Friday, August 26, 2016

ஒரு கொலையால் வந்த திகில் அனுபவம்...!


நெல்லையில் இருந்து இரவு லேட்டாக நாகர்கோவில் வந்து கொண்டிருந்தேன், நாகர்கோவில் நெருங்க நெருங்க பயணிகளிடம் படபடப்பும் பயமும் பற்றிக் கொண்டது...

இந்து தலைவர் ஒருவரை [ராமகோபாலன் அல்லது ராஜகோபாலன்னு, சரியா நினைவில்லை 1993 or 1994 ] கொன்று [கொலை] விட்டார்கள், கண்டன போஸ்டர்கள், கடையடைப்பு, பஸ் மறியல் என்றாகிவிட...

குளத்து பஸ்டாப்பபில் வந்து இறங்கினேன், ஊர் போகும் பஸ்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு விட, பஸ் நிலையத்தில் தங்குவதோ, ஆட்டோ பிடித்து ஊர் போவதோ முடியாத நிலையாகிவிட்டது...

சரி, ஏதாவது ஒரு லாட்ஜில் தங்கலாமென்றால், அவர்களும் ரூம் தரமுடியாது என்று கதவை சாத்த...
குளத்து பஸ்நிலையத்திலிருந்து எல்லா பஸ்களும் டெப்போ நோக்கி கிளம்பி போயி, பஸ்நிலையம் அம்மணமாக நின்றதை அன்றுதான் பார்த்தேன் !

அப்படியே மேலேறி, தைரியமாக அண்ணா சிலையருகே வந்து நின்றேன், மணி நடுநிசியை தாண்டி இருந்தது...ஒரு வாகனத்தையும் காணோம் மொத்தமாக வெறிச்...

பயம்.... பயம்... கலவர பயம்...திடீரென ஒரு கேரளா பஸ், ஆகாயத்தில் பறந்து வருவது போல வந்து நின்றது, திருவனந்தபுரம் டூ நாகர்கோவில் டூ கன்னியாகுமரி போகும் பஸ்...
மனிதாபிமானம் உள்ள டிரைவர், கண்டக்டராக இருந்திருக்கலாம்..."பேடி இல்லாத்தவர் மாத்திரம் வரு வரு, டைரக்ட் கன்னியாகுமரி போகுன்னு" என்று கத்தினார் கண்டக்டர்...நமக்கு அப்போ மலையாளம் தெரியாதா, கன்னியாகுமரி போகுன்னு"ன்னு சொன்னது மட்டும் புரிய, பயத்தோடு ஏறி அமர்ந்தேன்...

ஹைவேயில் பஸ் காற்றில் பறந்தது என்றுதான் சொல்லவேண்டும்...சாலையோரம் உற்று பார்க்கவே பயம், கல்லெறி விழும் என்ற பயத்தில், ஜன்னல்கள் எல்லாம் அடைக்கப்பட...

இடையில் பஸ் நிறுத்தப்படலாம், தாக்கப்படலாம் என்ற பயத்திலும், அப்படியே கலவரக்காரர்கள், நிறுத்தி நீ எந்த மதம் என்று கேட்டால் என்ன சொல்லவென்று, நான் தேர்ந்தெடுத்தப் பெயர் "ராம்குமார்" 

பஸ் கன்னியாகுமரி பஸ்நிலையம் செல்லுமுன், கன்னியாகுமரி போலீஸ் ஸ்டேசன் முன் நிற்க, அலறியடிச்சு கீழே இறங்கினேன் [குதித்தேன்] பஸ் சிட்டாக பறந்துவிட்டது...

போலீஸ்டேசன் விளக்குகள் ஒன்றுமில்லை, நகராட்சி விளக்குகளுமில்லை, கும்மிருட்டு, கடலலையின் இரைச்சல் எப்போதும் நான் கேட்பதை விட, கோரமாக இருந்தது...

ஊருக்கும் போக முடியாது, என்ன செய்ய என்று யோசிக்க...நண்பன் ஒருத்தன் அங்கே ஒரு லாட்ஜில் வேலை செய்வது நினைவுக்கு வர, பம்மி பம்மி நடந்து சென்றேன்...

லாட்ஜ் விளக்குகள் அணைக்கப்பட்டு, பேய் பங்களா போன்று காட்சி அளிக்க இன்னும் திகில், நண்பன் இல்லையென்றால் என்ன செய்வது ? கண்டிப்பாக கலவரக்காரனென்று போலீஸ் தூக்கி விடுவார்கள்...

மெல்லமாகப் போயி, பலமுறை கதவைத்தட்டியும், ஒரு சத்தமும் இல்லை...ரொம்ப நேரத்துக்குப் பிறகு, இங்கே ரூமில்லை மரியாதையாக போயிரு இல்லன்னனா போலீஸைக் கூப்பிடுவேன்னு, பீதியினில் கூடிய சத்தம்தான் வந்தது.

அதே அதே நண்பனின் குரல்தான்..."லேய் மக்கா நான்தான் மனோ வந்துருக்கேன்"ன்னு சொன்னதும், படாரென கதவு திறக்கப்பட்டு, இரண்டு கரங்கள் என்னை உள்ளே இழுத்து கதவை சாத்தியது.

"ஏலேய் நீ இந்த சாமத்துல இங்க என்னலே பண்ணுத ஊரே கலவரமாயி கெடக்கு ?"

விஷயத்தை சொன்னதும், அடப்பாவி நீ உயிரோடே வந்ததே பெரிய விஷயம், வா வந்து சாப்பிடு என்று சாப்பாடு தந்து, ஜலபுல ஜங் பண்ணிட்டு, "இன்னும் ரெண்டு மூன்றுநாள் நமக்கு ஊர் போகமுடியாது மக்கா, இங்கேதான் இருக்கணும், பஸ், ஆட்டொ, டாக்சி ஒன்னும் வராதுன்னு சொல்லி தூங்கவச்சான்.
அடுத்தநாள் காலம்பரமே எழும்பி, பீச் போயி, தரிசனங்கள் பண்ணிட்டு, வந்தேன், போலீஸ் பாதுகாப்புகள் பலமாக இருந்தது, பகல்ல பயமில்லை, பக்கத்து ஊர்தானேன்னு மனம் ரிலாக்ஸ் ஆச்சு...

ஆனாலும் அந்த சாமத்தில் நாகர்கோவில் குளத்து பஸ்நிலையத்தில் தனியாக நின்றது, இப்போதும் திகிலாகத்தான் இருக்கிறது...!

அடுத்தநாள் செய்திகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கொலை செய்திகள் வந்து கொண்டிருந்தன...!


Tuesday, August 16, 2016

எங்கள் அரசனின் இண்டமுள்ளு...!


நம்ம அரசனின் "இண்டமுள்ளு" விளம்பரம் அடிக்கடி கண்ணில் பட்டாலும், சிலதை ஷேர் செய்துவிட்டு ஒதுங்கி நின்றதுண்டு,   காரணம் எல்லார் மாதிரியும்தான், வாசிப்புத் தன்மை, பொறுமையெல்லாம் சுத்தமா கொறஞ்சி போனதுதான் உண்மை !

நேற்று இலியாஸ் அபுபக்கரின் [பேஸ்புக்] பதிவு பார்த்துட்டு என்னமோ வித்தியாசமா இருக்கும் போலன்னு விளையாட்டா அந்த புஸ்தகத்தை கூரியர்ல அனுப்புய்யான்னு சொன்னேன், அவர்கிட்டே பிடிஎப் பைல்ல இருந்துருக்கு.

"அண்ணே...அனுப்புறேன் ஆனால் அதற்குண்டான காசு அரசன் கையில போயி சேரனும், இல்லைன்னா கொலைகாரனா மாறிடுவேன்"ன்னு பாசத்துல சொல்லி, மெசேஜ்ல அனுப்பி வச்சார்...

டியூட்டில சமயம் கிடைத்தபோது, இதுல என்ன இருக்கப்போகுதுன்னு நினைத்து [யாருலேய் கல்லெடுக்குறது ?] மெதுவாக இண்டமுள்ளை விரித்தேன்...

"பெருஞ் சொம" பாகம்..... அப்பிடியே "கருவாச்சி காவியம்" மாதிரி அப்பிடியே உள்வாங்கி இழுத்துப் போட்டுருச்சு, ஆத்தீ, இதையாடா மிஸ்  பண்ணுனேன்னு மனசு அலறிக்கிட்டு இருக்கு...அதில் வரும் நாயகனைப்போல [மருதன்] நம்ம மனசும் துடிக்குது பார்வதிக்காக...

சும்மால்ல, நான்குநாள் பேஸ்புக் வராம இலியாஸ் இதை தொடர்ந்து வாசிச்சது, இந்த கிராமத்திய அழகுதான், அருமை அருமை...நெஞ்சை தொட்டுவிட்டது அரசன், வாழ்த்துக்கள்...

"அண்ணே காசு காசுன்னு நான் சொல்றது நூறு இருநூறு பணத்துக்காக அல்ல, இந்தப் படைப்பாளிக்கு நாம் அளிக்கும் கவுரவம் என்பதை மறந்திராதீங்க"ன்னு  இலியாஸ் சொன்னது சத்தியமான உண்மை ! [நான் மறுபடியும் சென்னை போகும்போது என் கையாலேயே பணம் கொடுத்துருதேன் சாமி]
சென்னை போயிருந்தபோது, டிஸ்கவரி புக் பேலஸில் வேடியப்பன் அண்ணனின் ஒரு பதிவர் சந்திப்புக்காக நண்பர்கள் அழைத்து சென்றபோது அரசனை நேரில் சந்தித்துப் பேசினேன், அதிர்ந்து பேசாத குணம், பச்சை குழந்தை போல பவ்யமாக காட்சி அளித்தார், இப்பிடி உள்ளே புயல் இருக்குமென்று நினைத்துக் கூட பார்க்கவில்லை, வாவ்...!

கருவாச்சி காவியத்திற்கு பிறகு, கிராமிய மணம் கமழும் இண்டமுள்ளு, நம்ம அரசனை "மண்வாசனையின் அரசனாக" உயர்த்தி விட்டது...வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அரசன்...!

வாசிக்க வாசிக்க அதன் ருசியை உங்களுக்கும் தருவேன்...




Sunday, August 14, 2016

மஞ்சக்காமாலைக்கு ஒரு மரணம் வராதா ?


கல்யாணமான புதிது...நல்லா சாப்பிட்டுக்கிட்டு இருந்த எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை, பசியும் இல்லை...

வீட்டம்மா அவள் அம்மாவிடம் சொல்ல, அவங்களும் வந்து ருசியா சமைச்சு தந்தாலும், சாப்பாடு இறங்கவில்லை, கவலையான அவர்கள் என்னெல்லாமோ கைமருந்து கொடுத்து என் வயிறை அதகளமாக்கினார்கள்.

ஆனாலும் சரியாகவில்லை, அப்போ எதேச்சையாக இதைக் கேள்விப்பட்ட உறவினர் ஒருவர், மஞ்சகாமாலை இருந்தாலும் சாப்பிட மனசு இருக்காதென்று சொல்ல, இரவு சிறுநீரில் சோற்றை இட்டு, காலையில் பார்த்தால் மஞ்சளாக இருக்க...

மும்பையில் எங்கள் ஏரியாவில் [அந்தேரி கிழக்கு] கோல்டோங்கிரி என்ற இடத்தில் ஒரு மூதாட்டி, காசுக்காக இல்லாமல் ஒரு தொண்டாகவே மருந்து கொடுப்பதாக சொல்ல கேள்விப்பட்டு...அங்கே போனோம்.

போனது சாயங்கால வேளையாக இருந்த படியால் அந்த பாட்டி, நாளைக்கு காலை சூர்ய உதயத்திற்கு முன்பு வரவேண்டுமென்று சொல்ல...

அடுத்தநாள் சென்றோம் அதிகாலையில்...கியூ இருந்தது...

உக்கார வச்சு, மூக்கில் [நாம படிக்கும்போது நிப்பில்ல இங்க் ஊத்துவோமே பென்னில்] நிப்பிள் வச்சு மருந்தை உறுஞ்சி உள் மூக்கில் ஊற்றுகிறார், சுர்ரென்று பிடிக்கும், மூன்று நான்கு முறை ஊற்றி விட்டு, கொஞ்சூண்டு குடிக்க சுடவச்ச நெய் தருகிறார்...முடிந்தது.

ஒருமணி நேரம் கழித்து சோடா வாங்கி குடிக்க சொல்கிறார், அப்புறம் இரண்டு நாட்கள் கழித்து வந்து காட்ட சொல்கிறார், என்ன...சோடா குடிச்சுட்டு கொஞ்ச நேரம் தூங்கினதும், சற்று நேரத்திற்கெல்லாம் தும்மல் வர ஆரம்பிக்கிறது...

தும்மலோடு மூக்கில் சளி வர தொடங்க...அப்பிடியே கொஞ்ச நேரமானதும், மூக்கில் சொறிச்சல் மாதிரி வர ஆரம்பிக்கும், சீந்த சீந்த மஞ்சள் மஞ்சளாக சளி கொட்டிக்கிட்டே இருக்கும், கடுப்பாக இருக்கும், மூக்கு காந்தும்...

நாலைந்து மணிநேரம் கழிச்சு அப்பிடியே நார்மல் ஆகி, படிப்படியாக குறைந்து, அப்புறம் லேசாக சளி கட்டியாக போக ஆரம்பிச்சு ஸ்டாப் ஆகிரும், பத்தியம் கிடையாது, அன்று முழுவது புளிப்பு மட்டும் சாப்பிடக்கூடாது, வேற என்ன வேணாலும் சாப்பிடலாம்.

இரண்டுநாள் கழித்து போனதும், ஆளைப் பார்த்ததுமே பாட்டி [நோயின் தன்மையை] கண்டு பிடிச்சிருது, மறுபடியும் அதே மருந்தை ஊற்ற, மறுபடியும் சளி பிச்சிகிட்டு மஞ்சள் மஞ்சுளா கொட்டுச்சு...

மறுபடியும் போனோம், இப்போ குணமாக்கிருச்சுன்னு சொல்லுச்சு பாட்டி...

ஆக, முத்திப் போச்சுன்னா ஆறேழு தடவை மருந்து ஊத்தவேண்டி வரும், எங்கள் குடும்பம் மற்றும் சுற்று வட்டார ஏரியா மக்கள் யாவரும் போயி பயன் பெரும் இடமது, பாட்டியின் கணவர் உயிரோடு இருந்தபோது செய்த தொண்டு, இறக்கும் தருவாயில்தான் இந்த மருந்தின் பார்முலாவை கிழவிக்கு சொல்லிக் கொடுத்தாராம்.

அதேப்போல பாட்டியும் மரிக்கும் தருவாயிலதான், சொந்த மகனுக்கு கூட சொல்லிக் குடுக்காம மருமகளுக்கு பார்முலாவை சொல்லி கொடுத்துட்டு இறந்து போயிருக்கு...!

பாட்டி மருமகள்தான் இப்போ அங்கே டாக்டர், நாம் கொடுக்கும் காசை வாங்கி கொள்கிறார்கள்...!

என் அனுபவம்...பசிக்காமல், சாப்பிடப் பிடிக்காமல் வயிறு எப்போதுமில்லாமல் ஒரு புது மார்க்கமாக தெரிய வந்தால், உடனே மஞ்சக்காமாலை வைத்தியரையும் மறக்காமல் சென்று பாருங்கள்.
-------------------------------------------------------------------------------------------
[[கேரளா நண்பனின் அக்காள் மகனுக்கு மஞ்சகாமாலை முற்றி, வைத்தியர்கள் கைவிட்டு விட்டார்கள், இனி மரணம்தான் என்று...

யாரோ ஒருவர், சாவக்கிடந்தாலும் "பாபநாசம்" கொண்டுபோ பிழைக்க வைத்துவிடுவார்கள் என்று உறுதியாக சொல்ல...
அப்போதே காரில் தூக்கிப்போட்டு பாபநாசம் விரைந்து வந்து, மருந்து கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள்.
பாபநாசம் பஸ்நிலையத்தின்  அருகில் யாரிடம் கேட்டாலும் சொல்லிவிடுவார்கள் வழி.
சிம்பிள் மருத்துவம் இருந்தும், மனிதர்கள் விழிப்புணர்வு இல்லாமல் மரணத்தை தழுவுவது மனதுக்கு சஞ்சலமாக இருக்கிறது.]]

கவிஞர் நா முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.


நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!