Sunday, October 23, 2016

அல்லாகு அக்பர்...!


மும்பை, மீரா ரோடு பகுதியில் என் அக்காக்கள் இருவர் குடும்பம் இருப்பதால், லீவுக்கு போகும்போது, அந்தேரி ரயில் நிலையத்தில் போயி மின்சார ரயில் பிடித்து, மீரா ரோடு ஸ்டேசனில் இறங்கி ஆட்டோ பிடித்து செல்வது வழக்கம்...

அந்த ரயில் நிலையத்தில் இரெண்டு கைகால்கள் இல்லாதவர், கண்ணும் தெரியாது.... பயணிகள் பிளாட்பாரம் கடந்து செல்லும் பாலம் நடுவில், வழியில்... தன் தெய்வத்தை நோக்கி சத்தமாக அழைத்துக்கொண்டே இருப்பார், பிச்சை கேட்கமாட்டார்...பிச்சை இட பாத்திரம் வைத்துருப்பார்...

ஒரு பத்து வருஷமாவது போக்கிலும் வரத்திலும் அவரைப் பார்க்காமல் வரமாட்டேன், பிள்ளைகள் கூட வந்தால் என்னையும், அவரையும் எதோ உடன் பிறப்பு பாசம்ன்னு கிண்டல் பண்ணுவார்கள்...

இந்தமுறை போனபோது பரபரப்பாக இயங்கும் மீரா ரோடு ரயில்வே ஸ்டேசன் ரொம்ப அமைதியாக இருப்பதாக உணர்ந்தேன், ஆம்...அவருடைய குரல் அங்கே இல்லை...

மனைவியிடம் கேட்டேன், ஆமா கொஞ்சநாளா அந்த ஆளை இந்தப்பக்கம் காணோம் என்றாள்...அக்கா வீட்டில் போயி சாப்பிட மனசில்லை, "என்னடே சாப்பிடாம மொறச்சிகிட்டு இருக்க, என்னாச்சு அக்கா மேல கோவமா ?"

விவரம் தெரிஞ்சதும் "ஆமா தம்பி கொஞ்சநாளா ஆளைக்காணோம் செத்துருக்கலாம்"ன்னு சொன்னதும், சுருக்குன்னு நெஞ்சில ஒரு குத்தல்...

அக்காக்கள் அங்கே குடிபெயர்ந்தபிறகு மீரா ரோடு என்றாலே அவர் சத்தம்தான் நினைவுக்கு வரும்...ஸ்டேசனின் இரண்டு பக்கமும் அவர் சத்தம் கேட்கும்...

இப்போ அந்த ஸ்டேஷன் போகும்போதெல்லாம், பரபரப்பாக இயங்கும் மும்பையை நான் உணர்வதில்லை, அந்த முதியவரின் "அல்லாகு அக்பர்" சத்தம் மட்டுமே காதில் சன்னமாக கேட்டுக்கொண்டிருக்கும், நீங்களும் அந்த வழியாக போனால் உணரலாம்...

நீர் அழைத்து கூக்குரலிட்ட அல்லா உம்மை நித்தமும் காப்பானாக...

[படத்தில் மேலே ஒரு பாலம் தெரிகிறதல்லவா, அதில்தான் நான் சொன்ன சம்பவம்]


Wednesday, October 12, 2016

அம்மா உங்களுக்கு என்னம்மா ஆச்சு ?


எங்கள் ஊரில், ஸ்கூல் போயிட்டு வார பாதையில ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே, திறந்த இசக்கியம்மன் கோயில் ஒன்று இருக்கு, அந்தப்பக்கம் ஆளுங்க போக வரவே பயப்படுவாங்க...ஆனாலும் அந்த வழியாக போயித்தான் ஆகவேண்டும்...பெரிய காடு...இப்போ சிட்டி ஆகிருச்சு.

ஆலமரத்தின் கீழே சின்ன சின்ன சிலைகளாக இருக்கும், நடுவில் ஒரு பெரிய பயங்கரமான நாக்கை தள்ளிக்கொண்டு சிவப்பு சேலையில் ஒரு பெண்ணின் சிலை...

ஒருநாள், விவரம் தெரியாமல் பள்ளி விட்டு வரும்போது, அந்த சிலையிலுள்ள வளையல்கள் காற்றில் ஆடுவதைக் கண்டு, ஆச்சர்யப்பட்டு,  எல்லாம் உருவிகிட்டு வீட்டுக்கு கொண்டு வந்து விளையாடிகிட்டு இருந்தேன்.

எங்கம்மா, இத எங்கே இருந்து கொண்டு வந்தேன்னு கேக்க, சொன்னதும், என்ன நடந்துச்சுன்னே [அடி] தெரியல...அப்புறம் கண்ணைத் தொறந்தப்போ அம்மா இடுப்புல இருக்கேன் அதுவும் அந்தக் கோவில் பக்கத்துல...

அம்மாவுக்கும் உள்ளேப் போகப் பயம்...அந்த ஆலமரத்தடியில் வளையல்களை வீசிவிட்டு திரும்பிப் பார்க்காமல் ஓட...நாமதான் அம்மா இடுப்புல இருக்கோமேன்னு, பின்னாடி ஏதும் துரத்திக்கிட்டு வருதான்னு பார்த்தா...ஒருத்தருமில்லே...

அம்மா, ஓடாதம்மா பின்னால யாருமே வரலைன்னு சொன்னேனா ? மறுபடியும் கண்ணைக்கட்டிருச்சு [அடிதான்] அப்புறம் கண்ணைத் தொறந்து பார்த்தா, எங்கப்பாரு மடியில இருக்கேன்...

"பயத்துக்கே பயத்த காட்டிட்டியே செல்லம்,நீதாம்டா என் சிங்கக்குட்டி"ன்னு கொஞ்சுறாரு, அம்மா கடுகடுன்னு இருந்தாங்க, இப்பத்தான் புரியுது அது எங்கம்மாவைப் பார்த்து அப்பாரு சொல்லிருக்காருன்னு...

என்னா ஓட்டம்டா...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!