ஏற்கனவே மும்பையில் வீட்டு டாகுமெண்ட்ஸ் மற்றும் சில குடும்ப பிரச்சினைகள் காரணமாக அவசரமாக ஊர் வர கம்பெனிக்கு எழுதி கொடுத்திருந்த வேளையில், அண்ணன் போன் செய்து அம்மாவுக்கு சற்று சீரியஸாக இருப்பதாகவும் சொன்னான், இது அடிக்கடி நடப்பதுதானே, எப்படியும் மும்பை போகிறோம் அப்போது அம்மாவையும் சென்று பார்த்து வந்து விடலாமென்றிருந்தேன்.
2016 டிசம்பர் 14
இரவு வேலையில் இருக்கும்போது காலையிலேயே அண்ணன் போன்...அம்மாவுக்கு ரொம்பவே சீரியஸாக இருக்கிறது மனாசே, நீ உடனே கிளம்பு என்றான்....நானும் மறுபடியும்... அம்மா சீரியஸ் எனக்கு போக வேண்டும் என்று ஜி எம்"மிடம் சொல்ல, ஓகே அரேஞ் பண்ணுறேன்னு சொன்னார்.
டியூட்டி முடிஞ்சி ரூம் போனதுமே மனதில் என்னமோ பரபரன்னு இருந்துச்சு, தூங்கப் போனவன் அதைவிட்டு மார்க்கெட் பக்கமாக போய் வரலாமென்று கிளம்பும் போதே அண்ணன் போன் மறுபடியும்....அம்மா இறந்து போனார்கள் உனக்கு வரமுடியுமா என்றான்...நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு உடனே மேனேஜருக்கு போன் செய்ததும், ஓகே கிளம்பு இப்போவே பாஸ்போர்ட் கொடுத்தனுப்புகிறேன் என்றார்.
நண்பர்களுக்கு போனடித்து விஷயத்தை சொன்னதும், டிராவல்ஸ் ஏஜென்சி நோக்கி ஓடினேன்...அனில் அண்ணனும் வந்துவிட்டார், இதற்கிடையில் ஊரிலிருந்து மறுபடியும் மறுபடியுமாக சொந்தங்களின் போன் கால்களும் வர ஆரம்பிக்க...தளர்ந்து போனேன்...
மணி 12 மதியம், டிராவல்ஸ் ஏஜென்ட் சொன்னது, திருவனந்தபுரத்திற்கு 2 மணிக்கு ஒரு பிளைட் இருக்கு போறீங்களா ? ஒரே ஒரு சீட்தான் இருக்கு என்றார், பாஸ்போர்ட் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை, ஏர்போர்ட் போய் சேர, என் துணிமணிகளை பேக் செய்ய, ரூம் போகவே நேரம் பத்தாது...அதுவுமில்லாமல் எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே ஏர்போர்ட் போயாக வேண்டும்.
அந்த நேரம் என் சித்தப்பாவின் போன் வந்தது ஊரிலிருந்து, என்னப்பா டிக்கெட் கிடைச்சுதா ? கிளம்புறியா"ன்னு கேட்டதும் விஷயத்தை சொன்னேன் அழுது கொண்டே...சரி சரி நீ ஒன்னும் கவலைப்படாதே இங்கே நாங்கள் எல்லாவற்றயும் பார்த்துக் கொள்கிறோம் நீ மெதுவாக கவலைப்படாமல் வா என்றார், சித்தப்பாவின் பிள்ளைகளும் வெளிநாடுகளில் இருப்பதால் அதன் சிரமம் அவருக்கு நன்றாகவே தெரியும் என்பதால் சற்று ஆறுதலாக இருந்தது.
அண்ணனும், அத்தானும் [அக்கா புருஷன்] அதையே உறுதி படுத்தினார்கள், ஆனால் அனில் அண்ணன், இல்லை நீ உடனே கிளம்பு என்று கோபமானார், அம்மா"டா கண்டிப்பா நீ போயித்தான் ஆகவேண்டும் என்றார்.
அனில் அண்ணன்
அண்ணே...நம்ம ஊர்ல 4 மணிக்குள்ளே அடக்கம் பண்ண வேண்டும் [கிராமம் என்பதால்] இப்போ இங்கே மணி 12 என்றால் ஊரில் 2.30, நான் 2மணி பிளேனில் போனாலும், எப்படியும் ஊர் போயி சேர இரவு மணி 2 ஆகிவிடும், அம்மாவை கண்டிப்பாக பார்க்கவும் முடியாது, ஆகவே சித்தப்பா, அண்ணன் சொல்வதுதான் சரியாக இருக்கும் என்றேன், அனில் அண்ணனுக்கு மனசுக்கு அது சமாதானமாகவில்லை என்பதை நன்றாக உணர்ந்தேன்.
சரி அடுத்த டிக்கெட் எப்போ ? அடுத்தநாள் இல்லை, அதற்கடுத்தநாள் இருந்துச்சு, எல்லாம் ஆனை உயரத்துக்கு, காரணம் ? வெக்கேஷன் டைம் இது, அடுத்து கிறிஸ்துமஸ், நியூ இயர்...17 ஆம் தேதி மும்பைக்கு டிக்கெட் இருந்தது, உடனே அதை புக் பண்ணி, மும்பை போயி ஊருக்கே போகாமல் மல்லுக்கு நிற்கும் குடும்பத்தையும் இதையே சாக்கா வச்சு தூக்கிட்டுப் போ"ன்னு அனில் அண்ணன் சொல்ல, உடனே புக் பண்ணிட்டோம்.
14.15.16 மூன்று நாட்கள் ஒரு சராசரி வெளிநாட்டு வாழ் மனிதனின் நரக வாழ்க்கையின் வேதனையை நினைத்துப் பார்த்தால் கண்ணில் ரத்தம் கொட்டிவிடும்....அனுபவித்தேன் அந்த வேதனையை, அம்மாவை நினைத்து நினைத்து நான் நானாகவே இல்லை.
இதற்கிடையில்...ஒரு 5 மணி நேரம் வேலை பார்க்க வரமுடியுமான்னு ஹோட்டல்ல இருந்து அழைப்பு வந்த காமெடியும் நடந்துச்சு !
கலியுகம்" தினேஷ் அடிக்கடி போன் பண்ணிகிட்டே இருப்பார், அண்ணே வாங்கண்ணே வெளியே சுத்திட்டு வரலாம்ன்னு கூப்பிடுவார் மறுத்து விடுவேன், சிலபல சமயம் போனை எடுக்கவே மாட்டேன், ரெண்டு நாட்கள் யார் போனையும் நான் எடுக்கவே இல்லை, சைலண்ட்ல போட்டுட்டு திரும்பி பார்க்கவே இல்லை, மனதின் ரணம் அப்படி.
நிறைய நண்பர்கள் போன் பண்ணியிருந்தார்களாம் ஸாரி நண்பர்களே...
17 தேதி...தினேஷ் போனடித்து "அண்ணே எத்தனை மணிக்கு ஏர்போர்ட் கிளம்புறீங்க சொல்லுங்க கார் எடுத்துட்டு வாரேன்" கேட்டார், அடுத்து அனில் அண்ணன், நான் உன்னை ஏர்போர்ட்டில் விடுறேன் எத்தனை மணிக்கு வரணும்ன்னு சொல்லு என்று கேட்க, இல்லண்ணே தினேஷ் வாறாப்ல, நீங்க வேலையில பிஸின்னு தெரியும் நன்றிண்ணே சொல்ல...இன்னும் பல நண்பர்கள் உதவிக்கு வந்தார்கள், [யாவருக்கும் மனமார்ந்த நன்றிகளை பதிவு செய்கிறேன் இங்கே...]
பஹ்ரைன் ஏர்போர்ட்டில் நானும் தினேஷும்.
அடுத்த நாள் சரியான நேரத்திற்கு கலியுகம் வந்து பிக்கப் பண்ணி ஏர்போர்ட் கொண்டு வந்து விட்டு, வழியனுப்பி சென்றார்....விமானம் வானத்தில் பறந்தது, நினைவுகளோ அம்மாவை நோக்கிப் பறந்தது...
தொடரும்...
வெளி நாட்டு/வெளியூர் வாழ்க்கை தரும் வலி....
ReplyDeleteஉங்கள் அம்மாவின் இழப்பு பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.....
√
ReplyDeleteஎன் இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். அம்மாவுக்கு என் அஞ்சலிகள். முன்பொரு சமயம் அம்மாவைப்பற்றியும் அக்காவைப்பற்றியும் நீங்கள் எழுதியிருந்த பதிவு நினைவிற்கு வருகிறது.
ReplyDeleteவெளிநாட்டு வாழ்க்கையின் சாபம் இது! மனதை தேற்றிக்கொள்ளுங்கள். அம்மா இருந்த இடத்தில் கொஞ்ச நாள் இருந்தால் ரணமான மனது கொஞ்சம் ஆறும்! ஊருக்குச் சென்று வாருங்கள்!
எனது ஆழ்ந்த இரங்கல்கள்... வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுடைய ப்ளஸ் பாயின்ட்களை மட்டுமே சிலாகிக்கும் இந்திய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு, இம்மாதிரி மைனஸ் பாயின்ட்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும், காசுக்காகத்தானே வீட்டை விட்டுப் போனானுன்னு இளக்காரம் வேறு. கனவுகளைத் துரத்திக்கொண்டு, வெளிநாட்டில் வேலை பார்ப்பவனுக்குத்தான் தெரியும் எல்லா அவலங்களும்.
ReplyDeleteமிகவும் கடினமான கால கட்டம்தான். வெளி நாட்டு வாழ்க்கையில் உறவுகள் இழப்புக்களை கேட்கும் போது உணர்வுகள் செத்து பிழைக்கும்.
ReplyDelete