மும்பை, பழைய "சாகர் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்" பக்கத்துலதான் போலீஸ் ஸ்டேஷன் இருந்துச்சு பக்கத்துல ஒரு கேன்டீன், என் நண்பனொருத்தன் அதில் மேனேஜராக இருந்தான்.
நண்பர்கள் எல்லாம் கூடுவது அங்கேதான், அங்கு போயிட்டு போலீஸ் ஸ்டேஷன் அருகில்தான் பைக்கில் யு டர்ன் அடிக்க வேண்டும், அப்போது ஹெல்மெட் கட்டாயமில்லை, மாலைநேரம், அதில் நான் யு டர்ன் அடிக்க, ஏர்போர்ட் டிப்பாச்சரில் மேலே இருந்து வேகமாக வந்த பல்சர் என்மீது மோதியது...
கீழே விழுந்ததும் சட்டேன்று எழும்பி விட்டேன் காரணம், அடுத்தும் வாகனங்கள் வரலாம் என்று...பல்சரில் வந்தது இரண்டு காலேஜ் பசங்க...ஒருத்தனை தூக்கிட்டுதான் ஓரத்தில் கொண்டு வந்தார்கள்...
அதற்குள் போலீஸ் மற்றும் என் நண்பர்களும் வந்துவிட...போலீஸ் கம்ளைண்ட் பதிவு பண்றியான்னு கேட்டதும், தூக்கி வரப்பட்ட பையன் "அங்கிள் அங்கிள் கம்பளைண்ட் வேண்டாம் நானும் உங்க அடுத்த ஏரியா பசங்கதான் உங்களை எனக்கு சின்ன வயசிலிருந்தே நல்லா தெரியும்" சொன்னதும் கம்பளைண்ட் பண்ணல...
பையனுக்கு செம அடி இடுப்புல, மற்றவனுக்கு ரத்த விளார்கள்...ஆண்டவர் கிருபையால் எனக்கு ரத்தகாயமும் அடியும் எதுவுமே படலை [ஆனாலும் துள்ளி துள்ளி செக் பண்ண சொன்னார்கள் நண்பர்கள்] அந்தப்பையனை ஆட்டோவில்தான் தூக்கிப்போனார்கள்....
வீட்டுக்குப் போனதும் சீவலப்பேரி வீட்டம்மா, எதுக்கு கண்ணுல பீதியா இருக்குற மாதிரி இருக்கீங்கன்னு கேட்டது வேற விஷயம்...[அது பீதி இல்லைம்மா மரண பேதி]
அப்புறம் நானும் வெளிநாடு வந்துட்டேன் [லீவுக்குப் போனப்போ நடந்தது] அடுத்த லீவுக்குப் போகும்போது, நண்பர்களோடு பேசிக்கொண்டு இருக்கும்போது அந்தப் பையனைப்பற்றி விசாரித்தேன்...
பையனுக்கு இடுப்பு நொறுங்கி போச்சு, கொஞ்சநாளில் இறந்து போனான் என்ற செய்தி மரண இடியாக என்னுள் இறங்கியது, அதிர்ந்து போனேன், அடுத்தநாளே பைக்கை ரயிலில் போட்டு ஊருக்கு அனுப்பிவிட்டு அண்ணனை பிக்கப் பண்ண சொல்லிட்டு, ஊருக்குப்போயி ஒரு நல்ல நண்பனுக்கு இனாமாக கொடுத்து விட்டேன்.
அந்த நிகழ்வு வாழவேண்டிய அந்தப்பையனின் மரணம் எண்ணில் பலமான அதிர்வலைகளை உண்டாக்கிற்று.
அப்புறம் பைக் மேக்சிமம் தொடுவதில்லை, நண்பர்களின் பின்னால் அமர்ந்து போவது மட்டுமே !