Saturday, January 14, 2017

சந்தோஷமான வெளிநாட்டு வாழ்க்கை 5...!



திருநெல்வேலி வந்ததும் போன் பண்ணுங்க மனோ"ன்னு ஆபீசர் சொல்லி இருந்தார், சரின்னு நானும் சொல்லிருந்தேன்...அப்படியே நெல்லை வந்துகிட்டு இருக்கேன் ஆபீசர்.... தங்கச்சி வீட்டுக்குப் போயிட்டு, மாலையில் நாம சந்திப்போம்ன்னு போகிற வழியில் சொல்லிகிட்டே நெல்லைக்கு பயணத்தை தொடர்ந்தேன்...
தங்கையின் வீடு.

பாளையங்கோட்டை சமாதானபுரம் தாண்டி தங்கையின் வீடு, போயி புதிதாக மலர்ந்த குழந்தையைப் பார்த்து சந்தோஷப்பட்டு, பேசிக் கொண்டிருந்தோம், குழந்தையை தொட்டிலில் போட்டிருந்தார்கள் இடுப்புக்கு கீழே துணி மட்டும் கட்டப்பட்டிருந்ததால் குழந்தை தூக்கம் வராமல் அங்கிட்டும் இங்கிட்டுமாக புரண்டு கொண்டிருந்ததை கவனித்த என் வீட்டம்மா...
 தங்கை மகள் காவ்யா"வுடன் என் மகள் ஜோய்.

குழந்தையை நன்றாக குளிப்பாட்டி சற்று இறுக்கமாக துணியைக் கட்டி மறுபடியும் தொட்டிலில் வைக்க...குழந்தை நிம்மதியாக தூங்கிற்று, ஏன்னு கேட்டதுக்கு, "தொட்டிலில் இப்படி உருண்டு புரண்டால் குழந்தைக்கு மேல் வலிக்கும்" என்றாள் மனைவி.

காலையில் காபி குடித்த நினைவு, அப்படியே குழந்தை காவ்யா, திவ்யா அருகில் அமர்ந்தவாறே கட்டிலில் தூங்கிப்போனேன், மத்தியானம் தங்கச்சி வீட்டில் மட்டன் சமையல் செய்து சாப்பிட அழைத்தும், மறுத்துவிட்டு தூங்கிப்போனேன், அம்புட்டு அயர்வு உடலிலும் மனசிலும்...

சாயங்காலம் வரைக்கும் ஆபீசர் மற்றும் விஜயன், நண்பர்கள் பலர் போன் செய்தும் நான் அயர்ந்து தூங்கியதால், தூங்கும் குழந்தைக்கு போன் சத்தம் டிஸ்டர்ப் ஆவதாலும், வீட்டம்மா போனை ஆஃப் செய்துவிட்டாள்...

ஆபீசர், மற்றும் ரமேஷ் சந்திரசேகர் சார், காளிமுத்து சார் மற்றும் பல நண்பர்கள் எனக்காக காத்திருந்துவிட்டு போன் எடுக்காததாலும்  நேரம் ஆகிவிட்டதாலும் கிளம்பி விட்டார்கள் என்று ஆபீசர் சொன்னார்.

ஒருவழியா சாயங்காலம் எழும்பி போனை ஆன் செய்தால், உடனே ஆபீசர் போன்...என்ன மனோ எம்புட்டு நேரமா போன் பண்ணிக்கிட்டு இருக்கோம், போன் ஆஃப் பண்ணி வச்சிருக்கீங்கன்னு அன்புடன் கடிந்து கொண்டார்...

நெல்லை ஆர் எம் கே வி"யில் குழந்தைகளுக்கு துணிமணி எடுக்கும் போது மறுபடியும் ஆபீசர் போன் "மனோ எங்கே இருக்கீங்க ?" பதில் சொன்னதும், சரி அங்கேயே இருங்க நாங்க அங்கே வந்து விடுகிறோம் என்றார், மனைவி குழந்தைகளை அவர்கள் வந்த ஆட்டோவிலேயே திருப்பி அனுப்பிவிட்டு நானும் மகேஷும் அங்கேயே வெயிட் பண்ணினோம்.

ஆபீசரும், நண்பர் குமரேசன் [செட்டியார்ன்னு நாங்க அன்பாக அழைப்போம்] வந்து, பக்கத்திலிலுள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றார்கள், ரமேஷ் சந்திரசேகர் சாருக்கு ஆபீசர் போன்ல லைன் போட்டு பேச செய்தார், கொஞ்ச நேரத்தில் காளிமுத்து சாரும் வந்து விட்டார், அமர்ந்து நலம் விசாரித்து ஆறுதல்கள் சொல்லி தேற்றி, மும்பை வடாபாவ் [[ஆமா திருநெல்வேலியிலேயும் கிடைக்குது] வாங்கி சாப்பிட தந்தார்கள்...
 குமரேசன் செட்டியார், நான், மகேஷ் மற்றும் காளிமுத்து சார்.[ஆபீசர் எடுத்த போட்டோ]

"மனோ, டின்னர் சாப்பாடு ஃபுல் கட்டு கட்டணும்ன்னா ரூம் போட்டுருவோம், நன்றாக அமர்ந்து சாப்பிடலாம், மிதமா சாப்பிடணும்ன்னா நல்ல ருசியான சாப்பாடு கிடைக்கும் ஹோட்டல் இருக்கு அங்கே போயிருவோம், வசதி எப்படின்னு நீங்களே சொல்லுங்க என்றார் ஆபீசர்....சாப்பிட அவ்வளவு விருப்பம் இல்லாததால் மிதமான சாப்பாடு ஹோட்டலுக்கே போவோம் என்றதும்...
குமரேசன் செட்டியார், நான், மகேஷ், ஆபீசர் [போட்டோ எடுத்தது காளிமுத்து சார்]

"சரி நீங்க போயிட்டு வாங்க நான் வீட்டுக்கு கிளம்புறேன், வெளியே சாப்பிட்டா என்னை வீட்ல குழம்பு வச்சிருவாங்க"ன்னு அலறி விடை பெற்றார் ஆபீசர் காளிமுத்து...எங்களை நெல்லை தமிழ்நாடு ஹோட்டலுக்கு அழைத்து சென்றார் ஆபீசர்...

சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே குருஜி"க்கும் கேசவன் பிள்ளை சாருக்கும் ஆபீசர் போனடித்து பேச வைத்தார்...அடுத்து...சுவாதி சுவாமி அவர்களுக்கும் போன் காண்டாக்ட் பண்ணிக்  கொடுத்தார் ஆபீசர்...அவர்களும் போனில் உருக்கமாக ஆறுதல் கூறினார்கள்...

மிதமான சாப்பாடு அன்லிமிட்டை தொடும் வரை ஆறுதலுக்கு போனில் நண்பர்களை அழைத்து பேச வைத்துக் கொண்டிருந்தார் ஆபீசர் என்னை...

சுகமாக வீடு வந்து சேர்ந்தால்...இங்கே ஒரு அலப்பறை...நண்பன் ஒருத்தனை போலீஸ் பிடிச்சு உள்ளே போட்டுட்டாங்கன்னு வீட்டு பொம்பளைங்க பீதியாக்கிட்டாங்கே...மகேஷ் எல்லாரையும் அமர்த்தி என்னை தூங்க அனுப்பிட்டான்...

அடுத்தநாள் காலை, பரபரன்னு எழும்பி ரயில்வே ஸ்டேஷன் ஓட்டம்...ஓடிப்போயி பிளாட்பாரத்தில் நின்ற பின்புதான் சற்று ஆசுவாசம்...கொஞ்ச நேரத்தில் ஆபீசரும் வந்துவிட்டார், வீட்டுக்கு வரவிருந்த ஒரு டாக்டர் விருந்தாளியை கொஞ்சம் பொறுத்து வரசொல்லிவிட்டு இங்கே வந்து விட்டார்...
நெல்லையில் வழியனுப்ப வந்த ஆபீசர், ஜோய், தங்கை மகள் திவ்யா மற்றும் நான்.

8.30 மணிக்கு அவர் வீடு போக வேண்டும், ரயில் தாமதமாக...பிளாட்பாரமும் சேன்ஜ் ஆக...ஆபீசரை கிளம்ப சொன்னேன், முக்கியமான மீட்டிங்...அப்படியே எங்களை வழி அனுப்பிவிட்டு சந்தோஷமாக கிளம்பி சென்றார் ஆபீசர்...
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ஆபீசரும் நானும்.

அடுத்து விஜயன் போன் "மனோ...ரயில்ல ஏரியாச்சா ? தட்கல் டிக்கெட் ஓகேதானே ? அப்போ ரிசர்வேஷன் டிக்கெட்டை கேன்சல் பண்ணிறட்டுமா ? என்று கிளியர் செய்து அவரும் போனில் வழியனுப்பினார்.

அம்மாவின் நினைவுகளை சுமந்த வண்ணம், என்னையும் ரயில் சுமந்து கொண்டு மும்பை நோக்கி விரைந்தது...
அம்மாவின் இறுதி யாத்திரை.

அம்மா மறைவுக்கு இன்று வரை என் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீரும் வரவில்லை, இன்னும் மனசு அதை நம்பவுமில்லை...வீட்டம்மா அடிக்கடி கேட்ட வண்ணமும் மற்றவர்களிடம் சொன்னதுமாக இருப்பாள்...

ஒரே ஒருநாள் இரவு இரண்டு மணிக்கு "அம்மா" என்று ஒரு அலறல் சத்தம் என்னிடமிருந்து வந்ததாக வீட்டில் சொன்னார்கள்...
அம்மா.....

அம்மா.... நீ பரலோகத்தில் உன்னை இரட்சித்த தேவனிடத்தில் இன்பமாக இளைப்பாறு... அங்கே... அதே பரலோகத்தில் ஆண்டவரையும் உன்னையும் தேடி... நானும் வருவேன்...காத்திரு எனக்காக...

எனக்கு ஆறுதல் அளித்த, உதவிகள் செய்த என் எல்லா உறவுகளுக்கும் நான் வணங்கும் தெய்வத்திற்க்கும் கோடானுகோடி நன்றிகளை மனமாரக் கூறிக் கொள்கிறேன் நன்றி நன்றி...

பயணங்கள் முற்றும்.




Friday, January 13, 2017

சந்தோஷமான வெளிநாட்டு வாழ்க்கை 4...!


விஜயனுக்கு போன் செய்து உடனே மும்பை போக ட்ரெயின் டிக்கெட் புக் பண்ண சொன்னேன், காரணம், ஜனவரி 2 ஆம் தேதி நான் பஹ்ரைனில் இருந்தாக வேண்டும் இல்லையெனில் விசா கேன்சலாகிவிடும்.....

அவரும் உடனே எந்த ரயில் மும்பைக்கு இருக்கிறது என்று விசாரித்து, குறிப்பிட்ட தேதியில் வெயிட்டிங் லிஸ்ட் 26 இருப்பதாக சொன்னார், ஒருவேளை கன்பார்ம் ஆகவில்லையெனில் கஷ்டம்...பெண் பிள்ளை கூட இருப்பதால் நெடுந்தூரம் பயணத்திற்கு அது உகந்ததல்ல...எனவே போகும் நாள் முன் வரைப் பார்ப்போம் இல்லையெனில் தட்கலில் எடுக்கலாம் என்றதும், வெயிட்டிங் லிஸ்ட் டிக்கட்டை விஜயன் புக் பண்ணி வைத்துவிட்டார்.
ஊர் ஹோட்டல் அடுப்பு.

மகளுக்கு நம்ம ஊர் ஹோட்டல்களில் கிடைக்கும் வாழையிலை சாப்பாடு மிகவும் பிடிக்கும் என்பதால், காலையில் எழும்பி மகளையும் அழைத்துக்கொண்டு சாமிதோப்பு போயி ஹோட்டலில் தோசை வாங்கி கொடுத்து சாப்பிட வைக்கும் போது விஜயன் போன், "மனோ உங்க ஊருக்கு எப்படி வரணும் ? நாங்க வழுக்கம்பாறையில் நின்னுட்டு இருக்கோம்"ன்னு சொன்னார், வழி சொல்லிக் கொடுத்து விட்டு...

விஜயனும் ஆபீசரும் வருகிறார்கள் என்று மட்டும் வீட்டில் சொல்லி வைத்தேன்...வீடு கன்னியாகுமரி போகும் பாதையில் ரோட்டின் அருகில் இருப்பதால் நானும் விஜயன், ஆபீசரை எதிர் பார்த்து ரோட்டில் நின்றிருந்தேன்...
நானும் ஆபீசரும், கேசவன் பிள்ளை அவர்களும்...

கூட வந்தது நம்ம இம்சை அரசன் பாபு"வும், கேசவன் பிள்ளை சாரும், இன்ப அதிர்ச்சி...வந்து அமர்ந்து ஆறுதல்கள் சொன்னார்கள்...ரொம்ப நாட்கள் கழித்து பார்த்த சந்தோஷம் எல்லார் முகத்திலும்...போதாததுக்கு அரசியல் பேசி என் வீட்டம்மா, அண்ணன், அண்ணியை குலைநடுங்க வைத்துவிட்டு, அதே ஊரில் நண்பன் ராஜகுமாரையும் அவன் வீட்டில் போயி பார்த்துவிட்டு விடை பெற்று சென்றார்கள்...[மிக்க நன்றிகள் நன்றிகள்...]
விஜயன், கை மட்டும் தெரிவது நம் இம்சை அரசன் பாபு.

அம்மா நட்டு வைத்திருந்த வாழைமரத்தில் ஒன்று குலை விட்டு பழுக்கும் தருவாயில் இருந்தது, அநேக செடிகள் வீட்டின் பின்புறம் வளர்த்து வைத்திருந்தார்கள் அம்மா, வாடாமல்லி, கறிவேப்பிலை, துளசி, இன்னும் பெயர் தெரியாத அநேக செடிகள் அம்மாவை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தன...

அம்மா வளர்த்த பூனை ஒன்று வீட்டை சுற்றி சுற்றி அழுது கொண்டே இருந்தது தினமும், சாப்பாடு வைத்தாலும் சாப்பிடவில்லை...

நாகர்கோவில் எக்ஸ்பிரசில் டிக்கெட் ரெடியானதும், திருநெல்வேலியில் ஒரு தங்கைக்கு குழந்தை பிறந்ததை பார்த்துவிட்டு அப்படியே இரவும் தங்கை வீட்டில் தங்கிவிட்டு, அங்கிருந்தே மும்பைக்கு ரயில் பிடித்துவிடலாம் என்று பிளான் பண்ணி...
நாகர்கோவில் திருநெல்வேலி ரோடு.

ஒருநாள் முன்பாகவே தட்கல் டிக்கெட் பெறவேண்டும் என்ற விதி இருப்பதால்...விஜயனுக்கு போன் செய்து, ரிஸர்வேஷனை கேன்சல் செய்துவிட்டு தட்கலில் கன்பார்ம் பண்ண சொன்னேன்...

அவரும் தயங்காமல்...தட்கல் டிக்கெட் எங்கே கிடைக்கும் என விசாரித்ததில்...நம்ம நண்பர் "கூடல் பாலா" மூலம் ஏற்பாடு செய்து தந்தார், முதலில் விஜயன் ரிசர்வ் செய்த டிக்கெட் கடேசி வரை கன்பார்ம் ஆகாமல்தான் இருந்தது, அலட்ச்சியமாக விட்டிருந்தால் பெரும்பாடு பட்டிருப்போம், அநேகமாயிரம் நன்றிகள் விஜயனுக்கு, கூடல் பாலா"வுக்கும்...[டிக்கெட் காசு வெளிநாடு வந்துதான் அனுப்ப முடிந்தது கூடல் பாலா"வுக்கு, விஜயனுக்கு டிக்கெட் கேன்சல் செய்தமைக்கு காசு வெட்டி இருப்பார்கள்]

அடுத்தநாள் காலையில் குடும்பத்தில் யாவரிடமும் கண்ணீரோடு விடை பெற்று...அம்மாவின் நினைவுகளை மறுபடியும் சுமந்த வண்ணம் திருநெல்வேலி நோக்கி காரில் விரைந்தோம்...

அடுத்த பதிவில் முற்றும்.... 




Wednesday, January 11, 2017

வெளிநாட்டு வாழ்க்கையின் சந்தோசம் 3...!


அதிகாலை 3 மணிக்கு ரயில் நாகர்கோவில் சென்றடைந்தது...அங்கே இருந்து ஊருக்கு ஆட்டோ பிடிச்சு கிளம்பினோம்...போகும் வழியில் ரோடெல்லாம் விரிவாக்கம் பண்ணிருந்தாங்க, ஆட்டோக்காரர் பிஜேபி ஆள் போல, மத்திய அமைச்சர் போன் ராதாகிருஷ்ணன் செய்த, செய்யும் வேலைகளை பட்டியலிட்டுக் கொண்டே வந்தார்...சுசீந்திரம் புதிய பாலம் கட்டப்பட்டிருந்தது...தற்போது ஒன்வே மட்டும் திறந்து விட்டிருப்பதாக சொன்னார்...

ஆட்டோ வீடு போயி சேர்ந்ததும்...முன்பு ஆட்டோ சத்தம் கேட்டதும் அம்மா லைட்டைப் போட்டு வெளியே வந்து விடுவார்கள், இப்போது யாருமில்லை...அண்ணன் மட்டும் பக்கத்து வீட்டிலிருந்து வந்து லைட்டைப்போட்டு கொஞ்ச நேரம் பேசிகிட்டு தூங்கப் போயிட்டான்...
அம்மா மற்றும் மனைவியின் அம்மா மும்பை ஜுஹு பீச்சில்... [இருவரும் இப்போது இல்லை]


எனக்குள் வெறுமை...வருத்தம், பலவீனம், அழுகை, குமுறல்...சொல்ல இயலாத பலவித நினைவுகளால் வாசல்படியில் அமர்ந்து எனது மடியில் முகம் புதைத்துக்கொண்டேன்...மனைவிக்கும் இப்போதுதான் மாமியாரின் அருமை தெ[பு]ரிந்து கண்ணீர் வடித்தாள்...இருள் விலகாமலே சற்று சகஜமானேன்...
அப்பாவும் அம்மாவும், அண்ணன் மகனும்...[கன்னியாகுமரி வள்ளுவர் சிலை வருவதற்கு முன்பு, வள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட பாறை தெரிகிறதா ?]


விடியத் தொடங்கியது உலகம்...என் நினைவுகள் மட்டும் இருளில் தள்ளாடியபடி இருந்தது...சொந்தபந்தங்கள் ஒவ்வொருவராக வந்து ஆறுதல் சொல்லத் தொடங்கினார்கள்...அக்கம் பக்கத்தவர்களும் வந்து, அம்மாவுக்கு நல்ல மரணம் என்றார்கள்...என் மனசும் அம்மாவோடு மரணித்துப் போச்சே...

அம்மா படுத்து தூங்கும் கட்டில் நார்களை வெட்டிப்போட வேண்டும் என்றான் அண்ணன், அதை இளைய மகன் நீதான் செய்ய வேண்டிய கடமை என்றார்கள்...மனமில்லாமல் நெஞ்சை கல்லாக்கிக் கொண்டு நார்களை வெட்டி வெறும் கட்டிலாக வைத்தேன்.

ராஜகுமாரும் நானும், விஜயன் முகம் சற்று மட்டும்...[ஆபீசர் எடுத்தது]

நண்பன் ராஜகுமார் வந்து என்னைக் குளிக்க சொன்னான், குளித்து முடித்ததும் வெளியே அழைத்து சென்றான்...பழைய நினைவுகளை மீட்டும் பொருட்டு அவன் என்னை பல இடங்களுக்கும் அழைத்து சென்று ஆறுதல் படுத்திக் கொண்டே வந்தான், அவன் அம்மாவும் போன வருடம்தான் மரித்தார்...அவன் அம்மாவும் என் அம்மாவும், அவன் அப்பாவும், என் அப்பாவும் நெருங்கிய உயிர் நண்பர்கள்...ஒரு தலைமுறை விடை பெற்றாகிற்று, இனி அடுத்து நாம்தான் என்று பேசிக்கொண்டோம்...

செல்போன் சுத்தமாக ஒர்க் ஆகவில்லை, அதற்கும் என் மனசு புரிஞ்சிருக்கும் போல...நிறைய போன்கள்...விஜயன், ஆபீசர், இன்னும் பல நண்பர்கள் போனில், ஆபீசரிடமும் விஜயனிடமும் என் நம்பர் கேட்டு நண்பர்கள், நண்பிகள் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியாத நிலை...
எங்கள் வீட்டின் மேற்குப்புறம் உள்ள உப்பளம், கடேசியாக தெரிவது எங்கள் மாவட்டத்தின் பழையாறு நதி, கடலை சந்திக்க போகுமிடம்...கன்னியாகுமரியில் நீங்கள் பார்க்கும் சூர்ய அஸ்தமனத்தை இங்கிருந்தும் பார்க்கலாம், என் வீட்டின் உள்ளே இருந்தும் பார்க்கலாம்...!

அடுத்த நாள்தான் கொஞ்சம் கூடுதலாக சற்று சகஜமானேன்...நான் ஊருக்குப் போனாலே அக்கம் பக்கம் மற்றும் நண்பர்கள் எங்கள் வீட்டின் அருகிலுள்ள பாலத்தில் வந்து அமர்ந்து கொண்டாட்டங்கள் அரங்கேறும், நான் இல்லாத சமயங்களில் நடந்த எல்லா சம்பவங்களையும் சொல்லி மகிழ்வார்கள்...

இந்தமுறை எல்லாமே சோகமாயிற்று...ஒருத்தர் முகத்திலும் சந்தோசம் கிடையாது...ஒருவேளை நான் அம்மா மரணத்தன்று வந்திருந்தால் இத்தனை சோகம் வந்திருக்காதோன்னு நினைப்பதுண்டு...வெளிநாட்டு வாழ்க்கையின் சோகத்தில் இதுவுமொன்று...!

பயணிப்பேன் அம்மாவின் நினைவோடு...


Monday, January 9, 2017

சந்தோஷமான வெளிநாட்டு வாழ்க்கை 2...!



என் வேதனைகளையும் அம்மாவின் நினைவுகளையும் சுமந்து விமானம் இந்திய மண்ணில் [மும்பை] தரையிறங்கியது, இதே லீவு நேரங்களில் ஜன்னலோர இருக்கை கிடைத்து விட்டால் சிறு குழந்தைபோல மனசு சிலாகிக்கும்...மும்பையில் விமானம் தரையிறங்கும் போது மனசு வானத்தில் பறக்கும்...இந்த முறை ஜன்னல் பிளாஸ்டிக் மூடியை நான் திறக்கவேயில்லை, பக்கத்திலிருந்தவர்கள் மனதில் திட்டி இருக்கலாம், இரண்டும் பெண்கள்...

கஸ்டம்ஸில் பெட்டி ஓப்பன் செய்ய சொல்லி, கொண்டு போன 2 எமர்ஜென்சி லைட்கள் சோதிக்கப்பட்டன, டாக்ஸ் கொடுக்க வேண்டும் என்கிறார்கள், 1200 ஓவா பொருளுக்கு டாக்ஸ்சாம், "அப்பிடியே உடைத்து குப்பையிலே போட்டாலும் போடுவேனே தவிர 5 பைசா தரமாட்டேன்"ன்னு நான் சொன்ன ஸ்லாங் கண்டிப்பா அந்த ஆபீஸருக்கு புரிஞ்சிருக்கும் போல, ஜஸ்ட் செக்கிங் பண்ணிட்டு தருகிறோம்ன்னு உள்ளே கொண்டு போயி செக் பண்ணிட்டு, ஸாரி சொன்னார் அதிகாரி.

சரி இனி பணம் மாற்றலாம்ன்னு அங்கேப் [எக்ஸ்சேஞ்]  போனால் ஏழரை சனியன் அங்கே நட்டகுத்த நின்னு ஆடுச்சு, வேணாம்ன்னுட்டு ஏ டி எம் போனால் 2000 ஓவா மட்டுமே கிடைத்தது...மோடியை ஆசீர்வதித்துவிட்டு வெளியே வந்தால்...என் குடும்பம் எனக்காக வெயிட்டிங்...ஓடி வந்து அணைத்துக் கொண்டனர், அழுகை முட்டினாலும் அடக்கிக்கொண்டு அவர்களுடன் வீடு நோக்கி சென்றேன்.

அங்கே [மும்பை] போனாலும் மனது நம்ம ஊரை நோக்கி... பிறந்த மண்ணை நோக்கி, அம்மாவை நோக்கியே விரைந்து கொண்டிருந்தது...

5 வருஷமாக ஊருக்கு போகாமல் சாக்கு சொல்லி வந்த [வீட்டம்மா] குடும்பத்தை தூக்கிட்டுப் போகணுமே...அவர்கள் நான் மட்டுமே ஊருக்கு போவேன்னு நினைத்தார்கள் போலும், நிறைய பேசிய பின்னரும் மசியாமல் வீட்டம்மா சம்மதித்தாலும், பிள்ளைகளுக்கு லீவில்லை, என்ன செய்யலாமென்று சிந்தனை...

நண்பன் கிருஷ்ணாவையும் மற்றும் நண்பர்களையும் சந்திக்க கிளம்பினேன், நண்பனிடம் விஷயத்தை சொன்னேன், "அண்ணே என்கிட்டே ஐடியா இருக்கு இருங்க இப்பவே அண்ணிக்கு போன் பண்ணுறேன்"ன்னு, போன் பண்ணி அலற வச்சபின்,  மகள் மட்டும் கூட வருவதாக வீட்டம்மா ஒப்புக்கொண்டாள், எனக்கும் அதுதான் வேண்டும், மகனிடம் கேட்டால் லீவுக்கு ஊருக்கு போறேன் டாடி பிளீஸ் என்றான், ஓகே என்றதும் மூன்று பேருக்கும் கிருஷ்ணா நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தட்கலில் புக் செய்து வழியனுப்பினான்.

ரயில் பயணம்...அதுவும் இரண்டுநாள் பயணம்...முதலில் ஆர்வமில்லாமல் இருந்த மகள்...ரயில் கர்ஜத் தாண்டியதும் மலைகள் குகைகள் கண்டதும் பயங்கரமாக உற்சாகமாகி விட்டாள், அந்த உற்சாகம் மனைவியையும் பிடித்துக் கொள்ள, சந்தோஷமாகி விட்டார்கள்...நான் அம்மாவின் நினைவுகளை சுமந்து வந்து கொண்டிருந்தேன்...விபரம் தெரிந்து மகள் என் ஊருக்கு வருவது இப்போதுதான் !

சீவலப்பேரி, கரிசல்மண் சொந்தக்காரி,  ஏன் என் மனைவிக்கு ஊருக்கு வர விருப்பமில்லை ? இதற்கும் ஒரு கசப்பான காரணமுண்டு அவர்கள் குடும்பத்திற்குள், அடுத்து அவள் பிறந்து வளர்ந்தது மும்பையில்...அப்படியே மொத்த குடும்பமும் ஊர் போக்குவரத்து இல்லாமல் அங்கேயே ஒதுங்க...எங்கே நான் இவர்களை ஊரில் கொண்டுபோய் வைத்துவிடுவேனோ என்ற பயம்... [அவங்க வீட்டார் ஏற்படுத்திய பீதி அது] அதனால் குழம்பி என்னையும் குழப்பி நடந்த பிரச்சினைகள் ஏராளம்...அடுத்து இன்னொரு பயம், ஊருக்கு வந்தால் எனது சொந்தங்கள் கேள்வி கேட்பார்கள் அல்லவா ? ஏன் ஊரில் வந்து செட்டில் ஆக மாட்டேன் என்கிறாய் ? என்று... பயம் பயம்...

எப்படியோ.... ரயில் வேகம் பிடித்தது நாகர்கோவில் நோக்கி....

தொடரும்...


Sunday, January 8, 2017

சந்தோஷமான வெளிநாட்டு வாழ்க்கை...!



ஏற்கனவே மும்பையில் வீட்டு டாகுமெண்ட்ஸ் மற்றும் சில குடும்ப பிரச்சினைகள் காரணமாக அவசரமாக ஊர் வர கம்பெனிக்கு எழுதி கொடுத்திருந்த வேளையில், அண்ணன் போன் செய்து அம்மாவுக்கு சற்று சீரியஸாக இருப்பதாகவும் சொன்னான், இது அடிக்கடி நடப்பதுதானே, எப்படியும் மும்பை போகிறோம் அப்போது அம்மாவையும் சென்று பார்த்து வந்து விடலாமென்றிருந்தேன்.



2016 டிசம்பர் 14

இரவு வேலையில் இருக்கும்போது காலையிலேயே அண்ணன் போன்...அம்மாவுக்கு ரொம்பவே சீரியஸாக இருக்கிறது மனாசே, நீ உடனே கிளம்பு என்றான்....நானும் மறுபடியும்... அம்மா சீரியஸ் எனக்கு போக வேண்டும் என்று ஜி எம்"மிடம் சொல்ல, ஓகே அரேஞ் பண்ணுறேன்னு சொன்னார்.

டியூட்டி முடிஞ்சி ரூம் போனதுமே மனதில் என்னமோ பரபரன்னு இருந்துச்சு, தூங்கப் போனவன் அதைவிட்டு மார்க்கெட் பக்கமாக போய் வரலாமென்று கிளம்பும் போதே அண்ணன் போன் மறுபடியும்....அம்மா இறந்து போனார்கள் உனக்கு வரமுடியுமா என்றான்...நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு உடனே மேனேஜருக்கு போன் செய்ததும், ஓகே கிளம்பு இப்போவே பாஸ்போர்ட் கொடுத்தனுப்புகிறேன் என்றார்.

நண்பர்களுக்கு போனடித்து விஷயத்தை சொன்னதும், டிராவல்ஸ் ஏஜென்சி நோக்கி ஓடினேன்...அனில் அண்ணனும் வந்துவிட்டார், இதற்கிடையில் ஊரிலிருந்து மறுபடியும் மறுபடியுமாக சொந்தங்களின் போன் கால்களும் வர ஆரம்பிக்க...தளர்ந்து போனேன்...

மணி 12 மதியம், டிராவல்ஸ் ஏஜென்ட் சொன்னது, திருவனந்தபுரத்திற்கு 2 மணிக்கு ஒரு பிளைட் இருக்கு போறீங்களா ? ஒரே ஒரு சீட்தான் இருக்கு என்றார், பாஸ்போர்ட் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை, ஏர்போர்ட் போய் சேர, என் துணிமணிகளை பேக் செய்ய, ரூம் போகவே நேரம் பத்தாது...அதுவுமில்லாமல் எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே ஏர்போர்ட் போயாக வேண்டும்.

அந்த நேரம் என் சித்தப்பாவின் போன் வந்தது ஊரிலிருந்து, என்னப்பா டிக்கெட் கிடைச்சுதா ? கிளம்புறியா"ன்னு கேட்டதும் விஷயத்தை சொன்னேன் அழுது கொண்டே...சரி சரி நீ ஒன்னும் கவலைப்படாதே இங்கே நாங்கள் எல்லாவற்றயும் பார்த்துக் கொள்கிறோம் நீ மெதுவாக கவலைப்படாமல் வா என்றார், சித்தப்பாவின் பிள்ளைகளும் வெளிநாடுகளில் இருப்பதால் அதன் சிரமம் அவருக்கு நன்றாகவே தெரியும் என்பதால் சற்று ஆறுதலாக இருந்தது.

அண்ணனும், அத்தானும் [அக்கா புருஷன்] அதையே உறுதி படுத்தினார்கள், ஆனால் அனில் அண்ணன், இல்லை நீ உடனே கிளம்பு என்று கோபமானார், அம்மா"டா கண்டிப்பா நீ போயித்தான் ஆகவேண்டும் என்றார்.

அனில் அண்ணன் 

அண்ணே...நம்ம ஊர்ல 4 மணிக்குள்ளே அடக்கம் பண்ண வேண்டும் [கிராமம் என்பதால்] இப்போ இங்கே மணி 12 என்றால் ஊரில் 2.30, நான் 2மணி பிளேனில் போனாலும், எப்படியும் ஊர் போயி சேர இரவு மணி 2 ஆகிவிடும், அம்மாவை கண்டிப்பாக பார்க்கவும் முடியாது, ஆகவே சித்தப்பா, அண்ணன் சொல்வதுதான் சரியாக இருக்கும் என்றேன், அனில் அண்ணனுக்கு மனசுக்கு அது சமாதானமாகவில்லை என்பதை நன்றாக உணர்ந்தேன்.

சரி அடுத்த டிக்கெட் எப்போ ? அடுத்தநாள் இல்லை, அதற்கடுத்தநாள் இருந்துச்சு, எல்லாம் ஆனை உயரத்துக்கு, காரணம் ?  வெக்கேஷன் டைம் இது, அடுத்து கிறிஸ்துமஸ், நியூ இயர்...17 ஆம் தேதி மும்பைக்கு டிக்கெட் இருந்தது, உடனே அதை புக் பண்ணி, மும்பை போயி ஊருக்கே போகாமல் மல்லுக்கு நிற்கும் குடும்பத்தையும் இதையே சாக்கா வச்சு தூக்கிட்டுப் போ"ன்னு அனில் அண்ணன் சொல்ல, உடனே புக் பண்ணிட்டோம்.

14.15.16 மூன்று நாட்கள் ஒரு சராசரி வெளிநாட்டு வாழ் மனிதனின் நரக வாழ்க்கையின் வேதனையை நினைத்துப் பார்த்தால் கண்ணில் ரத்தம் கொட்டிவிடும்....அனுபவித்தேன் அந்த வேதனையை, அம்மாவை நினைத்து நினைத்து நான் நானாகவே இல்லை.

இதற்கிடையில்...ஒரு 5 மணி நேரம் வேலை பார்க்க வரமுடியுமான்னு ஹோட்டல்ல இருந்து அழைப்பு வந்த காமெடியும் நடந்துச்சு !

கலியுகம்" தினேஷ் அடிக்கடி போன் பண்ணிகிட்டே இருப்பார், அண்ணே வாங்கண்ணே வெளியே சுத்திட்டு வரலாம்ன்னு கூப்பிடுவார் மறுத்து விடுவேன், சிலபல சமயம் போனை எடுக்கவே மாட்டேன், ரெண்டு நாட்கள் யார் போனையும் நான் எடுக்கவே இல்லை, சைலண்ட்ல போட்டுட்டு திரும்பி பார்க்கவே இல்லை, மனதின் ரணம் அப்படி.

நிறைய நண்பர்கள் போன் பண்ணியிருந்தார்களாம்  ஸாரி நண்பர்களே...

17 தேதி...தினேஷ் போனடித்து "அண்ணே எத்தனை மணிக்கு ஏர்போர்ட் கிளம்புறீங்க சொல்லுங்க கார் எடுத்துட்டு வாரேன்" கேட்டார், அடுத்து அனில் அண்ணன், நான் உன்னை ஏர்போர்ட்டில் விடுறேன் எத்தனை மணிக்கு வரணும்ன்னு சொல்லு என்று கேட்க, இல்லண்ணே தினேஷ் வாறாப்ல, நீங்க வேலையில பிஸின்னு தெரியும் நன்றிண்ணே சொல்ல...இன்னும் பல நண்பர்கள் உதவிக்கு வந்தார்கள், [யாவருக்கும் மனமார்ந்த நன்றிகளை பதிவு செய்கிறேன் இங்கே...]
பஹ்ரைன் ஏர்போர்ட்டில் நானும் தினேஷும்.

அடுத்த நாள் சரியான நேரத்திற்கு கலியுகம் வந்து பிக்கப் பண்ணி ஏர்போர்ட் கொண்டு வந்து விட்டு, வழியனுப்பி சென்றார்....விமானம் வானத்தில் பறந்தது, நினைவுகளோ அம்மாவை நோக்கிப் பறந்தது...

தொடரும்...


நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!