Wednesday, January 11, 2017

வெளிநாட்டு வாழ்க்கையின் சந்தோசம் 3...!


அதிகாலை 3 மணிக்கு ரயில் நாகர்கோவில் சென்றடைந்தது...அங்கே இருந்து ஊருக்கு ஆட்டோ பிடிச்சு கிளம்பினோம்...போகும் வழியில் ரோடெல்லாம் விரிவாக்கம் பண்ணிருந்தாங்க, ஆட்டோக்காரர் பிஜேபி ஆள் போல, மத்திய அமைச்சர் போன் ராதாகிருஷ்ணன் செய்த, செய்யும் வேலைகளை பட்டியலிட்டுக் கொண்டே வந்தார்...சுசீந்திரம் புதிய பாலம் கட்டப்பட்டிருந்தது...தற்போது ஒன்வே மட்டும் திறந்து விட்டிருப்பதாக சொன்னார்...

ஆட்டோ வீடு போயி சேர்ந்ததும்...முன்பு ஆட்டோ சத்தம் கேட்டதும் அம்மா லைட்டைப் போட்டு வெளியே வந்து விடுவார்கள், இப்போது யாருமில்லை...அண்ணன் மட்டும் பக்கத்து வீட்டிலிருந்து வந்து லைட்டைப்போட்டு கொஞ்ச நேரம் பேசிகிட்டு தூங்கப் போயிட்டான்...
அம்மா மற்றும் மனைவியின் அம்மா மும்பை ஜுஹு பீச்சில்... [இருவரும் இப்போது இல்லை]


எனக்குள் வெறுமை...வருத்தம், பலவீனம், அழுகை, குமுறல்...சொல்ல இயலாத பலவித நினைவுகளால் வாசல்படியில் அமர்ந்து எனது மடியில் முகம் புதைத்துக்கொண்டேன்...மனைவிக்கும் இப்போதுதான் மாமியாரின் அருமை தெ[பு]ரிந்து கண்ணீர் வடித்தாள்...இருள் விலகாமலே சற்று சகஜமானேன்...
அப்பாவும் அம்மாவும், அண்ணன் மகனும்...[கன்னியாகுமரி வள்ளுவர் சிலை வருவதற்கு முன்பு, வள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட பாறை தெரிகிறதா ?]


விடியத் தொடங்கியது உலகம்...என் நினைவுகள் மட்டும் இருளில் தள்ளாடியபடி இருந்தது...சொந்தபந்தங்கள் ஒவ்வொருவராக வந்து ஆறுதல் சொல்லத் தொடங்கினார்கள்...அக்கம் பக்கத்தவர்களும் வந்து, அம்மாவுக்கு நல்ல மரணம் என்றார்கள்...என் மனசும் அம்மாவோடு மரணித்துப் போச்சே...

அம்மா படுத்து தூங்கும் கட்டில் நார்களை வெட்டிப்போட வேண்டும் என்றான் அண்ணன், அதை இளைய மகன் நீதான் செய்ய வேண்டிய கடமை என்றார்கள்...மனமில்லாமல் நெஞ்சை கல்லாக்கிக் கொண்டு நார்களை வெட்டி வெறும் கட்டிலாக வைத்தேன்.

ராஜகுமாரும் நானும், விஜயன் முகம் சற்று மட்டும்...[ஆபீசர் எடுத்தது]

நண்பன் ராஜகுமார் வந்து என்னைக் குளிக்க சொன்னான், குளித்து முடித்ததும் வெளியே அழைத்து சென்றான்...பழைய நினைவுகளை மீட்டும் பொருட்டு அவன் என்னை பல இடங்களுக்கும் அழைத்து சென்று ஆறுதல் படுத்திக் கொண்டே வந்தான், அவன் அம்மாவும் போன வருடம்தான் மரித்தார்...அவன் அம்மாவும் என் அம்மாவும், அவன் அப்பாவும், என் அப்பாவும் நெருங்கிய உயிர் நண்பர்கள்...ஒரு தலைமுறை விடை பெற்றாகிற்று, இனி அடுத்து நாம்தான் என்று பேசிக்கொண்டோம்...

செல்போன் சுத்தமாக ஒர்க் ஆகவில்லை, அதற்கும் என் மனசு புரிஞ்சிருக்கும் போல...நிறைய போன்கள்...விஜயன், ஆபீசர், இன்னும் பல நண்பர்கள் போனில், ஆபீசரிடமும் விஜயனிடமும் என் நம்பர் கேட்டு நண்பர்கள், நண்பிகள் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியாத நிலை...
எங்கள் வீட்டின் மேற்குப்புறம் உள்ள உப்பளம், கடேசியாக தெரிவது எங்கள் மாவட்டத்தின் பழையாறு நதி, கடலை சந்திக்க போகுமிடம்...கன்னியாகுமரியில் நீங்கள் பார்க்கும் சூர்ய அஸ்தமனத்தை இங்கிருந்தும் பார்க்கலாம், என் வீட்டின் உள்ளே இருந்தும் பார்க்கலாம்...!

அடுத்த நாள்தான் கொஞ்சம் கூடுதலாக சற்று சகஜமானேன்...நான் ஊருக்குப் போனாலே அக்கம் பக்கம் மற்றும் நண்பர்கள் எங்கள் வீட்டின் அருகிலுள்ள பாலத்தில் வந்து அமர்ந்து கொண்டாட்டங்கள் அரங்கேறும், நான் இல்லாத சமயங்களில் நடந்த எல்லா சம்பவங்களையும் சொல்லி மகிழ்வார்கள்...

இந்தமுறை எல்லாமே சோகமாயிற்று...ஒருத்தர் முகத்திலும் சந்தோசம் கிடையாது...ஒருவேளை நான் அம்மா மரணத்தன்று வந்திருந்தால் இத்தனை சோகம் வந்திருக்காதோன்னு நினைப்பதுண்டு...வெளிநாட்டு வாழ்க்கையின் சோகத்தில் இதுவுமொன்று...!

பயணிப்பேன் அம்மாவின் நினைவோடு...


6 comments:

 1. உங்கள் மனதில் என்றும் அவர் வாழ்வார்...

  ReplyDelete
 2. அம்மாவின் நினைவுகள் உங்கள் வழிநடத்தும்..... அம்மாவின் இழப்பு அளவிட முடியாதது தான்.....

  ReplyDelete
 3. இழப்புக்களைத் தாண்டிச் செல்வதே மனுஷ வாழ்க்கைன்னு ஆகிப் போச்சு

  ReplyDelete
 4. நெருடலான மூன்று பதிவுகளையும் ஒரு சேர இப்போதுதான் படித்தேன். அம்மாவிற்கு எனது கண்ணீர் அஞ்சலி. உங்கள் அம்மாவின் நினைவுகளிலிருந்து விடுபட முடியாது. எதார்த்த நிலைக்கு வர முயற்சிக்கவும்.

  ReplyDelete
 5. எல்லாவற்றையும் வாசிக்கிறேன் அண்ணா...

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!