Monday, July 23, 2018

மனம் நிறைவான ஊர் பயணம் 8...!


காலையில பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துரு நான் ஒன்பது மணிக்கெல்லாம் திருநெல்வேலியிலிருந்து வீட்டுக்கு வந்துருவேன்னு வீட்டம்மாகிட்டே சொல்லிருந்தாலும், வீட்டு சாவியும் என்னிடமிருந்தது, இரவு சரியாக தூக்கம் வரவில்லை, எப்படா விடியும்ன்னு காத்திருந்து...

காலையிலேயே ஆபீஸருக்கு போன் போட்டு, சீக்கிரமா கிளம்புறேன்னு அவரை அலற வச்சு...காலையிலேயே ஆபீசர் ஜம்மென்று வந்துவிட்டார் ஹோட்டலுக்கு...அதற்குள்ளாக குளித்து முடித்து நானும் தயாராக, இனிதே திருநெல்வேலி பேரூந்துநிலையத்தில் வழியனுப்பி விட்டார் ஆபீசர், நான் எம்புட்டோ சிரமம் கொடுத்தாலும் ஒரு தாயைப்போல தாங்கிக்கொண்டார் ஆபீசர்...[மறுபடியும் மிக்க நன்றி ஆபீசர்...]

ஒன்னாம் தேதி மும்பைக்கு டிக்கெட் போட விஜயனும் நண்பன் கூடல்பாலாவும் முயற்சியில் [சீசன் டைம் என்பதால் டிக்கெட் எளிதாக கிடைக்காது] இருக்க...அதே ஒன்னாம் தேதி ஆஸ்வின் ஸ்டான்லி அக்கா குஜராத்திலிருந்து ஊர் வருவதாக விஜயன் பீதியை கிளப்பினார்.
எப்பிடியாவது அக்காகிட்டேயிருந்து தப்பிரலாம்ன்னு [இம்சை அரசன் பாபுவும்தான், ஆனால் விதி வலியது] நினைச்சா...ஒன்னாம் தேதி டிக்கெட் கிடைக்கலை, அண்ணே ரெண்டாம் தேதிதான் கிடைக்கும்ன்னு கூடல்பாலா சொல்ல...ஒன்னாம் தேதி அக்காவை சந்திக்க முடிவெடுத்தேன்.[மிக்க நன்றி கூடல்பாலா...]

 அக்கா வந்தாச்சுன்னு விஜயன் போன் வந்ததுமே நான் கிளம்பினாலும்...பஸ்ஸுக்கு நேரமாகிவிட்டது, அக்கா ஐந்து மணிக்கு வெளியூருக்கு டூர் போறாங்க சீக்கிரமா வாரும் ஓய்ன்னு விஜயன் மிரட்டல் வேறு...எங்க ஊர் கோவில் [சாமிதோப்பு பதி] திருவிழா நடந்து கொண்டிருந்ததால் கூட்டம் கூடுதலாக இருந்தது...

அடிச்சுப்பிடிச்சு [விஜயன் ஆபீஸ் முன்புதான் பஸ்டாப்பும் இருக்கு] வந்தால் ஆபீசில் விஜயனில்லை அவர் முதலாளியம்மாதான் இருந்தார், விஜயன் எங்கென்னதும் அவர் ஆஸ்வின் அக்கா தங்கியிருக்கும் ஹோட்டலில் இருக்கிறார் என்றதும், விஜயனுக்கு போன் பண்ணி இதோ நான் வடசேரிக்கு பஸ் பிடிச்சு வருகிறேன்னு பஸ்ஸுக்கு காத்திருக்க...இருங்க மனோ இதோ நானே வந்து உம்மை பிக்கப் பண்ணுறேன்னு பறந்து வந்தார்.
வடசேரி பேருந்து நிலையம் அருகில் சஹானா கேஸ்டில் ஹோட்டலில் அக்காவும் நண்பர்களும் இருந்தார்கள்...தோவாளை பக்கமாக டூர் புரோகிராம் போல, அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.
ஆளு வாட்டசாட்டமான ஆறரையடி உயரம்ன்னு நினைச்சா...ஆளு நேரெதிரா இருக்க சற்று அதிர்ச்சி...விஜயன் மகள் மோனிஷா அக்காவோடு நெருக்கமாக ஒட்டிக்கொண்டு இருந்தாள், அக்கா ஊர்வந்தால் அவளுக்கு செம ஜாலின்னு விஜயன் சொன்னார், அக்காவோடு அவர் நண்பர்களும் வந்திருந்தார்கள்...அவர்களையும் அறிமுகப்படுத்தினார்.
ஆஸ்வின் அக்கா...மாங்குரோவ் காடுகளின் ஆராய்ச்சியாளர் மற்றும் விஞ்ஞானி, கன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடி மாங்குரோவ் காட்டு மத்தியில் ஆராய்ச்சியின் போது !

வந்திருந்த நண்பர்கள் அனைவருமே செம ஜாலி டைப், உலகம் சுற்றும் பறவைகள்...!
அக்காவின் நண்பர்களோடு விஜயனும் நானும் மோனிஷாவும்...சுட சுட எங்க ஊர் ஸ்பெஷல் தேன்குழல் மிட்டாயுடன் அக்கா !

நேரமாகிவிட்டதென்று அவர்கள் கிளம்ப தயாராக...சரி இன்னொரு முறை சாவகாசமாக சந்திக்கலாமென்று பிரியா விடை கொடுத்து, ஹோட்டலிலிருந்து  அவர்கள் எங்களை அனுப்பினார்களா ? இல்லை நானும் விஜயனும் அவர்களை அனுப்பினோமான்னு இப்போவும் கன்பியூசாத்தானிருக்கு...
சஹானா கேஸ்டில் ஹோட்டல் முன்பு லேசான மழை தூறல்களுடன்...

ஏன்னா அவர்களை அனுப்பும்போதே மழை லேசாக தூறி...அவர்கள் கிளம்பியதும் வேகமெடுத்து அடி பின்ன தொடங்கியது...ஆகவே நானும் விஜயனும் மறுபடியும் ஹோட்டல் லாபியில் வந்து அமர்ந்து கொண்டோம்...விஜயன் ஆபீஸருக்கு போன் செய்து விஷயங்களை பேசிக்கொண்டிருந்தார்.
அக்காவுடன் மோனிஷா...

மழை லேசாக ஒய்வு பெறவும்...மறுபடியும் விஜயன் ஆபீசுக்கு வந்து சேர்ந்தோம்...மும்பை டிக்கெட் எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு ஊருக்கு கிளம்புமுன்...எல்லோரையும் பார்த்தாச்சு நம்ம இம்சை அரசன் பாபுவை மட்டும் பார்க்க முடியவில்லையென்று விஜயனிடம் சொன்னேன், உடனே போன் போட்டார் இம்சைக்கு...

மனோ அண்ணே போயிறாதீங்க கரெக்ட்டா ஆறுமணிக்கு அங்கே இருப்பேன்னு சொன்னார், பஞ்சுவாலிட்டி ஆளு போல, இன்னும் அரைமணி நேரம்தானே  இருக்குன்னு காத்திருந்தோம்...

"பஞ்சுவாலிட்டியை" பதம் பார்த்துட்டு வந்து சேர்ந்தார்...அவர் வந்தது பெரிய விஷயமில்லே...மறுபடியும் அன்றே ஆஸ்வின் அக்காகிட்ட [அவரும்] மாட்டி அலப்பறையாவோம்ன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கவேயில்லை மூவரும்...

தொடரும்...

போட்டோக்கள் அக்காவிடமிருந்தும் விஜயனிடமிருந்து சுட்டது !

Monday, July 16, 2018

மனம் நிறைவான ஊர் பயணம் 7...!


சுகர் செக்கப் முடிந்ததும், குமரேசன் செட்டியாரும் வீட்டிற்கு கிளம்பி  விடைபெற்றார் [வீட்டம்மாவுக்கு பயந்துதான், இரவு நேரமாகி விட்டதால்] நானும் ஆபீசரும் சந்திரன் என்னும் நண்பனை பார்க்கக் கிளம்பினோம்.

இடையில் ஆபீசரின் வீட்டிலிருந்து போன் வர, மனோ வந்துருக்கார் கொஞ்ச நேரம் கழிச்சு வாரேன்னு [அண்ணியேதான்] சொல்லிட்டு கிளம்பினா...நம்ம நண்பன் சந்திரனை நெல்லை சிட்டிக்குள்ளே காணோம், போன் பண்ணி விசாரிச்சா...ஆளு அவுட்டாஃப் சிட்டிலன்னு தெரிஞ்சுது.
ஓகே, எதுக்கும் சாப்பாட்டுருவோம்ன்னு நெல்லை சிட்டியை சுற்றி ஒரு நட்சத்திர ரெஸ்டாரண்டுக்கு கூட்டி சென்றார் ஆபீசர், சுட சுட சாப்பிடலாம் மனோ என்றார், அங்கே வந்த மானேஜர் ஆபீசரைக் கண்டதும் பவ்வியமாக வணக்கம் வைத்தார்.

ரெஸ்டாரண்ட்.... இரவு டெக்கரேஷன் அருமையாக இருந்தது, மிதமான லைட் வெளிச்சம், குடும்பமாக அமர்ந்து சாப்பிட வசதிகள், மிதமான சாதத்தில் பாடல், லைட்டிங் என அருமையாக இருந்தது !

இங்கே அமர்ந்து சாப்பிட வேண்டாம் ஆபீசர், பார்சல் வாங்கி செல்லலாம் என்று சொன்னதும் ஆபீசரும் ஓகே சொல்ல, மேனேஜரிடம் சாப்பாடு ஆர்டர் கொடுத்து காத்திருந்தோம், அதற்குள் மானேஜர் ஹோட்டல் முதலாளிக்கு ஆபீசர் வந்திருக்கும் விஷயத்தை சொல்லிருப்பார் போல...பதறியடித்து வந்தேவிட்டார்.
நலன்கள் விசாரித்துவிட்டு சாப்பாடு கொடுத்தனுப்பினார், கிளம்பும்போது அவர், திரும்பவும் வருக என்ற ரீதியில் ஒரு வணக்கம் வைத்தார், எப்பிடின்னு கடேசியா சொல்றேன்...

நேரமாகிக் கொண்டிருந்த படியால்...சந்திரன் வீட்டுக்கு போயிருக்க கூடும் என்ற ஐயத்தில், அவர் எங்கேயிருப்பார் என்று செட்டியாருக்கு போன் பண்ணிக் கேட்டார் ஆபீசர்...அவர் அவுட்டாஃப்  சிட்டியில் இருக்க, விரைந்தது வாகனம்.
ஒன்பது மணி இரவில் புறநகர் [சிட்டிதான்] சாலைகளில் வாகனங்கள் வந்து போனாலும் ஆள் நடமாட்டம் ரொம்பவே குறைவுதான் ! சின்ன சின்ன ரோடுகளில் ஸ்பீட் பிரேக்கர்களின் தொடர் ஜம்பிங்...கொஞ்சம் கஷ்டம்தான்.

அத்தனை இரவிலும் ஆபீசர் ஹெல்மெட் போட்டுட்டுதான் பைக்கை செலுத்திக் கொண்டிருந்தார் ! என்னை சந்திரனை பார்க்க சொல்லிவிட்டு, இப்போ வாரேன்னுட்டு, அவர் வீடு நோக்கி விரைந்தார், காரணம்... நேரமாகிவிட்ட படியால்...வீட்டம்மா பெர்மிஷனுக்காக ஓடிருப்பார்ன்னு நினைக்கிறேன்.
மறுபடியும் என்னை பிக்கப் பண்ணி, அவர் புக் செய்த ஹோட்டல் ஏசி அறைக்குள் கொண்டு வந்து விட்டார்...]நெல்லை பேருந்து நிலையத்திற்கும் ஆபீசர் வீட்டுக்கும் நடுவில்] திடீரென வாழைப்பழம் சாப்பிட ஆசை வந்தபடியால் அவரே வெளியே போயி வாங்கி வந்தார்...கருப்பு கலர் அண்டாத மஞ்சள் கலர் பேயன் பழம், பழுத்து இதமாக இருந்தது...!
சாப்பிட வாழையிலை ஆபீசர் ஆர்டர் பண்ணினார் பாருங்க...அடடா...கொழுந்து வாழையிலை...பவ்யமாக கொண்டு வந்தார் சர்வர்...[அரபிங்க பார்த்தால் வெஜிடபிள் சலாட்ன்னு நினைச்சு தின்னுருப்பாங்க] அம்புட்டு இதமான வாழையிலை...
சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்போது, சுகர் செக்கிங் லேப்பில் இருந்து ஆபீஸருக்கு மெசேஜ் வர...அதிர்ந்து போனார் ஆபீசர்..."மனோ...சுகர் 217 பாயிண்ட் இருக்கு, உடனே மருந்து எடுக்க வேண்டும்" என்றார்..."ஆயுர்வேதிக் மருந்து எடுக்கலாமென்றேன், "இல்லை ஒரு மாசமாவது நீங்கள் ஆங்கில மருந்து சாப்பிட்டே ஆகவேண்டும் இல்லேன்னா கிட்னி சட்னியாகிரும் "என்று கூறிவிட்டு மெசேஜை விஜயனுக்கு ஃபார்வேர்ட் பண்ணிவிட்டார்...[கலவரப்படுத்திட்டாங்க அவ்வ்வ்]
பின்பு...நண்பர்கள் பற்றியும் குடும்பம் பற்றியும் நெல்லை நிலவரங்கள் பற்றியும் [சில வெளியே சொல்ல முடியாத] நெல்லையில் கிரைம் நிலவரங்களை சுவாரஸ்யமாக விவரித்துக்கொண்டே இருந்தார்...நேரமாகிக் கொண்டிருந்தபடியால் சீக்கிரம் கிளம்பு வேண்டியதாப்போச்சு. [அடுத்த முறை லீவு நாள் பார்த்து போகவேண்டுமென்று அப்போவே மனதில் பட்டது]
காலையில் வருவதாக கூறி விடை பெற்றார்...மிக்க நன்றி ஆபீசர்...

அந்த வணக்கம் பற்றி சொல்லணுமில்ல ? [ஆபீசரிடமே கேட்டேன் ]பெரிய மனிதர்கள் சந்தித்து பிரியும் போது, வலது கையை நெஞ்சில் வைத்து சற்று குனிந்து வணங்கி விடை கொடுப்பதை அவதானித்தேன், அந்த நெல்லை மக்களின் பண்பை பார்த்து நெகிழ்ந்து போனேன்...

தொடரும்...

படங்கள் யாவும் கூகுள் அண்ணாச்சி தந்தது.


Sunday, July 8, 2018

மனம் நிறைவான ஊர் பயணம் 6...!

கல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்ல நகைச்சுவை பேச்சில் லயித்துப்போனேன்...கல்யாணம் மிக சிறப்பாக குடும்பமாக நடந்தது, பஹ்ரைனில் இருந்தும் சொந்தங்கள் வந்திருந்தார்கள்...!

கல்யாணம் முடிந்து சாப்பாடு தொடங்கியதும் என் அத்தான் ஒருவர் டேபிளும் சேரையும் எடுத்துப்போட்டு, உக்காந்து மொய் எழுது மனோ"ன்னு உக்கார வச்சிட்டுப் போயிட்டார், நான்கைந்து பந்திகள் கடந்ததும் இன்னொரு மச்சினனை அங்கே உக்கார வச்சிக்கிட்டு நான் சாப்பிட போயிட்டேன்...

சாப்பாடு பிரமாதம், பாயாசமும், மோரும் அடடா...நெல்லை மாவட்ட கல்யாண வீட்டு சாப்பாடுன்னாலே நான் ஜெர்க்காவதுண்டு, இனி தைரியமா சாப்பிடலாம்.
மணமக்களை வாழ்த்திவிட்டு, வீட்டம்மா பெர்மிஷனோடு கிளம்பினேன் நெல்லைக்கு.... அடுத்து ஆபீசர் திருநெல்வேலியில் வெயிட்டிங் பண்ணிட்டு இருக்காரே...

கல்யாணம் முடிந்து மணமக்கள் மற்றும் பெண்வீட்டார் மறுவீடு [சங்கரன் கோவில்] காண புறப்பட...நானும் நெல்லை நோக்கி கிளம்பினேன்....சீயோன் மலையில் இருந்து பஸ்ஸில்தான் கிளம்பினேன், ஆட்டோ கூட்டி வந்த வழி வேறு, பஸ் வந்த வழி வேறு, வள்ளியூர் வந்து சேர ஒன்னரை மணி நேரம் ஆகிற்று...கிளம்பிட்டேன்னு ஆபீஸருக்கு போன் செய்து விட்டு, சார்ஜர் தீர்ந்ததால்...நெல்லை போயி ஆன் பண்ணலாம்ன்னு ஆஃப் செய்து வைத்துவிட்டேன்...பஸ்ஸின் நான்கு கால்களும் ரோட்டுக்கு வெளியே ஓடும்படி ரோடு போட்டு வச்சிருக்காங்க, உள்ளே இருக்கவன் சட்னி ஆகித்தான் வரணும் வெளியே... அம்புட்டு மேடு பள்ளம், சட்னி இடியாப்பமாகித்தான் வள்ளியூர் வந்திறங்கினேன்.

அங்கிருந்து திருநெல்வேலி பயணம், மழை மேகங்கள் அடிக்கடி இப்போ பெய்யட்டுமா அப்புறமா பெய்யட்டுமான்னு அடம் பிடிச்சிட்டே இருந்துச்சு.
திருநெல்வேலி பழைய பஸ்டாண்ட் அருகில் பழைய ஜன்னத் ஹோட்டல் பின்னாடி ஒரு பேப்பர் கடை இருக்கு, அங்கே நில்லுங்க என்று ஆபீசர் கூறியபடி நின்று கொண்டு, [நண்பர் திவானின் அப்பா கடைதான் அதுன்னு அப்புறமாத்தான் ஆபீசர் சொன்னார்] நெல்லை பழைய பேருந்து நிலையத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். ஜன்னத் ஹோட்டல் இப்போது வேறு  பெயரில் நடந்து கொண்டிருக்கிறது, நண்பர் திவானை காண முடியாமல்தான் வந்தேன்.

அதற்கிடையில் ஆபீசரும் வந்துவிட, " கொஞ்சம் வர லேட்டாகிருச்சு மனோ, எங்கள் வயதான உறவுக்காரர் ஒருவரை வழியனுப்ப ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் போக வேண்டியதாயிற்று என்று கரம் பிடித்து அழைத்து சென்றார்.
ஐந்து வருடம் முன்பு பார்த்த பழைய திருநெல்வேலி பேருந்து நிலையம், சற்று மாறியிருக்கிறது, ஜென்னத் ஹோட்டல் பெயர் மாறி இருக்கிறது, அன்பு நண்பர் திவானின் கல்தோசை சாப்பிட்ட இடம், பதிவர்களுக்கு ஆபீசர் தேளி மீன்கறி விருந்து வைத்த ஹோட்டலாச்சே, ஆபீசரை நண்பர்கள் யார் பார்க்க வந்தாலும் அது ஒரு சந்திப்பு இடமாக இருந்த நினைவுகள் எப்போதும் மறக்காதே ?!
நேராக ஆபீசர் கூட்டிப்போனது நண்பர் சுதன் ஹோட்டலுக்கு...அங்கே முன்பு விபத்தில் சிக்கி தப்பி பிழைத்த நண்பரை நலமாக சந்தித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது, அதைவிட சந்தோசம் சுதனின் அம்மா கேஷியர் இடத்தில் அமர்ந்திருக்க...சுதன் உதவியாளராக ஓடிக்கொண்டிருக்க...ஆஹா...இதைவிட சொர்க்கம் உலகில் ஏது !...[சுதன், இந்த நாட்களை கொண்டாடி விடுங்கள், வாழ்க்கையில் கிடைக்கும் இந்த சந்தோசம் எங்கும் உலகில் கிடைக்காது]

என்னைப்பார்க்க குமரேசன் செட்டியார், ஆபீசர் காளிமுத்து அவர்களும் வந்திருந்தனர், நான்குபேரும் ஹோட்டலில் அமர்ந்து அளவலாவிக் கொண்டிருந்தோம், அவித்த கொண்டைக்கடலை பரிமாறப்பட்டது, அது ஒரு புதுவித ருசியாக இருந்தது...
சுதன் வேலையில்  பிசியாக இருந்தாலும் எங்களருகில் அடிக்கடி வந்து பேசிக்கொண்டிருந்தார், அவங்க அம்மாதான் பெண் சிங்கம் போல அமர்ந்திருந்து என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார், எங்கே மகனை கடத்திட்டுப் போயிருவோனோன்னு...!

வீட்டம்மாவிடம் வாங்கி கட்டிக்க முடியாதுன்னுட்டு ஆபீசர் காளிமுத்து சார் விடை பெற, சுதனிடமும் விடைபெற்று கிளம்பினோம், திடீரென செட்டியாரும், ஆபீசரும் என்னமோ பிளான் பண்ணினாங்க..."அதோ அந்தா இருக்கு, இதோ இந்தா இருக்கு, எனக்கு தெரிஞ்சவர்தான், எனக்கும் தெரியும்"ன்னு பேசிகிட்டு வந்தாங்க...

என்ன ஆபீசர்ன்னு கேட்டேன், சுகர் செக் பண்ணுறீங்களா என்று கேட்டார், அது மும்பை போயி பண்ணிக்கிறேன் ஆபீசர் என்றேன், "இல்லை இப்போவே பக்கத்துல ஒரு சுகர் செக்கிங் லேப் இருக்கு வாங்க, இப்போவே ரிசல்ட்டும் சொல்லுவாங்க, இன்னும் அட்வான்டேஜ் என்னான்னா...மூன்று மாதங்கள் முன்னதான சுகர் அளவும் தெரிஞ்சிரும்"ன்னு வலுக்கட்டாயமாகத்தான் செட்டியாரும் ஆபீசரும் அழைத்து சென்றார்கள்.
ஆஹா...மாட்டிக்கிட்டோமேன்னு பிளட் கொடுக்க...கொஞ்ச நேரத்திலேயே ரிசல்ட் வந்துரும்ன்னு சொல்லியனுப்பினார் லேப் காரர், பீஸும் என்னை குடுக்க விடாமல் ஆபீசர் கட்டாயமாக கொடுத்துவிட்டார்.

வெளிநாட்டிலிருந்து ஊருக்கு [மும்பை] வந்ததும் வீட்டம்மா, இந்தமுறை சுகர் செக் பண்ணிட்டுப் போங்கன்னு செல்லமா சொன்னாங்க, விஜயனும் செக் பண்ண சொல்லிட்டு சுகரின் பாதிப்புகளை சொல்லி மிரட்டி வந்தார் [எப்பிடியாவது செக் பண்ண மாட்டானான்னுதான் ] அக்காக்கள் [ஒரு ஆள் BSC படிப்பு] கண்டிப்பாக செக் பண்ணுடான்னு மிரட்டிக்கிட்டு போனாங்க, நம்ம ஆபீசரும், செட்டியாரும்தான் கண்டிப்புக்காட்டி லேப்புக்கு கிட்டத்தட்ட தூக்கிட்டே போயிட்டாங்க...![நன்றிகள் ஆபீஸருக்கும், குமரேசன் செட்டியாருக்கு...]

நட்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் இல்லையா ?

தொடரும்...

படங்கள் யாவும் பழையது, விஜயன் எடுத்த படங்கள்...ஆங்...நம்ம போன்தான்  கோமாவுல இருந்துச்சே.

Monday, July 2, 2018

மனம் நிறைவான ஊர் பயணம் 5...!


இரும்புத்திரை படத்தை பார்த்துட்டு வடசேரில இருந்து பஸ் ஏறினேன், ராங் ரூட்டுல  போன பஸ்சில் ஏறி கண்டக்டரை தலை சுற்ற வைத்துவிட்டு பொற்றையடியில் இறங்கி ஊரை நோக்கி நடந்தேன், நாஞ்சில் நாட்டின், வாழை தோப்புகள், தென்னந்தோப்புகள், மாந்தோப்புகள், குளம், கால்வாய் என  ரசித்தவாறே...அடடா அழகோ அழகு...!

அடுத்தநாள் கல்யாண வீடு, அன்றே சாயங்காலம் திருநெல்வேலியில் நம்ம ஆபீசரை சந்திக்கும் பரபரப்பு மனதில் தொற்றிக்கொள்ள...குடும்பம் கல்யாண வீட்டிற்கு சென்றுவிட்டதால் மனது வெறுமையாக இருக்கவே...தூங்கிப்போனேன்.

அடுத்தநாள் காலையிலேயே வீட்டம்மா போன் வந்துருச்சு, "மாமா சீக்கிரமா வாங்க, பொண்ணை அலங்கரிச்சுட்டு இருக்கோம்"ன்னு...பரபரன்னு எழும்பி பஸ் பிடிச்சு நாகர்கோவில் வந்து, பேரூந்து நிலையத்தில் காலை உணவை முடித்து, வள்ளியூர் பஸ் பிடிச்சேன், வானம் மப்பும் மந்தாரமுமாக மேகங்களை விரட்டியடித்துக் கொண்டிருந்தது சற்றே அச்சத்துடன்...

நான் எப்போ பஸ்ஸில் பிரயாணம் செய்தாலும் கண்டக்டர் சீட்டில் அவருடன் அமர்ந்து கொள்வது வழக்கம் அப்போதான் டிஸ்டப் இல்லாமல் இருக்குமென அமர்ந்து கொண்டேன், ஒழுகினசேரி தாண்டியதும் மழையும் காற்றுமாக சீற...பஸ்  தன் வேகத்தை குறைக்காமல் போக...

குடைக்குள் மழைபோல பஸ்சுக்குள் மழை, சமூக வலைத்தளங்களில் இதனை வாசித்தும், பார்த்தும் இருந்தாலும் நேரில் பார்த்தபோது அதிர்ந்து போனேன், இருக்கைகளில் அமர முடியாமல் பயணிகள் யாவரும் பல்லி போல ஒட்டிக்கொண்டும், எழும்பியும் நிற்க, கண்டக்டரோ டிரைவரோ எதையும் கண்டுக்கவேயில்லை [பின்னே...ரோஷமில்லாத பயணிகள் காசும் கொடுத்து இப்படி மௌனமாக பயணிக்கும் போது அவர்களுக்கென்ன ?]

போன் கோமாவிலிருந்தபடியால் வீடியோ எடுக்க முடியலையேன்னு கோவம் ஒருபுறம், ஊரின் அழகை அமர்ந்து ரசிக்க முடியவில்லையே என்ற வேதனையுமாக கண்டக்டரிடம் நான் வெடிக்க...அவர் திரும்ப வெடிப்பார்ன்னு சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை !

"ஏன் சார் வண்டி இந்த லட்சணத்துல இருக்கு காசும் வாங்குறீங்க...ரிப்போர்ட் பண்ணக்கூடாதா ?"

"ஏன் நீ பண்ணு, போட்டோ எடு, வீடியோ பிடிச்சு வாட்சப், பேஸ்புக், யூடியூப்ல போடு [வலைத்தளம் இருப்பது தெரியாது போல அவ்வ்வ்] ஒரு மண்ணாங்கட்டியும் பண்ண முடியாது"ன்னுட்டு எழும்பி போயிட்டார்.

என்ன நினைச்சாரோ கொஞ்சம் கழித்து அருகில் வந்து, "தம்பி...எம்புட்டோ ரிப்போர்ட் பண்ணியாச்சு மேலதிகாரிங்ககிட்டே, அவங்க கேக்குறது கலெக்ஷன் எம்பூட்டுய்யா ஆச்சுக்குற கேள்விகள் மட்டும்தான், அதையும் மீறி நாங்க கேட்டா...உனக்கென்ன உன் வேலையை மட்டும் பாரு, கலெக்ஷனை கூட்டுற வழியைப்பாருன்னு சொல்றான், நாங்க என்ன செய்ய தம்பி ? காவிரி மேலாண்மை வாரியம் அமைங்கன்னு சுப்ரீம் கோர்ட் சொல்லியும் அதை மதிக்காதவங்க இருக்கும் உலகம் தம்பி, இவனுககிட்டே சொல்லியா நடக்கப்போகுது"ன்னு வேதனையாக சொல்ல...நானும் அமைதியானேன்.

வள்ளியூர் பஸ்நிலையம் அதே மாதிரிதான் இருக்கு ஒரு மாற்றமுமில்லை, நெல்லை, வள்ளியூர் எப்போ போனாலும் பழச்சாறு குடிக்க மறப்பதில்லை, ரெண்டு கிளாஸ் வாங்கி அருந்தினேன், சீயோன் மலை பஸ் வர தாமதமாகியதால்...ஆட்டோ பிடிக்கப்போனால், யானை விலை குதிரை விலை, போங்கடான்னுட்டு பஸ்சுக்காக காத்திருந்தபோது உள்ளே ஒரு ஆட்டோ வர, கேசுவலா எம்பூட்டுன்னு கேட்டதும் 200 ஓவான்னு சொல்ல...உடனே ஏறி அமர்ந்து கொண்டேன்.

ஆட்டோ விரைந்து கொண்டிருக்க...வீட்டம்மா போன் "மாமா எங்கே இருக்கீங்க ?"

"நடு ரோட்டுல இருக்கேன்"ன்னு சொன்னதும் ஆட்டோவை நிறுத்திவிட்டு டிரைவர் சிரிச்ச சிரிப்பில் நான் பீதியாக...எதிர்முனையில்..."இங்க வா அப்புறமா இருக்கு"ன்னு சொல்ல...இன்னும் பீதியா போயி சேர்ந்தேன்...

தொடரும்...

படங்கள் : நன்றி கூகுள்.

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!