Monday, January 9, 2017

சந்தோஷமான வெளிநாட்டு வாழ்க்கை 2...!என் வேதனைகளையும் அம்மாவின் நினைவுகளையும் சுமந்து விமானம் இந்திய மண்ணில் [மும்பை] தரையிறங்கியது, இதே லீவு நேரங்களில் ஜன்னலோர இருக்கை கிடைத்து விட்டால் சிறு குழந்தைபோல மனசு சிலாகிக்கும்...மும்பையில் விமானம் தரையிறங்கும் போது மனசு வானத்தில் பறக்கும்...இந்த முறை ஜன்னல் பிளாஸ்டிக் மூடியை நான் திறக்கவேயில்லை, பக்கத்திலிருந்தவர்கள் மனதில் திட்டி இருக்கலாம், இரண்டும் பெண்கள்...

கஸ்டம்ஸில் பெட்டி ஓப்பன் செய்ய சொல்லி, கொண்டு போன 2 எமர்ஜென்சி லைட்கள் சோதிக்கப்பட்டன, டாக்ஸ் கொடுக்க வேண்டும் என்கிறார்கள், 1200 ஓவா பொருளுக்கு டாக்ஸ்சாம், "அப்பிடியே உடைத்து குப்பையிலே போட்டாலும் போடுவேனே தவிர 5 பைசா தரமாட்டேன்"ன்னு நான் சொன்ன ஸ்லாங் கண்டிப்பா அந்த ஆபீஸருக்கு புரிஞ்சிருக்கும் போல, ஜஸ்ட் செக்கிங் பண்ணிட்டு தருகிறோம்ன்னு உள்ளே கொண்டு போயி செக் பண்ணிட்டு, ஸாரி சொன்னார் அதிகாரி.

சரி இனி பணம் மாற்றலாம்ன்னு அங்கேப் [எக்ஸ்சேஞ்]  போனால் ஏழரை சனியன் அங்கே நட்டகுத்த நின்னு ஆடுச்சு, வேணாம்ன்னுட்டு ஏ டி எம் போனால் 2000 ஓவா மட்டுமே கிடைத்தது...மோடியை ஆசீர்வதித்துவிட்டு வெளியே வந்தால்...என் குடும்பம் எனக்காக வெயிட்டிங்...ஓடி வந்து அணைத்துக் கொண்டனர், அழுகை முட்டினாலும் அடக்கிக்கொண்டு அவர்களுடன் வீடு நோக்கி சென்றேன்.

அங்கே [மும்பை] போனாலும் மனது நம்ம ஊரை நோக்கி... பிறந்த மண்ணை நோக்கி, அம்மாவை நோக்கியே விரைந்து கொண்டிருந்தது...

5 வருஷமாக ஊருக்கு போகாமல் சாக்கு சொல்லி வந்த [வீட்டம்மா] குடும்பத்தை தூக்கிட்டுப் போகணுமே...அவர்கள் நான் மட்டுமே ஊருக்கு போவேன்னு நினைத்தார்கள் போலும், நிறைய பேசிய பின்னரும் மசியாமல் வீட்டம்மா சம்மதித்தாலும், பிள்ளைகளுக்கு லீவில்லை, என்ன செய்யலாமென்று சிந்தனை...

நண்பன் கிருஷ்ணாவையும் மற்றும் நண்பர்களையும் சந்திக்க கிளம்பினேன், நண்பனிடம் விஷயத்தை சொன்னேன், "அண்ணே என்கிட்டே ஐடியா இருக்கு இருங்க இப்பவே அண்ணிக்கு போன் பண்ணுறேன்"ன்னு, போன் பண்ணி அலற வச்சபின்,  மகள் மட்டும் கூட வருவதாக வீட்டம்மா ஒப்புக்கொண்டாள், எனக்கும் அதுதான் வேண்டும், மகனிடம் கேட்டால் லீவுக்கு ஊருக்கு போறேன் டாடி பிளீஸ் என்றான், ஓகே என்றதும் மூன்று பேருக்கும் கிருஷ்ணா நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தட்கலில் புக் செய்து வழியனுப்பினான்.

ரயில் பயணம்...அதுவும் இரண்டுநாள் பயணம்...முதலில் ஆர்வமில்லாமல் இருந்த மகள்...ரயில் கர்ஜத் தாண்டியதும் மலைகள் குகைகள் கண்டதும் பயங்கரமாக உற்சாகமாகி விட்டாள், அந்த உற்சாகம் மனைவியையும் பிடித்துக் கொள்ள, சந்தோஷமாகி விட்டார்கள்...நான் அம்மாவின் நினைவுகளை சுமந்து வந்து கொண்டிருந்தேன்...விபரம் தெரிந்து மகள் என் ஊருக்கு வருவது இப்போதுதான் !

சீவலப்பேரி, கரிசல்மண் சொந்தக்காரி,  ஏன் என் மனைவிக்கு ஊருக்கு வர விருப்பமில்லை ? இதற்கும் ஒரு கசப்பான காரணமுண்டு அவர்கள் குடும்பத்திற்குள், அடுத்து அவள் பிறந்து வளர்ந்தது மும்பையில்...அப்படியே மொத்த குடும்பமும் ஊர் போக்குவரத்து இல்லாமல் அங்கேயே ஒதுங்க...எங்கே நான் இவர்களை ஊரில் கொண்டுபோய் வைத்துவிடுவேனோ என்ற பயம்... [அவங்க வீட்டார் ஏற்படுத்திய பீதி அது] அதனால் குழம்பி என்னையும் குழப்பி நடந்த பிரச்சினைகள் ஏராளம்...அடுத்து இன்னொரு பயம், ஊருக்கு வந்தால் எனது சொந்தங்கள் கேள்வி கேட்பார்கள் அல்லவா ? ஏன் ஊரில் வந்து செட்டில் ஆக மாட்டேன் என்கிறாய் ? என்று... பயம் பயம்...

எப்படியோ.... ரயில் வேகம் பிடித்தது நாகர்கோவில் நோக்கி....

தொடரும்...


3 comments:

  1. தொடருங்கள். தொடர்வோம்.

    ReplyDelete
  2. ம்... அனைவரையும் சமாளிக்க வேண்டும்...!

    ReplyDelete
  3. ம்ம்ம்... பல சமயங்களில் நாம் சூழ்நிலைக் கைதிகள் தான்....

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!