்து தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து 6 பேரை கொலை செய்ததில் 6ஆவதாக கொலை செய்யப்பட்டவர் சங்கரின் 4 வது மனைவி லலிதா. அப்போது, சங்கருக்கு நிறைய காதலிகள் இருந்தனர். சங்கர் தன்னுடைய காதலிகள் மற்றும் மனைவிகளின் பெயரை உடம்பில் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது லலிதா காணாமல் போனது குறித்தும் போலிஸாருக்கு சந்தேகம் எழுந்தது. ஆனால், சங்கர் மீதான கொலைக்கு குற்றங்களுக்கு பயந்து லலிதா தலைமறைவாகி இருக்கலாம் என முன் அனுமானத்தில் அதனை கவனிக்காமல் விட்டிருந்தனர். ஆனால், லலிதாவும் கொலை செய்யப்பட்டார் என்கிற உண்மை விசாரணையின் பின்னரே தெரிய வந்தது. திருவான்மியூர் பெரியார் நகரில் உள்ள அம்மன் கோவிலுக்கு அருகேயுள்ள வீட்டில், சமையலறையின் கீழே , நிர்வாண கோலத்தில் லலிதா புதைக்கப்பட்டது சங்கரின் தம்பி அளித்த வாக்குமூலத்திற்கு பின்னரே தெரிய வந்தது. பெங்களூரை சேர்ந்த லலிதா, தூத்துக்குடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுடலை, திருவான்மியூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரவி, மந்தவெளியை சேர்ந்த சம்பத், பொதுப்பணித்துறை ஊழியர் மோகன், மந்தைவெளி கோவிந்தராஜ் ஆகிய 6 பேர் சங்கரின் பண மோகத்தால், பெண்கள் மீதான காமுக சிந்தனையாலும் கொல்லப்பட்டார்கள். இது தொடர்பான விசாரணையில் 6 பேரையும் கொன்றது குறித்து விலாவரியாக தெரிவித்திருந்தான் சங்கர். நாளை....

1 comment:

  1. திகில் டயரிக்குறிப்புக்கள் .

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!