கடலிலும் கடற்கரையிலுமாக போனில் பிள்ளைகள் செல்பி எடுத்த போது மனதில் நினைத்தேன், கண்டிப்பாக என் போனை கடலுக்கு பலியாக்கிருவாங்கன்னு, ஆனால் அது நடக்கவில்லை, மாறாக வீட்டில் வந்து சார்ஜரில் போட்டபோது கீழே விழுந்து கோமா"வாகி விட்டது.
ஒருநாள் முன்பாகவே கல்யாண வீட்டிற்கு போகணும்ன்னு குடும்பம் அடம் பிடிக்க, அடுத்தநாள் நாகர்கோவில் [வடசேரி] பேரூந்து நிலையத்தில் குடும்பத்தை பஸ் ஏத்தி விட்டுட்டு [நான் கல்யாண நாளன்று போவதாக உத்தேசம்] விஜயனை பார்க்க கிளம்பினேன், மழை பொழிய கருமேகங்கள் விரைந்து கொண்டிருந்தன.
கன்னியாகுமரி கடல், என் செருப்பையும், வாட்சியையும் பதம் பார்த்திருந்தது, வடசேரி பஸ் நிலையம் அருகில் செருப்பை தைத்து விட்டு, பொடி நடையாக நடந்தே விஜயனை பார்க்க சென்றேன்.
மோனிஷா டிரேடர்ஸ் இடம் மாறிய படியால், இடம் தெரியாமல் விஜயனுக்கு போனைப் போட்டேன், "சேவியர் இறைச்சி கடை எதுத்தாப்புல வாரும்"ன்னு சொன்னார், அவர் பழைய ஆபீஸ் பக்கமும் இறைச்சி கடைகள் இருப்பதால் அந்த பக்கமாக நடந்து சென்றபோது, ஒரு இறைச்சி கடைக்காரர் கூப்பிட்டார் "வாங்க சார் இப்போதான் வெட்டினோம் பிரெஷா இருக்கு"ன்னார், எட்டிப் பார்த்தேன், பன்னியார் தொங்கிட்டு இருந்தார், அதுக்குள்ளே விஜயன் போன் வர, சந்தித்தோம்.
மனுஷன் மார்க்கண்டேயன் போல எந்த மாற்றமும் இல்லாமல் முன்பு பார்த்த அதே கிளாமர் உடம்புடனும், மனசுடனும் இருந்தார், பேச்சில் செமையான தன்னம்பிக்கையும், சந்தோஷமும் தெரிந்தது, மனசுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது, முன்பிருந்ததைவிட ஆபீஸ் இப்போதிருக்கும் இடம் நல்ல சவுகரியமாக இருக்கிறது என்கிறார், எனக்கும் அப்படியே பட்டது.
அப்படியே இம்சை அரசன் பாபுவுக்கு போன் செய்ய...அவர் பிஸியா இருந்தார், ஆபீசரும் பிஸி.
அப்படியே பேசிட்டு இருக்கும்போது எதுத்தாப்புல இருக்கும் ரெண்டு இறைச்சி கடைகள் பற்றி பேச்சி வந்தபோது, சேவியர் கடையில்..... வாங்கிய விலையில் இறைச்சி வெட்டி கொடுப்பார்களாம், மாடு, ஆடு, கோழி ஏதா இருந்தாலும் அதேதான், அப்போ லாபம் ?ன்னு கேட்டபோது விஜயன், "இஷ்டம் போல சொத்து காசு பணம் இருக்கு வேற என்ன வேணும் ?"
"அப்போ நல்லதுதானே விஜயன், மக்களுக்கு சேவை செய்கிறார் போல"
"ரொம்ப ரொம்ப நல்ல மனசு..."
பக்கத்துல இருக்குற இறைச்சிக் கடையும் கொஞ்சம் டெக்னீக்காக லாபம் சம்பாதிப்பதாக சொன்னார், என்ன...... கூட்டமெல்லாம் சேவியர் இறைச்சி கடையில்தான் கியூவுல நிக்குமாம்.
மணிமேடை பக்கமாக வந்தபோது ஒரு மொபைல் கடை தென்பட, "டிஸ்பிளே போயிருச்சு புதுசு மாற்ற எவ்வளவு ஆகும்"ன்னு கேட்டதுக்கு, 4500 ஓவான்னு கூசாம கேட்டான்...
மொபைல் கோமா கதையை கேட்டதும், விஜயன் அவருடைய நண்பனின் கடைக்கு கூட்டி சென்றார், சன்டே என்பதால் எல்லாக்கடையும் பூட்டு என்பதால் டிஸ்பிளே ஐடியா தள்ளிப்போனது.
மத்தியானம் ஆகிவிட்டதால், சாப்பாட்டுக்கு விஜயன் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் லெவலுக்கு பிளான் பண்ணுவது தெரிஞ்சதும், சாதா சின்ன ஹோட்டல்ல வாழையிலை மீன்கறி சாப்பிடுவோம் விஜயன்னு சொன்னதும் மனமில்லாமல் ஒத்துக்கிட்டார்.
சன்டே ஆனதால் அதுவும் தட்டுப்பாடுதான், நாகர்கோவில் தெருக்களில் ஹோட்டலுக்காக அலைந்தும், ஏதோ அஹ்ரகாரத்துக்குள்ளே பைக் போயிகிட்டு இருந்துச்சா...என்னடா மீன்கறி சாப்பாட்டுக்கு அஹ்ரகாரத்துக்குள்ளேயா கூட்டிட்டுப் போவாங்கன்னு நினைக்கும்போதே வண்டி யூட்டர்ன் அடிச்சது, வலது பக்கத்துலேயே அசைவ சாப்பாடு ஹோட்டல்.
நெய் மீனுன்னு பொறிச்ச மீன் வைத்து மீன்கறியும் ஊத்த...கலரெல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு, சாப்பாடுதான் சொதப்பிருச்சு இந்த தடவை, எப்பிடித்தான் சொதப்பினாலும் அவ்வளவு சாப்பாட்டையும் விஜயன் சாப்பிட்டு விட்டார், "என் பிள்ளைகளுக்கும் சொல்லி வளர்கிறேன் மனோ சாப்பாட்டை விரயம் பண்ணக்கூடாதுன்னு" என்று சொல்ல...சோறு மிச்சம் வைக்கணும்ன்னு நான் நினைச்ச பிளான் மண்டைய போட்டுருச்சு.
சரி, மத்தியானம் கழியும் நேரம், விஜயனும் பிஸி, குடும்பமும் நெல்லை போயாச்சு, இன்று முழுவதும் நேரம் போகணுமேன்னு..."விஜயன், தங்கம் தியேட்டர்ல என்னை டிராப் பண்ணிருங்க, இரும்புத்திரை படம் பார்த்துட்டு ஊருக்கு கிளம்பிறேன்னதும், ஒரு மாதிரியா ரோசிச்சார் அப்புறம் ஓ ரைட் என்று டிராப் பண்ணினதுமல்லாமல் படம் துவங்கும் சற்று முன்பு வரை என்னோடே நேரம் செலவிட்டு கிளம்பினார்.
மிக்க நன்றி விஜயன்....
என்னாது இரும்பு திரை"யா ? பாதி வரை ஜொதப்பல், அர்ஜுன் வந்த பின் ஓகே...விஜயன் ரோசிச்சதும் இதுக்குதான் போல.
என் போன் தன் ஜீவனை விட்டதுனால ஒரு போட்டோ கூட எடுக்க முடியலை, எல்லாமே கூகுள் அண்ணாச்சி தந்ததுதான் !
மொபைல் டிஸ்பிளே மும்பையில் வந்துதான் மாற்றினேன், வெறும் 800 ஓவாதான் !