Tuesday, April 30, 2013

வெற்றிகள் வெறியாக மாறினால் உன் நிலைமை என்ன...?

ஆரம்பத்தில் நான் பார்"மேனாக பணியிலிருந்த சமயம், காபி ஷாப்பில் பில்லியார்ட்ஸ் விளையாட்டுகள் நடப்பதுண்டு முதலாளியும் [[அரபி]] வந்து விளையாடுவது வழக்கம், கஸ்டமர்கள் இல்லாத சமயம் சில கஸ்டமர்களோடு கம்பெனி கொடுத்து விளையாட சொல்வார் முதலாளி என்னையும்....
பில்லியார்ட்ஸ் விளையாடுவது கூடுதலும் அரபிகள்தான், அந்த சமயத்தில் ஒரு இந்தியா பெங்களூரை சேர்ந்த ஒருவன், பஹ்ரைனில் இந்தியன் டிஸ்கோவில் டீ ஜே"வாக இருப்பவன், தினமும் பில்லியார்ட்ஸ் விளையாட வருவது உண்டு, மொத்த அரபிக் கில்லாடிங்க கண்ணுலயும் பில்லியார்ட்ஸ் கம்பை விட்டு ஆட்டிவிட்டுதான் போவான்.

அவனை ஒருக்காவாவது தோற்கடிக்க வைக்க வேண்டும் என்று எவ்வளவோ பிரயாசப்பட்டும் முடியாமலேயே போய் விட்டது, ஸ்பெஷல் ஆளுங்களை கூட கூட்டிட்டு வந்தும் அவனை ஜெயிக்க முடியவில்லை.
இப்படியா ஒருநாள் வெறித்தனமாக விளையாடி வெற்றி களிப்பில் அரபிகளிடம் சொடக்குப் போட்டு சொடக்குப் போட்டு அண்ணே நீ வாரியா மாமா நீ வாரியா மச்சான் நீ வாறியான்னு வரிசையாக கேட்டுகொண்டிருந்தான்.

ஒரு அரபியும் விளையாட முன்வரவில்லை....லைனாக வாறியா வாறியான்னு கேட்டவன் என்னைக் கண்டதும் நீ வாறியான்னு கூப்பிட்டான் [[அவன் நல்லநேரம் அப்பவே ஆரம்பம் ஆகிவிட்டது]]
சரி சொல்லிட்டு விளையாட்டை ஆரம்பிச்சேன், மொத்த அரபிகளின் முன்பு இந்தியர்கள் நாங்கள் விளையாட்டை தொடங்க ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்...

என் நல்ல நேரமோ இல்லை அவன் கெட்ட நேரமோ, அவன் நல்ல நேரமோ இல்ல என் கெட்ட நேரமோ தெரியல....பயபுள்ள ஒரு பால் போடவும் நான் எனது பால் மொத்தத்தையும் உள்ளே தள்ளிவிட்டு கருப்பு போல் எந்த பாக்கெட்டுல போடணும்னு அவன்கிட்டே கேட்டுட்டு உள்ளே போட அவன் மலைத்துப் போனான்.
அரபிகள் ஆரவாரமாக வந்து என்னைக் கட்டிப்பிடிக்க பயபுள்ளைக்கு ஒரு மாதிரியாக ஆகிவிடவே, பில்லை செட்டில் செய்துவிட்டு போனவன்தான் அதற்க்கு பிறகு ஆளையே காணோம்.

ஒருநாளும் பில்லியார்ட்ஸ் விளையாடி நான் ஜெயிச்சதே கிடையாது என்பது எனக்குத் தெரிந்த உண்மை...!
அதுல ஒரு பாடம் படிச்சேன், வெற்றி களிப்பு வெறியாக மாறிவிட்டால் அவமானம்தான் என்பது நன்றாக மனதுக்குள் உரைத்தது. வெற்றி என்றும் நமது கையில் இருப்பதில்லை அது ஒருவர் மாற்றி ஒருவர் பக்கம் போய்க்கொண்டேதான் இருக்கும் இல்லையா...?


Sunday, April 28, 2013

கல்யாணம் நடக்கும் இடத்தில் பேய்கள் வருமா?

கல்யாணத்திற்கு முன்பு "மை ஹனி"ன்னு மொபைலில் மனைவி பெயரை வைத்திருந்தவன், கல்யாணத்துக்கு அப்புறம் அவள் பேரை மட்டுமே வச்சிருக்கான், என்னடா ஆச்சுன்னா...ஆமாம் பெரிய "ஹனி, அது ஒரு சனி"ங்குறான்.

-------------------------------------------------------------

பேய்கள் உலகில் உண்டா இல்லையா தர்க்கம் - நான் இருக்குன்னுசொல்லுறேன்,எப்படி என்றான். "நீதான் அது" என்றேன் கொலைவெறியா பார்த்துட்டுப் போறான் அவ்வ்...
-------------------------------------------------------------

அம்மா உணவகத்தை "சோம்பேறிகள் உணவகம்"ன்னு பெயர் மாற்ற வேண்டும் ஒரு நண்பன் பொற்கொடி ச்சே ச்சீ போர்க்கொடி பிடிக்குறான்...!
------------------------------------------------------------

சுகந்திக்கு சுகமில்லாமல் சுகப்படுத்த சுகமானவரை சுகப்படுதுபவர் இடம் அழைத்துப்போக சுகமானவர் முன் வரவில்லை ஏன்?[[பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்]]
----------------------------------------------------------


"என்னாது அரேஞ் மேரேஜா ? அப்பிடின்னா என்ன?"

"இரு குடும்பத்தார் சம்மதத்துடன் நடக்கும் கல்யாணம், அந்த இரு குடும்பங்களே கொண்டாடி மகிழும்"

"எங்க ஊர்ல [[பிலிப்பைன்ஸ்]] அந்த சிஸ்டமே இல்லை ஒன்லி லவ் மேரேஜ்தான்"

"நாசமாபோச்சு போ..."

"என்னாது"

"வாழ்த்துகள்னு சொன்னேன் மேடம்..."

"பக்கத்து வீட்டுப்பையனை லவ் பண்ணிகிட்டு, அப்புறமா கண்ணுக்குத் தெரியாம ஒரு நூறு கிலோ மீட்டர் தூரத்துல கல்யாணம் கட்டி குடுப்பதுதான் அரெஞ்ச் மேரேஜா மனோஜ்...?"

என்னிடம் பதிலில்லை....!
"என்ன மனோஜ் சத்தத்தையே காணோம்...?
----------------------------------------------------------

என்னாது அவரு பெரியார் பேரனா...? எனக்கு ரொம்பவே  சந்தேகமாக இருக்கு - எலேய் வேஷ்டி கிழிஞ்சிறப்போகுது கவனமாக வீடு போயி சேறு ச்சே சேரு.
---------------------------------------------------------

தங்கம் விலை குறைந்ததை அடுத்து, அம்மாவுக்கு புற்று நோய் உடனே ஆபரேஷன் பண்ணவேண்டும் என்று பலரிடமும் கடன் வாங்கினவன் - சந்தேகம் வந்து பக்கத்து ஊரு நண்பன்கிட்டே விசாரிச்சா...பஹ்ரைன்ல இருந்து தங்க பிஸ்கட்டுகள் வந்ததாக தகவல், அம்மா சும்மா ஜம்முன்னு இருக்காங்களாம்.

ஏன் இந்தப் பொழப்பு?
-----------------------------------------------------------

பூனை எதுக்கு நம்மளை கண்டதும் ஓடுது...?

அதுக்கு நம்மளைக் காட்டிலும் அவசரமாம்...ஹி ஹி...

சரி இன்னைக்கு இம்புட்டு போதும் உங்களை வெட்டிருதேன் ஸாரி விட்டுருதேன்.


Wednesday, April 24, 2013

எஸ் பி பொன் மாணிக்கவேலும் ஒரு கொலையும்....!

டிரிங் டிரிங்....

"ஹலோ...யாரு...?"

"ஏன் என் சத்தத்தை வச்சி நான் யாருன்னு தெரியலையாக்கும்...?"

"ஒ நீயா..? என்னன்னு சொல்லு...?"

"ஏன் இப்பிடி கோபமா பேசுறே...? நான் எங்கே நின்னுட்டு இருக்கேன் தெரியுமா...?"

"நீதான் ஒரு செமினாருக்கு துபாய் போனேன்னு தெரியுமே, எல்லாம் நல்லபடியா முடுஞ்சுதா...?"

எதோ பிலிப்பைனி மொழியில திட்டிட்டு..."அடேய் நான் டுயூட்டி ஃபிரீ"ல நிக்குறேன் உனக்கு என்ன வேணும்னு கேக்கலாம்னு போன் பண்ணுனா நீ ராஸ்கல்..." மறுபடியும் பிலிப்பைனில திட்டுது.

"ஆஹா...ஸாரி மேடம் வெறி ஸாரி என்ன வாங்கப் போறே எனக்கு...?"

"ம்ம்ம் உனக்கு எது வேணும்னு எனக்குத் தெரியாதா என்ன...?"

"சரி சரி ஒரு சிமிர்னாஃப் மட்டும் வாங்கிட்டு வா..."

"நோ நோ அது உடம்புக்கு ரொம்ப சூடு பஹ்ரைன்ல சூடு வேற ஆரம்பிச்சிருச்சு,, சிவாஸ், பிளாக் லேபள், ஜாக் டேனியல் இதுல ஒன்னு சொல்லு..."

"எனக்கு ரெட் லேபளே போதும் ஆளைவிடு..."

கூட வேலைப் பார்க்கும் பிலிப்பைனி பெண்ணின் அன்பு...! யாரு பெத்தபிள்ளையோ, ஆண்டவன் எல்லாருக்கும் ஆறுதலுக்காக சிலரைப் படைச்சு இருக்கான் ஆனால் நாம்தான் அதை நல்ல முறையில் பயன்படுத்தாமல் உதாசீனப்படுத்துறோம் இல்லையா?
----------------------------------------------------------------------------

கொலை கேசை கண்டுபிடிக்க ஹோட்டலுக்குள்ளே போலீஸ் நாய் வரும்போது விறைப்பா நிக்கலாம், ஆனால் இந்த காலு சடகடன்னு ஆடுதே அதுக்கு ஏதாவது மார்க்கம் இருக்கா?

கூட வேலை பார்க்கும் பெண் பயத்துல அடிக்கடி பாத்ரூம் வேற போயிட்டு வருது எனக்கு இன்னும் கால் கடபட கடகட....
-----------------------------------------------------------------------------
எலேய் உங்களுக்கு தெரியுமாடே சேதி? அட நம்ம பிலாசபி பிரபாகரனுக்கு கல்யாணமாம்ல அடுத்த மாசம் புது மாப்பிளை ஆகுறாரு - சென்னை தியேட்டர்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட் இனி

வாழ்த்துக்கள் மக்கா.....
-----------------------------------------------------------------------------

மூட்டைக்கு மருந்தடிடான்னு பெங்காலிகிட்டே சொன்னா கொய்யால பாத்ரூம்ல போயி பெயிண்ட் அடிச்சுட்டு நிக்குறான் மிடியல.
-----------------------------------------------------------------------------

என்னாது சீனா"காரன் உள்ளே வந்துட்டானா? அப்போ நாம வெளியேப் போயிருவோம் - மன்மோகன் சிங் [[வடிவேலு வாய்சில் படிக்கவும்]]
---------------------------------------------------------------------------
நம்ம பொன் மாணிக்கவேல் எஸ்பி"யாக இருக்கும்போது சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் ஒரு தற்கொலை கேஸ், ஒரு பெண் தீக்குளித்து தற்கொலை செய்த செய்திகேட்ட எஸ்பி நேரே ஸ்பாட்டுக்கு போனார்...பிணத்தை பார்த்துவிட்டு மாப்பிளையை அள்ளி போட்டு கொண்டு வந்து பலமாக விசாரிக்க...
அது தற்கொலை அல்ல கொலை என்று தெரிய வந்தது. பத்திரிக்கை நிருபர்கள் "அதெப்பிடி சார் அது தற்கொலை இல்லை கொலைன்னு கண்டு பிடிச்சீங்க...?" என்று கேட்டதுக்கு எஸ்பி சொன்னார் "தற்கொலைன்னா உடம்பு முழுவதும் எரிந்து போயிடும், கொலைன்னா ஒருப்பக்கம் மட்டுமே எரிந்து இருக்கும், கொலையாளிகள் எங்களிடம் மாட்ட சில தடயங்களை விடுவார்கள் அல்லவா அதுல இதுவும் ஒன்று" என்று சொல்ல நிருபர்கள் வாயடைத்துப் போனார்கள்!


Tuesday, April 23, 2013

வைதேகி காத்திருந்தாள் இப்போ நானும் காத்திருக்கிறேன்...!

டைரக்டரும், நடிகருமான ஆர் சுந்தர்ராஜன் பற்றி தெரியாதவர்கள் கிடையாது,  காமெடி ஆகட்டும் செண்டிமெண்ட் ஆகட்டும் எதிலும் ஈசியாக கலக்குகிறவர்.

என்பது தொன்னூறுகளில் சினிமாவின் ஒரு வசந்தகாலம் என்றே சொல்லலாம், சுந்தர்ராஜன் இயக்கி வெளிவந்தப் படங்கள் வெற்றியின் உச்சத்தை தொட்டுக்கொண்டிருந்தது.

நான் பாடும் பாடல் படம்தான் கவுண்டமணியின் காமெடி உச்சத்தை தொட்டது என்றே சொல்லலாம் "காட்டை வித்து கள்ளு குடிச்சாலும் கவுண்டன் கவுண்டந்தாண்டி" என சொல்லும் டயலாக் ஏக பிரபலமாக இருந்தது, படமும் கன்யாகுமரி மாவட்டத்தை சுற்றியே எடுக்கப்பட்டது.
வைதேகி காத்திருந்தாள்  படம் ஆரம்பத்தில் யாராலும் கவனிக்கப்படாமல் அப்புறமாகத்தான் பிக்கப் ஆகி வெற்றி அடைந்தது, அந்தப்படத்தை தரை ரேட்டுக்கு மாவட்ட வாரியாக வாங்கியவர்கள் மடியில் பணமோ பணமாக குவிந்தது...!

அம்மன் கோவில் கிழக்காலே படமும் பாடலும் காமெடியும் மிக அருமையாக இயக்கி இருப்பார் சுந்தர்ராஜன், எத்தனை முறைப் பார்த்தாலும் அலுக்காத படம் அது.
மெல்லத்திறந்தது கதவு படம் அவ்வளவாக இல்லாவிட்டாலும் பாடல்கள் மனதை இப்போதும் கொள்ளை கொண்ட வண்ணம் இருக்கிறது, அதில் இளைய ராஜாவும் எம் எஸ் விஸ்வநாதனும் இணைந்து பணியாற்றினார்கள்,பயணங்கள் முடிவதில்லை பற்றி சொல்லவே வேண்டாம்...!

திருமதி பழனிச்சாமி, இந்தப்படம் வெறும் காமெடி படம்னு நினைக்கும் முன்பே திடீர் திருப்பமாக மாறி, குலைநடுங்க வைத்தது பாதியில் வரும் வில்லன் கேரக்டர்.
இளையராஜாவும் சுந்தர்ராஜனும் இணைந்தால் அந்தப்படம் ஹிட் மட்டுமல்லாது பாடல்கள் தாளம்போட வைக்கும் என்பதற்கு முழு கியாரண்டி உண்டு.

வைதேகி காத்திருந்தாள் படத்தில் "அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட..." பாடல் கண்ணில் கண்ணீரை வரவைக்கும் அளவுக்கு சிறப்பாக எடுத்திருந்தார். டைரக்டராக கோலோச்சியவர் திடீரென நடிப்பு பக்கம் வந்துவிட்டார், என்னய்யா ஆச்சுன்னு கேட்பவர்களுக்கு அவர் கூறிய பதில் "நடிப்புதான்ய்யா ரொம்ப ஈசியாக இருக்கு, பணமும் கிடைக்குது, டைரக்ஷன்னாலே ஒரே டென்ஷன் மயம் அதான் வேண்டாம்னு விட்டுட்டேன்"ன்னு சொன்னார்.
நிறைய படங்களில் நடித்தும் மக்கள் ஆதரவைப் பெற்றார். இவர் நடிகராக வெளியே வந்த பின்புதான் மக்களும் இவரை அடையாளம் கண்டு கொண்டார்கள்.

இடையில் என்னாச்சோ தெரியவில்லை, ஆளையேக் காணோம், ஒரு அருமையான கலைஞனை இம்புட்டு சீக்கிரமாக மறந்து விட்டார்களே என்று சில சமயம் நான் யோசிப்பது உண்டு, இப்போது ஒரு படம் டைரக்ட் பண்ணிக் கொண்டு இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருப்பது சற்றே ஆறுதலாக இருக்கிறது...!

இதே போல இன்னொரு கலைஞனையும் நம்மாளுங்க கண்டுக்காமல் இருக்காங்க அது......... நம்ம பாக்கியராஜ், காலத்தை பிரயோசனப் படுத்திக்கோங்க திரைக் கலைஞர்களே....
சிவாஜி கணேசனை கடைசிக் காலத்தில் யாருமே கண்டுக்கவில்லை, இந்த நஷ்டம் அவர்களுக்கல்ல, நமக்குதான் நஷ்டம்...!
அய்யய்யோ ஆபீசர் நான் இல்ல நான் இல்ல....

Friday, April 19, 2013

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயப்படுறது எதற்காக...?


நம்ம சேட்டன் ஒருத்தன்கிட்டே சவூதி அரபி ஒருத்தன், நல்ல தண்ணியில்  "என்னைய்யா நீ கேரளாவா...?"

"ஆமா சார் நான் கேரளாதான், அங்கே சவுதியிலும் நிறைய கேரளா ஆளுங்கதானே இருக்காங்க...?" பெருமையாக...

"கேரளா பார்க்க ரொம்ப அழகு...!" அரபி 

"ஆமா எங்க கேரளா ஒரு கிரீன் [[பசுமை]] தேசம்...!"

"பின்னே எதுக்குய்யா உங்க ஆளுங்க இந்த பாலைவனத்துல வந்து கிடக்கீங்க...?" அரபி 

நம்மாளு பேய் முழி முழிக்க, நான் வடிவேலு அடிவாங்கு முன் ஓடும் அவருடைய நண்பனுங்க போல ஓடியேப் போயிட்டேன்.

அரபி வம்பு பேசுறான்னு எனக்கு முதல்லையே புரிஞ்சிப் போச்சு ஹி ஹி...
----------------------------------------------------
சின்னபுள்ளையில நண்பன் ஒருவன் என்னைக் கடிச்சி வச்சிட்டான், எங்கம்மாகிட்டே சொன்னதும் வான்னு கூட்டிட்டுப் போயி எங்கவீட்டு முருங்கை மரத்தை காட்டி...

"ராமசந்திரன் என்னைக் கடித்தான் நான் உன்னைக் கடிக்கிறேன்னு மூன்று முறை சொல்லி சொல்லி முருங்கை மரத்தை கடிக்க சொன்னார்கள்.

எங்கம்மாகிட்டே இதுபற்றி கேக்க மறந்துட்டேன், இதுல ஏதாவது வைத்தியம் இருக்கா தெரிஞ்சவங்க சொல்லுங்க...?
---------------------------------------------------------
ஒரு முறை லீவுக்கு மும்பையிலிருந்து  ஊருக்கு போனபோது, அழகான சட்டை பேன்ட் போட்டு இன் செய்துகொண்டு நாகர்கோவில் கிளம்பினேன் நானும் நண்பர்களுமாக, என்னை பார்த்த என் அக்கா,  "எலேய் தம்பி நில்லு" என்று சொல்லிவிட்டு ஒரு ஹீரோ பென்னும்  ஒரு மடித்த வெள்ளைப் பேப்பரும் கொண்டு வந்து என் சட்டை பாக்கெட்டில் குத்தி வைத்துவிட்டு.

எப்போ வெளியில் கிளம்பினாலும் சட்டை போட்டால் கூடவே இந்த பென்னும் பேப்பரும் வைத்துக் கொள்ளவேண்டும் அதுதான் ஆண்களுக்கு அழகு என்று சொன்னாள்.

அது முதல் இன்றுவரை அதை நான் கடைபிடித்து வருகிறேன், பஹ்ரைன் வேலைக்கு வந்த பின்பு எங்கள் மேனேஜர் ஒருவர் என்னைக் கவனித்துவிட்டு எல்லாரிடமும் புகழ்ந்து சொல்லுவார், "மனோஜை பாருங்க எப்போ சட்டை போட்டுருந்தாலும் கூடவே பென்னும் பேப்பரும் பாக்கெட்டில் இருக்கு, இது மிகவும் நல்ல விஷயம், காரணம் ஏதாவது விபத்து நமக்கோ பிறருக்கோ நடந்தால் உடனே நம்பரை நோட் பண்ணிக்கொள்ள உதவும்" என்று பாராட்டுவது உண்டு...!
-------------------------------------------------- 
அதேபோல நான் எப்போ மும்பையில் இருந்து ஊருக்கு போனாலும் [[கல்யாணத்திற்கு முன்பு]] எங்கள் வீட்டில் அப்போது விறகு அடுப்பு என்பதால் [[இப்போதும் இருக்கு]] காய்ந்த வேலிக்கரை முள்செடிகளை  கொப்பு கொப்பாக வெட்டி வந்து கூட்டகூட்டமாக எங்க அப்பா சேர்த்து வைத்து காய வைத்து இருப்பார்.

நான் ஊருக்கு போகும்போது ஊர் சுற்றும் நேரம் தவிர அந்த காய்ந்த முள்செடிகளை பிரித்து, அரைப்பாகம் நீளத்திற்கு அழகாக வெட்டி அடுக்கி வைத்து கொடுப்பேன் அம்மாவுக்கு, லீவுக்கு வந்தேம்னா அம்மாவுக்கும் அக்காளுக்கும் ஆறு மாசத்துக்கு விறகுக்கு பஞ்சமில்லாமல் வெட்டி அடுக்கி வைத்துவிட்டுத்தான் வருவேன்.

அப்போ எங்கள் வீட்டை சுற்றி சுவர் கிடையாது, ஒரு ஓட்டுவீடு மட்டுமே [[இப்பவும்]] அதை சுற்றி பூவரசம் மரங்களும் முருங்கை மரங்களுமாக முள் வேலிகள் போடப்பட்டு இருந்தன.

அப்படிப்பட்ட ஒருநாளில் நான் அம்மாவுக்காக விறகு வெட்டிக் கொண்டு இருந்தேன், அம்மா மீன்கடைக்கு போய்விட, வீட்டில் நான் கடைக்குட்டி என்பதால்  என் அக்காவுக்கு நான் ரொம்ப செல்லம், இடையிடையே வந்து மண்டையில் ரெண்டு கொட்டு கொட்டிவிட்டு சீக்கிரம் வெட்டி முடிலெய் என்று என்னை மிரட்டிக் கொண்டு வீட்டுக்குள் சென்றுவிட.

நான் விறகு [[அருவா வைத்துதான் கோடாலின்னு நினச்சிராதீக]] வெட்டிக்கொண்டு இருக்கும் போது வேலிக்குள் ச்சீத் ....ச்சீத்...ச்சீத்...என்று சத்தம் வந்துகொண்டே இருக்க, நான் கவனிக்காமல் வெட்டிக்கொண்டே இருந்தேன்.

வெட்டுவதை நிறுத்திவிட்டால் அந்த சத்தமும் நின்றுவிடும், மறுபடியும் வெட்டுவேன் சத்தம் தொடரும் இப்படியே ஒரு அரை மணி நேரம் கடந்துவிட, எனக்கு அது என்னான்னு பார்க்கத் தோன்றவே....

வேலிக்குள்ளாக போயித் தேடிப்பார்த்தேன்....கொஞ்சநேரம் தேடிப்பார்த்தபின்புதான் தெரிந்தது ஒரு "பாம்பு" தவளையை பாதி முழுங்கியும் முழுங்காமலுமாக போராட்டம் நடந்துகிட்டு இருக்கு.

நான் விடுவேனா......

எடுத்தேன் பாருங்க ஓட்டம்......... தெற்கு தெருவை விட்டுட்டே மீன்கடையைப் பார்க்க நான் ஓடின ஓட்டத்தை ஊரே ஒரு மாதிரியாகப் பார்க்க, எங்க அம்மாகிட்டேப் போயித்தான் நின்னேன்.

"என்ன மக்ளே ஆச்சி...... ஏம்லேய் அய்யா இப்பிடி ஓடி வருதே...?"

"யம்மா பாம்பு பாம்பு வேலிகுள்ளே பாம்பு...."

"நம்ம வீட்டு வேலிக்குள்ளேயா மக்ளே...? அது ஒன்னும் செய்யாது வா போகலாம்"

"நான் வரமாட்டேன் அந்த பாம்பை கொல்லசொல்லு அப்புறமா வீட்டுக்கு வாறன்"

"சரி சரி வா அம்மாவே அந்த பாம்பை கொன்னுருதேம்லேய் வா எங்கூட"

வீட்டுக்குப் போனதும் அம்மாவுக்கு பின்னாடி நான் எனக்குப் பின்னாடி எங்க அக்கா...அம்மாவுக்கு பாம்பு இருக்கும் இடத்தைக் காட்டினேன், ஆத்தீ பாம்பு இன்னும் தவளையை தின்னு முடிக்கல ரெண்டும் போராட்டத்துலதான் இருந்துச்சு.

எங்க அம்மா ஏதோ கம்பை எடுத்து பாம்பை கொல்வாள்ன்னு பார்த்தா...ஒரு கையில கொஞ்சூண்டு மண்ணை அள்ளி அது மேல வீசிட்டு, போ அங்க போ போ அங்க போ"ன்னு சொன்னதுதான் உண்டு பாம்பு அப்பிடியே திரும்பி போயிருச்சு....!

"ஏம்மா அதை அடிக்காம விட்டே"ன்னு கேட்டதுக்கு அம்மா சொல்லுச்சு, "அது கொம்பேறிமூக்கன் பாம்பு, எந்த அரவத்தையும் தொந்தரவு நாம பண்ணலைன்னா, நம்மளையும் அதுக தொந்தரவு பண்ணாது புரியுதா...?"

எங்க புரியுதா, அதோட விறகு வெட்டை சுத்தமா நிறுத்திட்டேன், வேலிக்கரைப் பக்கமே போவதில்லை மதில் சுவர் வரும் வரை....நம்ம தைரியம் பற்றி நமக்குத் தெரியாதா என்ன...? அதுவும் பாம்பு......!

அம்மாவுக்கு, உயிரினங்கள் மீது அலாதி அன்பும் பிரியமும் உண்டு என்பதை இப்போது நினைக்கும் போதும் எனக்கு ஆச்சர்யமாகவே இருக்கும்...!!!


Friday, April 12, 2013

அனாதையாக்கி விட்டுப் போன படங்கள்...!

ஒழுங்காக ஓடிட்டு இருந்த லேப்டாப் திடீரென வேலை நிறுத்தப் போராட்டம் செய்ய ஆரம்பிச்சிடுச்சு, என்னவெல்லாம் செய்யனுமோ செய்துப்பார்த்தும் என்னை கடைக்கே கொண்டு போயிருன்னு கதறுனதுனால, கடைக்கே கொண்டு போனேன்.
அங்கே இதுக்குண்டான கேரண்டி பில்லை கேட்க, "அண்ணே அந்த பில்லை அப்பவே ஏரோப்பிளேன்ல போகும்போது கீழே தூக்கி கடாசிட்டேன்"னு சொன்னதும் பிலிப்பைனிகாரன் அவன் மூக்கு கண்ணாடியை மாட்டிவிட்டு என்னை கூர்ந்து பார்த்தான் [[ஹி ஹி ]]

கேரண்டி பில் இல்லைன்னா செக்கப் [[!]] பண்றதுக்கு மூன்று தினார் ஆகும்னு சொல்லவே, சொறிங்க ச்சே சரிங்க'ன்னு சொல்லிட்டு மறக்காம பில்லையும் வாங்கிட்டுப் போனேன்.

லேப்டாப் இல்லாமல் படும் அவஸ்தை என்னான்னு தெரிஞ்சு பொரிஞ்சு போனேன், உறக்கமே வரல....ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காதாமே, இனி அதுகூட "டைப்புர கையும்"னு சேர்த்துக்கோங்க.
அடுத்த நாள் கடைக்கு வேகமா போனேன் பயபுள்ள சொன்னதைக் கேட்டு லேப்டாப் வேணுமா வேணாமா"ன்னு கொஞ்சமும் ரோசிக்கவே இல்லை "சரிய்யா பண்ணிக் குடு"ன்னு சொல்லிட்டு வந்தேன், அப்பிடி என்னத்தைக் கேட்டான்...?

உன் ஹாட் டிஸ்க் போயிடுச்சு...."என்னாது என் ஹாட் டிஸ்க்கா...? ஸாரி ஸார் உங்க லேப்டாப் ஹாட் டிஸ்க் பழுதடைந்து விட்டதால் புதுசு மாத்தனும் அதுக்கு எல்லாம் சேர்த்து முப்பத்தஞ்சி தினார் [[ஐயாயிரம் ரூபாய்]] ஆகும் என்ன செய்யனும்னு சொல்லுங்க...? [[வேற எண்ணத்தை சொல்லப்போறோம் மாத்துங்க]]

ஆவேசமாக வீடு வந்து தூங்கவே இல்லை, ஆனால் அன்னைக்குதான் பல நண்பர்களுக்கும் அம்மாவுக்கும் அண்ணனுகளுக்கும் போன் செய்தேன்...!

சாயங்காலமே பிலிப்பைனி போன் செய்து சரியாகிவிட்டது என்றான், கையில காசு இல்லாம ஒரு நண்பன்கிட்டே கடன் வாங்கி, அடுத்தநாள் போயி வாங்கிட்டு வந்தேன் ஆனால்.....

ரெண்டு பேய் இங்கே ஆடுதேன்னு கோவிலுக்குப் போனா அங்கே நாலு மாடு ச்சே பேய் கலர் கலரா ஆடுனாப்ல ஆகிப்போச்சு.
வாங்கி வந்து லேப்டாப்பை ஒப்பன் பண்ணுனா அருமையான போட்டோக்கள் படங்கள் எல்லாம் என்னைத் தனியே அனாதையாக்கி விட்டுப் போயிருந்தது, இதில் ஆபீசர் வீட்டு திருமணம் போட்டோக்கள், விஜயன் குடும்பமும் என் குடும்பமும் சுற்றுலா போன போட்டோக்கள், மற்றும் ஆபீசரும் விஜயனும் நண்பர்களாக சுற்றுலா போன போட்டோக்கள், மும்பை போட்டோக்கள், எனது குடும்ப போட்டோக்கள் என அத்தனையும் என்னைவிட்டு போய் விட்டதே என்று தாங்கமுடியாத கவலையில்தான் இருக்கிறேன்.

சரி வீட்டுக்கு ஸ்கைப்ல வீடியோ சாட்டிங் பண்ணலாம்னு போனா...அது டவுன்லோடு பண்ணு லொட்டு லொசுக்குன்னு கேக்க, விக்கி"யை வேலைப் பார்க்கவிடாமல் அவன் ஸ்டெனோவையும் பார்க்கவிடாமல் பாஸ்வேர்ட் தேடவச்சு கண்டுபிடிச்சு தந்தான் [[நன்றிடா அண்ணே]]
சரி இனி பேசலாம்னு வீடியோவை ஒப்பன் பண்ணுனா கேமரா தலைகீழா இருக்கு, என் வீட்டம்மா சிரிச்ச சிரிப்பு இருக்கே, மொத்த குடும்பத்துக்கும் போன் போட்டு சொல்லாத குறையாக சிரிக்க...பிள்ளைகளும் விழுந்து விழுந்து சிரிக்குதுங்க [[அவ்வ்வ்வ்]]]

கலியுகம்"தினேஷுக்கு காலையிலேயே போன் போட்டு சொன்னேன், அடப்பாவி அவரும் கிடந்தது சிரிக்குறார்.....அமோகமா பல்பு இலவசமாக விற்பனை ஆகிட்டு இருக்கு, இப்போ கிளம்பனும் மறுபடியும், பிலிப்பைனி கடைக்கு நாம போனாலே சேர்ல நிமிர்ந்து உக்காருதானுவ என்னான்னு பிரியல.

என்ன....அந்த போட்டோக்கள் மிஸ்ஸானதுதான் மனதில் ஆறாத வடுவாகவே எப்போதும் இருக்கும்....!


Sunday, April 7, 2013

சிலருக்கு ராட்சஷ புத்தியும் உண்டு போல...!

சின்ன வயசுல படிக்கும்போது என் கூட பெண் பிள்ளைகளே பக்கத்தில் சேர்வதில்லை அது ஏன்னு எனக்கும் புரியவில்லை, மற்ற நண்பர்களோடு சகஜமாக பேசிப் பழகும் குட்டிகள் நம்மளைக் கண்டால் நாலடி தள்ளியே எட்டிப்பொகுது  நானும் எம்புட்டோ மண்டையை உருட்டி ரோசித்துப் பார்த்தும் ஒன்னுமே பிரியல....!

பள்ளிக்குப் போகும் வழியில் நிறைய மாமரங்கள் இருந்தாலும், எல்லாமே பயங்கரப் புளிப்பு நிறைந்த மாங்காய்தான் கீழே விழுந்து கிடக்கும் ஆனால் ஒரே ஒரு மாமரத்தில் மட்டும்தான் இனிப்பு மாங்காய் உண்டு, அதன் கீழே நிறைய மாங்காய்கள் விழுந்து கிடந்தாலும் போயி எடுக்கமுடியாது.

அந்த மாமரத்துக்கு காவலாக அங்கே ஒரு கடிநாய் உண்டு, உள்ளே போனால் நிச்சயம் கடி உண்டு, தொப்புளை சுற்றி நாப்பது ஊசியும் உண்டு. ஆர்வமாக அந்த தோப்பு உள்ளே போனவர்கள் நிறையபேர் கடி வாங்கிவிட்டு கமுக்கமாக வீட்டில் போயி சொன்னது உண்டு ஹி ஹி...
பள்ளிக்கு போகும் சிறுவர்கள் யாவருக்கும் அந்த மாமரம் [மாங்காய்] ஏக்கத்தையும் வாயில் நீரையும் சுரக்க வைத்தவண்ணம் இருந்தது, சிலநேரம் மாமரத்தின் சொந்தக்காரன் அங்கே வந்து மாங்காயை பொறுக்குவதை ஆ என்று வாய் பிளந்து கூட்டம் கூடி ஆவலாக பார்ப்பதும் உண்டு.

சரி நாம இனி மேட்டருக்கு வருவோம். பெண்களை கவர என்ன செய்யலாம்னு ரோசிக்கும்போது இந்த மாமரம் நினைவுக்கு வந்தது, இனி என்ன............. ஆக்ஷன்தான் ரொமாண்டிக்தான் டூயட்தான் கும்மாளம்தான், வடை பாயாசம்தான்.
ஒருநாள் திடீரென அந்த மாமரத்தின் பக்கமாக நின்று கத்தினேன் "யாருக்கெல்லாம் இந்த மாங்காய் வேண்டுமோ அவங்க எல்லாம் இந்த பக்கமா வந்து நில்லுங்க, நான்போய் மாங்காய் பொருக்கி வந்து தாரேன்"ன்னு சொன்னதும், மாங்காய்க்காக இல்லாவிட்டாலும் நாய் என்னை கடிக்கிறதையாவது பார்த்துவிட வேண்டும் என்ற வெறியில், பிள்ளைகள் பையனுங்க எல்லாம் நிக்க ஆரம்பிக்க...

நான் மெதுவாக தோப்புக்குள்ளே போக ஆரம்பித்தேன், நாயைத் தேடினேன் அது ஒரு பக்கமாக நின்று வாலை ஆட்டிய வண்ணம் மெதுவாக என்னை நோக்கி வர, எனக்கு காலெல்லாம் கடகட...கடி நாயாச்சே....

மெதுவாக கையில் கிடைத்த மாங்காயை பொருக்கி கொண்டு நாய் அருகில் வருமுன் வெளியே வந்துவிட்டேன், வந்து பெண்களுக்கு மாங்காயை பங்கிட்டு கொடுக்க...அப்புறமென்ன நாம ஹீரோதான், பொண்ணுங்க எல்லாம் நம்ம பின்னாடிதான் ஹி ஹி...
ஆமா......தோப்பு பக்கம் போனாலே கடிக்க ஓடிவரும் கடி நாய், என்னை ஏன் "ஓடி" வந்து கடிக்கவில்லை...?

சன்டேன்னா  எங்க வீட்டுல இறைச்சி சாப்பாடு உண்டு, மத்தியானம் எங்க வீட்டுல சாப்பிட்டு எச்சம் இருக்கும் எலும்புகளை தூக்கிக் கொண்டு போயி அந்த நாயிக்கு விட்டெறிந்தேன், ராத்திரியும் மிச்சம் எலும்புகளை அடுத்தநாள் காலையில் நாயிக்கு கொண்டு போட்டேன்...அதான் நாயிக்கு பாசம் வந்துருச்சி என்மேல. இந்த ரகசியத்தை யாருகிட்டேயும் நான் சொல்லல. [[இந்த ஐடியா அந்த வயசுல எப்பிடி எனக்கு வந்துச்சுன்னே ஆச்சர்யமாக இருக்கு]]

தினமும் மாங்காய் பொறுக்குவதும் மக்களுக்கு வீதிப்பதுமாக இருந்ததால்...என்னை சுற்றி பெண் நண்பர்கள், ஆண் நண்பர்கள் என்று ஒரு கூட்டமே என்னை சுற்றி எப்போதும் இருக்கும்.

பொண்ணுங்க நம்மை காதலிக்கனும்னா ரிஸ்க்கை ரஸ்கா நினச்சு செய்யணும் [[ஹி ஹி]] அப்புறம் எனக்கு பொண்ணு கிடைக்கல கிடைக்கலன்னு நெஞ்சில அடிச்சு கதறப்டாது ஹி ஹி....
இப்போது அந்த மாமரங்கள் இருந்த இடமெல்லாம் வீடுகளாக மாறிப்போச்சு, கூதுகலமாக நாங்கள் ஓடிச்சென்ற இடமெல்லாம் சுத்தமாக மறைந்தும் போச்சு ஆனால் அந்த நினைவுகள் மற்றும் மாமரங்கள் இப்போதும் எங்கள் மனதில் பசுமையாக இருக்கிறது, என்னமோ தெரியாது இப்போதும் அந்த இடங்களை கடக்கும்போதெல்லாம் அந்த மாமரங்களின் வாசனை மூக்கைத் சுவாசிக்கவே வைக்கிறது...!

டிஸ்கி : ஜஸ்ட் ஜாலியா எடுத்துக்கோங்க.


நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!