Monday, March 28, 2016

சொல்ல மறந்த தேவதை !


நான்கு வருடங்களுக்கு முன்பு நான் வேலை பார்த்த ஹோட்டல் பக்கம் ஒரு ஹாஸ்பிட்டல் இருந்தது, கொஞ்சமே கொஞ்சம் தூரத்தில் ஒரு பாகிஸ்தான் கேண்டீனும் இருந்தது, நான் உள்ளே இருப்பதால் கண்ணாடி வழியாக வெளியே பார்க்கலாம், வெளியே உள்ளவர்கள் உள்ளே பார்க்கமுடியாது.

மத்தியானம் சாப்பாட்டு நேரம் அடிக்கடி ஒரு பெண் கேண்டீன் பக்கமாக போயி பார்சல் வாங்கி திரும்புவதை கவனித்தது உண்டு, பேசனும்ன்னு நினைப்பேன், ஏதாவது தப்பா நினைச்சிரக் கூடாதுன்னு பேசவில்லை பல நாள்...

ஒரு வெள்ளிகிழமை, மதியம் எனக்கு சாப்பிட ஸ்பெஷல் பிரியாணி வந்திருந்தது, பிஸி காரணமாக நான் சாப்பிடாமல் அப்புறமா சாப்பிடலாம் என்றிருந்தேன், ஒரு மூன்று மணி இருக்கும், அந்தப்பெண் கேண்டீன் பக்கமாக போவதைக் கண்டேன்...
இன்று கேண்டீன் பூட்டாச்சேன்னு உன்னிப்பாக கவனித்தேன், போய் பார்த்துவிட்டு ஏமாற்றமாக முகம் வாடியவளாக திரும்புவதைக் கண்டேன், பக்கத்தில் வேறு சாப்பாடு ஹோட்டல்களும் இல்லை...

சரி இதுதான் சான்ஸ் என்று, வெளியே வந்து என்னாச்சுன்னு ஹிந்தியில் கேட்டதும், நீங்க தமிழா ? [[பார்ரா]] என்று கேட்டாள், ஆமாம் என்றேன், தமிழில் அவள் பேசியதுமே [[பேசியது மலையாளம்]] தமிழை கொன்னுறாதே தாயி'ன்னு நான் மலையாளத்தில் பேச...

"என்னாச்சு சாப்பாடு கிடைக்கலையா ?"

"உங்க பெயர் என்ன ?" [சுத்தம்]

"மனோஜ்"

"உங்கப் பெயர் ?" [விட்டுருவோமா ?]

"ஆயிஷா" [மாற்றம்]

"நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலை"

"கொஞ்சம் பிஸியா இருந்துச்சு, அதான் சாப்பாடு வாங்க லேட்டாகிருச்சு, கேண்டீனைப் பூட்டிகிட்டு போயிட்டாங்க போல..."

"கேண்டீனைப் பூட்டிகிட்டு போகலை, வெள்ளிகிழமை கேண்டீன் கிடையாது, நீ வீட்டுல சமைக்குறது இல்லையா ? இங்கே வந்து சாப்புடுறே ?"

"எனக்கு இந்த பாகிஸ்தானி சமைக்கும் பிரியாணி ரொம்ப இஷ்டமானு, [[நீயும் பிரியாணி கேஸா ஆ ஆ ஆ]] அதான் மெனக்கெட்டு இங்கே வந்து வாங்கிட்டுப்போறேன்"

"சரி இப்போ சாப்பாடு ஸாரி பிரியாணி கிடைக்கலியே என்னாப் பண்ணுவே ?"

"கட்டன் சாயா வித் பிஸ்கட் ஓவர்" என்று பிரியாணி போச்சே ஃபீலிங்கில் சொன்னாள்...நாம விட்டுருவோமா என்ன ? எனக்கு வந்த பிரியாணியை தூக்கி கொடுத்துட்டு, கொண்டுபோயி சாப்பிடு என்றேன்...

"அப்போ உனக்கு ?"

" எனக்கு இருக்கு நீ கொண்டுபோ" என்று அனுப்பிட்டு...நான் கொலைப்பட்டினி....

அடுத்த நாளில் இருந்து அடிக்கடி என்னைப் பார்க்க வந்துபோவாள்...அப்படியே நல்ல நண்பி ஆகிப்போனாள்...கல்யாணம் ஆகிருக்கவில்லை, மலையாளி நண்பிகளுடன் [[பேச்சுலளி]] தங்கியிருந்தாள்...முக்கியமான நாட்களில் ஸ்பெஷல் சாப்பாடுகள் பார்சல் கொண்டு தருவாள்...ஊரிலிருந்து வரும் பண்டங்கள் தருவாள், முக்கியமாக உப்பில் ஊற வைத்த நெல்லிக்காய் எனக்கு பிடிக்கும் என்று அவள் அப்பாவிடம் சொல்லி அனுப்ப சொல்லி தருவாள், நட்பு நீடித்த நேரம்...விதி விளையாட ஆரம்பித்தது...ஆம் இங்கே கலவரம் ஆரம்பமானது...

நான் ஊருக்கு செல்ல, ஆறுமாதம் கழித்துதான் திரும்பி வந்தேன், அதற்குள் போன் நம்பர் கேன்சல் ஆக, புது நம்பர் போட்டு அவளுக்கு போனடித்தால் அங்கேயும் கேன்சல் ஆகிருந்தது...அப்புறம் அப்பிடியே மறந்தும் போனேன்.

நேற்று அவசரமாக ஒரு இடத்திற்கு போவதற்காக பஸ் வருகைக்காக காத்திருந்தேன், பஸ் வர லேட்டாகியதால்...சுற்று புறமாக கண்களை மேய விட்டபோது...ஆயிஷா"வைப்போல ஒரு பெண் ரோட்டை கிராஸ் செய்வதைப் பார்த்ததும் உன்னிப்பாக பார்த்தபோது, அது அவளில்லை...ரோட்டைக் கடந்து போனாள்...

அவள் சென்ற பக்கமாக போயி நின்று பழைய நினைவுகளை மென்ற சமயம்...ஓ...மை...காட்...எதிர் திசையில் இருந்து எனக்கு நேராக ரோட்டை கிராஸ் செய்து வருகிறாள்...அதே...அதே...ஆயிஷா'வேதான்...மை காட்...நினைச்சுக்கூட பார்க்கவில்லை, அதிசயம்தான்...!

பேச வார்த்தைகளில்லை...கையைப் பற்றிக் கொண்டாள்...அதற்குள் பஸ்சும் வந்துவிட பஸ்ஸில் அமர்ந்து பேசிக்கொண்டும், போன் நம்பர் பரிமாறிக்கொண்டும் வந்தோம், வருந்தி வீட்டிற்க்கு அழைத்தாள், அவசரமாக போகவேண்டும் இன்னொருநாள் பார்க்கலாம் என்று விடை கொடுத்தேன்...

கல்யாணமாகி ஒரு குழந்தை இருப்பதாகவும், குடும்பமாக இங்கே இருப்பதாகவும் சொன்னாள்...

காலம் எப்படி மாறிப் போகிறது பாருங்கள்...வெளிநாட்டு வாழ்க்கை இப்படித்தான் போல...
Thursday, March 10, 2016

கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் என்பது யாதெனில்...!


பெண் போல கொண்டை வைத்திருந்த நண்பனுக்கும், ஆம்பிளை மாதிரி கிராப் வச்சிருந்த பிலிப்பைனி பெண்ணுக்கும், வேலை செய்யுமிடத்தில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட...[[அவனுக்கு ஊர்ல கல்யாணமாகி குழந்தைகள் இருக்கு]]
சேர்ந்தே வசித்தார்கள் இங்கே...எல்லாம் நல்லாத்தான் போயிகிட்டு இருந்துச்சு, பத்து வருஷமா...
நேற்று திடீரென அவனைப் பார்க்க நேர்ந்தது...முடியெல்லாம் வெட்டி ஆம்பிளையாகிருந்தான்[!]...
"என்னப்பா உன் ட்ரேட் மார்க் முடிக்கு என்னாச்சு வெட்டிட்டே?"
"சலூன்ல செட்டிங் பண்ண சொன்னா, எசகு பிசகா பண்ணுனதுல மொத்த முடியையும் எடுக்க வேண்டியதா போச்சு, அதான்..."
"சரி, மே [[மேரி'யை நாங்கள் மே என்று கூப்பிடுவோம்]] எப்பிடி இருக்காள் நலமா ?"
"அதையேன் கேக்குற அது முடிஞ்சிபோச்சு, அவ இப்போ வேற ஆள்கூட செட்டில் ஆயிட்டாள்"
"உன்னை மிகவும் லவ் பண்ணுனாளேடா..."
"ஆமாடா நானும்தான் காதலிச்சேன், ஆனா அவ இந்த ம...ர காதலிச்சிருக்கா...முடியை வெட்டிட்டு ரூமுக்குப் போனதும், ரூமுக்குள்ளேயே விடம்மாட்டேன்னு ஒரே சண்டை..."
"அப்புறம் ?"
"அப்புறமென்ன அப்புறம், நானும் ஒதுங்கிட்டேன்..."
ரெண்டுபேருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிட்டு இருந்தபோது, அவள் இவன் தலைமுடியைப் பற்றியே சிலாகித்தாள், இவனும் ஆண் பெண் கலந்த அந்த தலை முடியைப் பற்றியே சிலாகிப்பான்...[[பயபுள்ளைங்க ஒரு மார்க்கமாத்தேன் இருந்துருக்காங்க]]
ஆக...ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி இப்பிடித்தான் உருவாகிருக்கு...
இந்த டேஸ்'க்குத்தாண்டா என்னை விரும்பிருக்கான்னு அவன் மலையாளத்துல சொன்ன ஸ்லாங் கேட்டு இன்னமும் சிரிச்சிட்டு இருக்கேன்...


Sunday, March 6, 2016

கிரிக்கெட் என்னைப் போடா வெண்ணை என்றது !


இந்தியா - பங்களாதேஷ் கிரிக்கெட் மேட்ச் நடக்குறப்போ வெளில எங்கேயும் [[கடைகளுக்கு]] போயிறாதேன்னு நண்பர்கள் சொல்வதுண்டு இங்கே...[[பஹ்ரைன்]]
[[நமக்குதான் கிரிக்கெட்"ன்னா வேப்பங்காய் ஆச்சே...]]
அது தெரியாம நேற்று பெங்காலி லாண்டரி கடையிலப் போயி மூன்று நாளைக்கு முன்பு கொடுத்த துணிமணிகளைக் கேட்டேன்...
ரெடியாக இல்லை என்றான்...ஒரே நாள்ல ரெடியாகிருமே, நான் கொடுத்து மூன்று நாளாச்சே...என்றேன்...பத்து நாளானாலும் முடிஞ்சா தருவேன் இல்லைன்னா தரமாட்டேன், என்ன செய்யனுமோ செய் போ என்றான் கோபமாக...
எனக்கு கண்ணைக்கட்டிருச்சு பிரஷர் ஏறிடுச்சி...விட்டுருவோமா என்ன...?
பேசாம திரும்பி வந்துட்டேன்.
அப்புறமாத்தேன் தெரிஞ்சுது, நான் அங்கே போன நேரம்தான் இந்தியா ஜெயிச்சிருக்கு அவ்வவ்...
இப்பிடித்தான் முன்பு ஒருமுறை பெங்காலி ஹோட்டல்ல போயி சாப்புட்டுகிட்டு இருந்தேன், பெங்காலிங்க கூட்டமா இருந்து டீவில மேட்ச் பார்த்துட்டு இருந்தாங்க...
இந்தியா - பங்களாதேஷ் மேட்ச்...நான் ஒருவன்தான் இந்தியன், பாதி சாப்புட்டுகிட்டு இருக்கும்போதே...பங்களாதேஷ் ஜெயிச்சிருச்சு, அம்புட்டுப் பேரும் என் பக்கமா எழும்பி நின்னு கைத்தட்டி சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்கே, அசடு வழிந்த வண்ணம் சீக்கிரமா கை அலம்பிவிட்டு வெளியேறின சம்பவமும் உண்டு !
நீதி : இடம் பொருள் ஏவல் தெரிஞ்சி செயல்படனும்.


Friday, March 4, 2016

எங்கள் நட்பு வட்டத்தில் இருக்கும் விஞ்ஞானி...!பேஸ்புக்கில் கலக்கிக் கொண்டிருக்கும் [[https://www.facebook.com/deivaoswin.stanley]] ஆஸ்வின் அக்கா'வின் இன்னொரு முகம்தான் நீங்கள் வாசிக்கப்போவது...இந்த சிறப்பு பேட்டி கல்கி குழுமத்தில் வெளி வந்தது !

மனித நடமாட்டமே இல்லாத காடுகளில்தான் தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பாலான நாட்களைக் கழிக்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் கருப்பட்டியூரைச் சேர்ந்த தெய்வ ஆஸ்வின் ஸ்டாலின்.


கடலோரப் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த சதுப்பு நிலக்காடுகளின்  மேம்பாட்டு ஆர்வலராக பல நாடுகளில் களப்பணியாற்றுபவரை சந்தித்தோம்.


"சதுப்பு நிலங்கள், கடலோரம் மற்றும் கடல் வளங்களை ஆராய்ச்சி செய்வதே என் பிரதானப் பணி. முத்துப்பேட்டைக் காடுகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து சதுப்பு நிலக்  காடுகளின் நன்மை குறித்து முழுமையாய் தெரிந்துகொண்டேன், சதுப்பு நிலங்கள் என்பவை அழகான, சுவாரஸ்யமான, கொஞ்சம் சிக்கலான சுற்று சூழல் கொண்டவை...

காட்டுக்குள் செல்லும் போது தேவையான உணவு, தண்ணீரை எப்போதும்  எடுத்து செல்வது வழக்கம், ஆனால் அவை சீக்கிரமே காலியாகிவிடும், நடக்கும் போது அதிகம் பசி ஏற்படுவதினால் உணவு காலியாகிவிடும், குடிக்க தண்ணீர் இல்லாமையால் தவித்து, குட்டையில் கலங்கிய தண்ணீரை கைகுட்டையால் வடிகட்டி குடித்த நாட்களும் உண்டு, குறுக்கும் நெடுக்குமான கால்வாய்களில் நீந்தியும் பல மைல் தூரம் நடந்தும் போயிருக்கிறேன், படகு கவிழ்ந்து சகதியில் சிக்கி வெளியே வர சிரமப்பட்டு இருக்கிறேன், இப்படி பல அனுபவங்கள்...

இரவு நேரங்களில் காடுகளில் டெண்ட் அடித்துத் தங்குவோம், அப்போது பூச்சிகள் கடித்துவிடும், காட்டு எருமைகளையும், குள்ள நரிகளையும் எதிரிலேயே பார்க்க முடியும், இது போல பல ஆபத்துக்களை சந்தித்தாலும், ஆராய்ச்சி மற்றும் இயற்கை மீதுள்ள அக்கறையால் எதையும் கண்டு கொள்வதில்லை, சதுப்பு நிலங்கள் மீதான ஆர்வமும், சாதிக்க வேண்டும் என்ற வெறியும்தான் என்னை உலக நாடுகளிலுள்ள அனைத்து வகையான காடுகளிலும் பயணிக்க வைத்தது, ஆய்வு பணி முடிந்து வீடு திரும்பியதும் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு முன் கூட்டியே தடுப்பூசி போட்டுக்கொள்வேன்..." பணி மீது கொண்ட பற்றின் காரணமாக பொறிந்து தள்ளுகிறார் தெய்வா 
பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரியல் ஆராய்ச்சி நிலையத்தில் எம் பில் மற்றும் தஞ்சாவூரில் கடல் உயிரியல் பாடத்தில் முனைவர் படிப்பு முடித்ததும், உலகநாடுகள் முழுவதும் காடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் களப்பணியில் இறங்கிவிட்டேன்..."

கடற்கரை மற்றும் காடுகளுக்குள் செல்ல முன் அனுமதி பெற வேண்டாமா ?

"...கண்டிப்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும், அந்த கடிதத்துடன்தான் எப்போதும் பயணிப்பேன், ஒருமுறை தமிழக கடலோரப் பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம், எல் டி டி ஈ இயக்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் இங்கே நடமாடுகிறார்" என யாரோ போலீச்சாருக்கு தகவல் சொல்ல, உடனே போலீஸ் வந்துவிட்டது, அதிகாரிகளின் கடிதத்தை காட்டியப் பிறகுதான் விடுவித்தார்கள்,  மலைப்பகுதிகளில் வாழும் கிராம மக்களின் உதவியுடன் செல்லும் போது என்னுடைய பணி எளிதாக இருக்கும்..." 

உங்கள் ஆராய்ச்சியின் மூலம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயங்கள் என்ன ?

"உலகளவில் மாங்குரோவ் காடுகள்தான் சுற்று சூழலுக்கு பாதுகாவலராக உள்ளன, இக்காடுகள் மீன் வளம் உள்ளிட்ட பல்லுயிர் இனப்பெருக்கத் தொட்டிலாகவும், பறவைகள், ஊர்வன, பாலூட்டிகள் போன்ற அனைத்து உயிர்களின் தங்குமிடமாகவும், கடல் அரிப்பை தவிர்க்கும் கேடயமாகவும் உள்ளன, ஒரு ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்து நாம் அடையும் பொருளாதார பயனை விட, ஒரு ஹெக்டேர் சதுப்பு நிலக்காட்டை உருவாக்கினால் 25 மடங்கு கூடுதல் பயனைப் பெறலாம், உலகளவில் சதுப்பு நிலக்காடுகள் அழிக்கப்படுவதால், ஒரு வருடத்திற்கு ஏற்படும் கார்பன் உமிழ்வு அதிகமாகிறது, எனவே சதுப்பு நிலக்காடுகள் மிகவும் இன்றியமையாததாகும்.
இது பற்றி துறை சார்ந்த கட்டுரைகள் எழுதியுள்ளேன், மியான்மர் நாட்டின் சதுப்பு நிலக்காடுகள் குறித்து மூன்று புஸ்தகங்கள், காடுகள் மற்றும் மீன்வள மேம்பாட்டு திட்டங்கள் பற்றியும் எழுதியுள்ளேன், நான் எழுதிய மருத்துவ புஸ்தகங்களும் தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளன.."

இந்த துறைக்கு வர பெண்களுக்கு ஆர்வம் உள்ளதா ?

"இந்திய கலாச்சாரத்தைப் பொறுத்தவரை எல்லாருக்கும் குடும்பத்தில் ஆதரவு கிடைப்பதில்லை கடல், காடு மாதிரியான சூழலில் பெண்களை வேலை செய்ய அனுமதிப்பதும் இல்லை, ஆனால் இயற்கையை காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கொடுக்க  வேண்டிய பொறுப்பும், பங்கும் பெண்களுக்கு இருப்பதாக நினைக்கிறேன், "என்னால் முடியாது" எனக்கு இது தெரியாது" வராது" என்று பெண்கள் ஒதுங்கிவிடக்கூடாது, எந்த துறையில் பணி செய்யப்போனாலும் முயற்சி செய்து பார்த்து வெற்றி பெறுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. 


வாழ்த்துக்கள்...


Wednesday, March 2, 2016

அம்மா"ன்னா அம்மா"தாம்லேய்...!!!

"உடம்பெல்லாம் சேத்துப்புண்ணா இருக்குலேய் தம்பி...வாயேன் ஆஸ்பத்திரி போயிட்டு வருவோம்"

"போம்மா அங்கே போனா ஊசி போடுவாங்க நான் வரமாட்டேன்"

"டாக்டர்கிட்டே அம்மா சொல்லுதேன் ஊசி வேண்டாம்ன்னு வா மக்ளே "

"நீ போ நான் வரமாட்டேன்"

மிரட்டினாலும் மசியவில்லை, ஓடி பிடிக்க வந்தாலும் சிட்டாக பறந்து விடுவேன், ஆஸ்பத்திரி பக்கம் வந்தும் அம்மாவுக்கு டிமிக்கி குடுத்து ஓட்டம்.

ஒருநாள்...

"எலேய் தம்பி...பூலாங்குளத்துல [[எங்க ஊர் குளம்]] போயி குளிச்சிட்டு வருவோம் உன் சேக்காளிங்களை கூட்டிட்டு வா..."

சந்தோஷமாக குளத்துக்கு குளிக்கப்போனேன், குளத்துக்குள்ளே அம்மா என்னைப் பிடிச்சி வச்சிகிட்டு அம்மா பக்கத்துலேயே நின்னு குளி என்ன மக்ளே, பிள்ளைக்கு நீச்சல் தெரியாதுல்லா, அம்மா உன்னை பிடிச்சுக்குவேனாம், நீ அம்மா கூட விளையாடுவியாம் சரியா..."

"அம்மா...மீன் கடிக்குதும்மா...கடிக்குதும்மா..."

"அது உன்கூட விளையாடுது மக்ளே ஒன்னும் செய்யாது, நீ அம்மாகூட விளையாடு..." என்று இறுக்கி பிடித்துக்கொள்ள, நான் அலற...கொஞ்சம் நேரத்துக்குப் பிறகு...

"சரி மக்ளே நீ கரைக்கு போயிரு"

கரைக்கு வந்து பார்த்தா...உடம்பெல்லாம் ரத்த விளாறு.... "நீயெல்லாம்  அம்மாவாடீ..."ன்னு திட்டிகிட்டு வந்துட்டேன்.

ரெண்டே நாள்ல மொத்த சேத்துப் புண்ணும் ஆறிப்போச்சு...

"அம்மா அம்மா புண்ணெல்லாம் ஆறிப்போச்சு பாரு ?"

''புண்ணு ஆறனும்ன்னு ஆஸ்பத்திரி கூப்பிட்டா, ராஸ்கோலு விளையாட்டா காட்டுனே ? அதான் குளத்துக்கு கூட்டிட்டுப்போயி வைத்தியம் செஞ்சேன்"


எந்தவிதமான புண்கள் இருந்தாலும், குளத்து மீன் ஆற்று மீன்கள் கடித்தால் குணமாகிவிடும் என்பது நம்ம அம்மாக்களுக்கு தெரிஞ்சிருக்கு, நம்ம பொண்டாட்டிக்கு ??

அம்மா"ன்னா அம்மா"தாம்லேய்...!!!


நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!