Wednesday, July 25, 2012

விவசாய வாழ்வும் என் அம்மாவும்....!

எனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்.......

நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் திரும்பினாலும் ஒன்றாகவே போய் வருவோம், எங்கள் வீட்டிற்கும் பள்ளிக்கும் நடுவில்தான் அவன் வீடு, பள்ளி போகும் போதும் திரும்பும் போதும் அவன் வீட்டில் இருந்து சற்று விளையாடிவிட்டே செல்வது வழக்கம்.


மகேஷின் அம்மாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும், எப்போ போனாலும் யய்யா தம்பி சாப்புடுய்யா சாப்புடுய்யான்னு கொஞ்சும், ஆனாலும் நான் சாப்பிட்டதில்லை, இதை என் அம்மாவிடம் அவர்கள் சொல்லக்கேட்டு என் அம்மா பெருமிதம் அடைவதை பார்த்திருக்கிறேன்.


ஒருநாள் பள்ளி விட்டு வரும்போது நல்ல மழை பெய்து கொண்டிருந்த படியால் மகேஷின் அம்மா என்னை மழை நிக்கட்டும் தம்பி அப்புறமா போகலாம், இருட்டுச்சுன்னா நானே உன்னை கொண்டு வீட்டில் விடுகிறேன் என சொல்லவும், அங்கேயே இருந்தேன் மழை நிற்பதற்காக.....


சற்று நேரத்தில் நண்பனின் இரு தம்பிகளும் தங்கையும் பள்ளியில் இருந்து வந்ததும், அம்மா சாப்பாடு கொடு என நண்பனின் அம்மாவை நச்சரிக்க தொடங்கினார்கள், அம்மாவுக்கோ சங்கடமாக போய்விட்டது காரணம் என்னை வைத்துகொண்டு அவர்களுக்கு உணவு கொடுக்க முடியாது, எனக்கு தந்தாலும் நான் சாப்பிடமாட்டேன், எனவே பிள்ளைகளை அதட்டி கொண்டிருந்தார்கள்.

எனக்கும் நல்ல பசி போதாததுக்கு அங்கே மணம் பரப்பி கொண்டிருந்த இறைச்சி கறி வேறு இன்னும் ஆசையை தூண்டிக்கொண்டிருந்தது, கண்டுக்காமல் இருந்தாலும் பிள்ளைகளின் நச்சரிப்பு தாங்காததாலும், மழை நிற்கிற நிலையில் இல்லை என்பதாலும், மகேஷின் அம்மா என்னிடம் யய்யா கொஞ்சோல சாப்புடுய்யா என பாசமாக கேட்கவும், சரி சொல்லிவிட்டேன்.


அந்த அம்மா அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை, தன் பிள்ளைகளுக்கும் சேர்த்து எனக்கும் இறைச்சி சாப்பாடு பரிமாறினார்கள், நன்றாக சாப்பிட்டேன்....கொஞ்ச நேரத்தில் மழை நிற்கவே, அதுக்கிடையில் என் அம்மாவும் என்னை தேடி வந்துவிட்டார்கள். இருவரும் கொஞ்சம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கிளம்பினோம்.


வீட்டுக்கு வந்ததும் ஊரில் உள்ள மற்ற நண்பர்களோடு விளையாட போய்விட்டேன், இரவு ஆனதும் அம்மாவின் அழைப்பு சத்தம் கேட்டு வீட்டுக்கு ஓடி வந்தேன், அப்பா வியாபார விஷயமாக தூத்துக்குடி போயி இருந்தார். வீட்டுக்கு வந்ததும், எலேய் தம்பி வா சாப்பிடலாம்னு அம்மா கூப்பிடவும், அம்மா நான் சாப்டாச்சு என்று சொன்னேன்.


"எங்கலேய் தம்பி சாப்பிட்டே...?" 

"மகேஷ் வீட்டுல"

"என்னாது மகேஷ் வீட்டுலையா...? எலேய் இங்கே வா"

"என்னம்மா"

"கையை காட்டுலேய் தம்பி"  என் கையை மோந்து பார்த்த அம்மா ஒன்னும் சொல்லவில்லை மாறாக சாப்பாடு பாத்திரங்கள் [[ பானை, சட்டிகள்]] மூடப்பட்டன உடனே...! என்னை வீட்டுக்கு வெளியே கூட்டிப்போன அம்மா...."எலேய் தம்பி இங்கினையே நில்லு"னு சொல்லிட்டு உள்ளே போனார்கள், நான் பேந்த பேந்த முழித்தபடி நின்றிருந்தேன்.


வெளியே வந்த அம்மா கையில் தண்ணீர் வாளியும் குடம் குடமாக தண்ணீரும் வெளியே வந்தது "என்னம்மா இது...?" சித்த பொறுலேய் மக்ளே" என்று சொன்ன அம்மா........என் டிரஸ்ஸை கூட கழட்டாமல் அம்புட்டு தண்ணீரையும் என் மீது ஊற்றினார்கள். எனக்கு ஒன்றும் புரியாமல் அழுது கொண்டிருந்தேன்.


அப்புறம் என் துணியை எல்லாம் கழட்டி விட்டு தன் முந்தானையால் துவட்டி விட்டு வேறு துணி மாட்டி விட்டாள். நான் ஒன்னும் புரியாமல் அழுது கொண்டே கேட்டேன் "ஏம்மா இவ்ளோ தண்ணி என் மேலே ஊத்துன...?" "இல்லப்பா தம்பி உன் உடம்புல அழுக்கு இருந்துச்சுப்பா அதான் அம்மா கழுவி விட்டேன்" என்று சொன்னாலும் எனக்கு என்னமோன்னு டவுட் இருந்து கொண்டே இருந்தது, அம்மா கோபமாக இருக்கும்போது ஒன்னுமே பேசமாட்டேன், அம்மா நார்மல் ஆகிட்டா அம்மாவும் எனக்கு குழந்தைதான் எனக்கு சரிசமமாக விளையாடுவாள் என்னோடு...!

அப்புறம் ஒருநாள் இரவு அம்மாவுடன் படுத்து இருக்கும் போது, அம்மா என் முடிகளை கோதிவிட்டு கொண்டு இருக்கும் போது கேட்டேவிட்டேன் [[அம்மா கோபப்படும் பல புரியாத விஷயங்களை நான் கேட்டு தெரிந்து கொள்வது இங்கேதான்]] "அம்மா எதுக்கும்மா அன்னிக்கு என்மேல அவ்ளோ தண்ணி ஊத்துன...? அம்மாவின் பதில்.....


"எலேய் தம்பி, அவங்க வீட்டுல மாட்டிறைச்சிதான் சாப்பிடுவாங்க நாம சாப்பிடமாட்டோம் தெரியுமில்ல...?"

"எனக்கு எப்பிடிம்மா தெரியும் அவங்க என்ன இறைச்சி வச்சிருக்காங்கன்னு, சரிம்மா இனி எங்கேயும் சாப்பிடமாட்டேன் சரியா..?"

"தெரியும்ய்யா உனக்கு தெரியாதுன்னு, அதான் அம்மா உன்னை அடிக்கலை புரியுதா...?"

"சரிம்மா நாம ஏன் மாட்டிறைச்சி சாப்பிடமாட்டோம்னு சொல்லும்மா"

"மக்ளே......மாடு நமக்காக உழைத்து போடும் தெய்வம் மாதிரி, அது நமக்கு உழைத்து போடும் அளவுக்கு மனுஷன் ஒருத்தனும் உழைக்க முடியாது, அது நம்மை போன்ற விவசாயிகளுக்கு தெய்வம் போல உழைச்சு போடுது, உழைக்கும் சாமியை யாராவது சாப்பிடுவாங்களா சொல்லு பாப்போம்..?"


"அதான் உன் மீது தண்ணீர் ஊற்றி பிரேயர் பண்ணினேன், இனி எங்கே போனாலும் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்னய்யா...?"

"சரிம்மா" [[ ம்ம்ம்ம் நாடோடி வாழ்க்கைக்கு வந்தபின்பு இதையெல்லாம் மறந்து ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவன எல்லாம் சுவாக......ஸாரி அம்மா]]

இப்போதும் மும்பையில் இருந்து ஊர் வரும்போது ராத்திரி வெளியே [[என் வீட்டம்மா இருந்தாலும்]] போய் விட்டு சாப்புட்டுட்டேன்னு சொன்னால், கண்டிப்பாக அம்மா கேள்வி கேட்பாள், எலேய் தம்பி மாட்டிறைச்சி சாப்பிடலைதானே தம்பி...? 


என்னதான் அம்மா கிறித்தவ வாழ்க்கை வாழ்ந்தாலும், இந்து விவசாய குடும்பத்தில் பிறந்த அந்த சுபாவம் அம்மாவுக்கு இன்னும் மாறவில்லை கால்நடைகள், பறவைகள் மீது அம்மாவுக்கு அம்புட்டு பாசம்...! எனக்காக அம்மா கோழி வளர்த்து வைப்பது உண்டு, லீவுக்கு நான் வரும்போது, அதோ அந்த கோழிதான் உனக்காக வளர்த்துட்டு இருக்கேன்னு சொன்னாலும் நான் வேண்டாம் என்று சொல்லுவேன் என்று தெரிந்தே அம்மா அப்படி சொல்வது உண்டு.

இந்தமுறை அம்மா அதே டயலாக்கை சொல்ல....என் பையன் கேட்டுவிட்டான்....ஓடி விரட்டி பிடித்து பாட்டி இப்பவே இதை எனக்கு குழம்பு வச்சு தாங்கன்னு பாட்டியை பிடித்து கொண்டான்.....எப்பா எப்பிடியோ சமாளித்து அன்னிக்கு ஹோட்டலில் இருந்து அவனுக்கு கோழி கறி வாங்கி கொடுத்து சமாளித்தேன்.

அம்மாவுக்கு மாடு, ஆடு, கோழிகள் என்றால் அம்புட்டு பிரியம் அவைகள் மீது.....இந்த தள்ளாத வயதிலும் ஆடு, கோழிகள் வளர்ப்பது உண்டு, ஆட்டுக்கும், கோழிகளுக்கும் அம்மாவின் பாஷை புரியும், அம்மாவுக்கும் அவைகளின் பாஷை புரியும்.

ஆட்டுக்கு அடிபட்டால் காயத்திருமேனி எண்ணெய் போட்டு தடவி விடுவாள், ரெண்டு நாளைக்கு ஒருமுறை தேங்காய் எண்ணெயும் தடவி தேய்த்து விடுவாள், எனக்கு இப்போதும் அது ஆச்சர்யமாக இருக்கும்...! ஆட்டு குட்டிகளுக்கு அம்மா கையால் கஞ்சி எடுத்து வாயில் ஊட்டினால்தான் சாப்பிடும், நாங்கள் ஊர் போனால் என் மகள் கையால் மட்டுமே சாப்பிடும் அந்த குட்டிகள், வேறு யார் கொடுத்தாலும் சாப்பிடாது...!

இப்போதும் மாட்டிறைச்சி சாப்பிட்டாலோ, பார்த்தாலோ என் அம்மாவின் நினைவு வந்து போகும்.........அந்த குளிரில் குடம் குடமாக தலையில் ஊற்றப்பட்ட தண்ணீரும்....!

29 comments:

  1. அட...இவ்ளோ நடந்து இருக்கா...நான் இன்னிக்குத்தான் பீப் பிரியாணி பற்றி போட்டு இருக்கேன்...என்னா ஒற்றுமை...ஆமாம் மக்கா....இப்போ சாப்பிடுற தானே..

    ReplyDelete
  2. //அந்த அம்மா அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை, தன் பிள்ளைகளுக்கும் சேர்த்து எனக்கும் இறைச்சி சாப்பாடு பரிமாறினார்கள், நன்றாக சாப்பிட்டேன்.//
    அன்புடன் தரப்படுவது இறைச்சியாகவே இருந்தாலும் இறைவனே உண்டார் என்றல்லவா புராணமும் கூறுகிறது.

    ReplyDelete
  3. http://www.kovaineram.com/2012/07/msr.html

    கோவையில் இருக்கிறதால் என்னவோ இங்க அதிகம் புழக்கத்துல இருக்கு.அப்புறம் கேரளா போனா அங்கயும் இது தான் இருக்கு.

    ReplyDelete
  4. நினைவுகள் அலைகளாய் நெஞ்சில் பாய்கிறது மக்களே...
    அம்மா கையால் சாப்பிடுற சுகமே தனிதான்..
    ஊரில எடுத்த படங்கள் எல்லாம் இங்கே
    கதை பேசி நிற்கின்றன..

    ReplyDelete
  5. இவ்வளவையும் ஞாபகம் வைத்து எழுதியிருப்பது உங்களின் அம்மா மீது உள்ள அளவில்லாத அன்பை காண்பிக்கறது சார்... படங்கள் சிறப்பு...

    நன்றி.

    ReplyDelete
  6. ”ஆடு”களம் அருமை.

    ReplyDelete
  7. அருமையான கிராமிய மணம் தவழும் படங்களுடன் சுவாரஸ்யமான பகிர்வு.

    ReplyDelete
  8. பசுமையான நினைவுகள் எங்கு சென்றாலும் மறப்பதில்லை. பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  9. மாடு, ஆடு, கோழி எல்லா உசுரும் ஒண்ணுதான். திங்கறதுன்னு முடிவு செஞ்சிட்டா மனுஷனை தவிர எல்லாத்தையும் லபக்கிட வேண்டியதுதான்.

    உங்கள வளக்க அம்மா என்ன பாடு பட்டாங்களோ :)))

    ReplyDelete
  10. அம்மா என்றாலே அன்பு தானே அது ஊர்வன பறப்பவை என்ன அது எல்லாம் கிராமிய் மன ஓட்டம் கால மாற்றம் நாம் எல்லாம் சாப்பிட வேண்டிய நிலை ஆனால் நான் இன்று வரை மாடு சாப்பிடுவது இல்லை ஆனால் சமையல் செய்து கொடுப்பேன் தொழில் ஆச்சே! படங்கள் சிறப்பு!

    ReplyDelete
  11. ஆடுப்படம், கலப்பைமாடு படம் பார்க்கும் போது மீண்டும்` கிராம நினைவு வாட்டுகின்றது!ம்ம்ம்

    ReplyDelete
  12. மலரும் நினைவுகள் அசைபோட்டுட்டீங்க -பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  13. அம்மா வாயில்லாத ஜீவன்கள் மீது வைத்துள்ள பாசத்தையும்
    அம்மா மீது உங்களுக்கு இருக்கும் பாசத்தையும் இந்த அருமையான
    நிகழ்வு உணர்த்தி நிற்கின்றது .படங்களும் பகிர்வும் அருமை தொடர
    வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
  14. இப்படி பார்த்து பார்த்து தங்கமா வளர்த்த பிள்ளை ஆ ஊன்னா அருவாளை தூக்குது....


    படங்களும் பகிர்வும் அருமை !வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. ஆரம்பிச்சிடீரா...போட்டோ போட...!!!

    எவன்யா அது ஹாக் பண்ணிட்டு...திருப்பி தர்றது.....???

    ReplyDelete
  16. //ஆட்டுக்கும், கோழிகளுக்கும் அம்மாவின் பாஷை புரியும், அம்மாவுக்கும் அவைகளின் பாஷை புரியும்.//

    எங்கம்மாவும் இப்படிதான் மனோ.வீட்டில் கோழி இடும் முட்டை மட்டுமே கிச்சன் செல்லும் . .
    அருமையான மலரும் நினைவுகள் .
    உங்க வீட்டு இளவரசி படம் அழகு .எங்க வீட்டிலும் இப்படி கருப்பு நிற ஆட்டுக்குட்டிகள் வளர்த்தோம் .

    ReplyDelete
  17. ஈரமான நினைவுகள் எப்போ புரட்டினாலும் நெஞ்சம் மலரும் அண்ணே

    ReplyDelete
  18. மனதைத் தொட்டது மக்கா....

    ReplyDelete
  19. எழுதும் கலை கை கூடி வருகிறது மனோ. எந்த ஒரு நிகழ்ச்சியையும் ரசனையோடு எழுதுகிறீர்கள் வாழ்த்து.

    ReplyDelete
  20. தாயின் பாசம் தன் மகன் என்றாலும் சரி, தம் வீட்டு விலங்குகள் என்றாலும் சரி அனைவர் மீதும் நீக்கமற நிறைந்துள்ளது என்பதை உணர்த்தியது உங்கள் பகிர்வு.

    ReplyDelete
  21. மாட்டுக்கறி சாப்பிடாமல் இருக்க இத்தனை காரணம் இருக்கா! உண்மையில் உணர வேண்டிய விஷயங்கள். நன்றி மனோ.

    ReplyDelete
  22. // NAAI-NAKKS said...
    ஆரம்பிச்சிடீரா...போட்டோ போட...
    எவன்யா அது ஹாக் பண்ணிட்டு...திருப்பி தர்றது.....???//
    ஹாக் பண்ணினவரே வந்து கேட்டா நாங்க பதில் சொல்லமாட்டோம்ல, என்ன மனோ சரிதானா?

    ReplyDelete
  23. மாடு தெய்வம் என்பதைப் புரிய வைக்க உங்கள் அம்மா எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார்கள்!!

    கிராமத்து அம்மாக்களுக்கு அவர்கள் வளர்க்கும் கோழி, ஆடு முதலியவையும் பிள்ளைகள் தானோ?

    //இப்போதும் மாட்டிறைச்சி சாப்பிட்டாலோ, பார்த்தாலோ என் அம்மாவின் நினைவு வந்து போகும்.........அந்த குளிரில் குடம் குடமாக தலையில் ஊற்றப்பட்ட தண்ணீரும்....!//

    இருங்க... திரும்ப தண்ணி தெளிக்க சொல்றேன்!!

    ReplyDelete
  24. உங்கள் நினைவலை....மாட்டிறைச்சியப் பார்க்குபோதெல்லாம் எப்போதும் இனி வரும் மனோ !

    ReplyDelete
  25. காளை மாட்டை கரையேத்தி நாளாச்சு
    கிராமமெல்லாம் இப்போ டிராக்டர் பேச்சு
    அதை மாத்தி பழயதை சொல்லி ஞாபகப் படுத்தியாச்சு

    நன்றி

    ReplyDelete
  26. அருமையான பதிவு மாம்ஸ்... என் அம்மாவும் இதே மாதிரி தான்...

    ReplyDelete
  27. ஆகச்சிறந்த பதிவு, அண்ணா.. வாழ்த்துக்கள்
    எங்கள் வலைப்பூவின் லிங்க்..
    http://oorsutrii.blogspot.in/

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!