Friday, August 26, 2016

ஒரு கொலையால் வந்த திகில் அனுபவம்...!


நெல்லையில் இருந்து இரவு லேட்டாக நாகர்கோவில் வந்து கொண்டிருந்தேன், நாகர்கோவில் நெருங்க நெருங்க பயணிகளிடம் படபடப்பும் பயமும் பற்றிக் கொண்டது...

இந்து தலைவர் ஒருவரை [ராமகோபாலன் அல்லது ராஜகோபாலன்னு, சரியா நினைவில்லை 1993 or 1994 ] கொன்று [கொலை] விட்டார்கள், கண்டன போஸ்டர்கள், கடையடைப்பு, பஸ் மறியல் என்றாகிவிட...

குளத்து பஸ்டாப்பபில் வந்து இறங்கினேன், ஊர் போகும் பஸ்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு விட, பஸ் நிலையத்தில் தங்குவதோ, ஆட்டோ பிடித்து ஊர் போவதோ முடியாத நிலையாகிவிட்டது...

சரி, ஏதாவது ஒரு லாட்ஜில் தங்கலாமென்றால், அவர்களும் ரூம் தரமுடியாது என்று கதவை சாத்த...
குளத்து பஸ்நிலையத்திலிருந்து எல்லா பஸ்களும் டெப்போ நோக்கி கிளம்பி போயி, பஸ்நிலையம் அம்மணமாக நின்றதை அன்றுதான் பார்த்தேன் !

அப்படியே மேலேறி, தைரியமாக அண்ணா சிலையருகே வந்து நின்றேன், மணி நடுநிசியை தாண்டி இருந்தது...ஒரு வாகனத்தையும் காணோம் மொத்தமாக வெறிச்...

பயம்.... பயம்... கலவர பயம்...திடீரென ஒரு கேரளா பஸ், ஆகாயத்தில் பறந்து வருவது போல வந்து நின்றது, திருவனந்தபுரம் டூ நாகர்கோவில் டூ கன்னியாகுமரி போகும் பஸ்...
மனிதாபிமானம் உள்ள டிரைவர், கண்டக்டராக இருந்திருக்கலாம்..."பேடி இல்லாத்தவர் மாத்திரம் வரு வரு, டைரக்ட் கன்னியாகுமரி போகுன்னு" என்று கத்தினார் கண்டக்டர்...நமக்கு அப்போ மலையாளம் தெரியாதா, கன்னியாகுமரி போகுன்னு"ன்னு சொன்னது மட்டும் புரிய, பயத்தோடு ஏறி அமர்ந்தேன்...

ஹைவேயில் பஸ் காற்றில் பறந்தது என்றுதான் சொல்லவேண்டும்...சாலையோரம் உற்று பார்க்கவே பயம், கல்லெறி விழும் என்ற பயத்தில், ஜன்னல்கள் எல்லாம் அடைக்கப்பட...

இடையில் பஸ் நிறுத்தப்படலாம், தாக்கப்படலாம் என்ற பயத்திலும், அப்படியே கலவரக்காரர்கள், நிறுத்தி நீ எந்த மதம் என்று கேட்டால் என்ன சொல்லவென்று, நான் தேர்ந்தெடுத்தப் பெயர் "ராம்குமார்" 

பஸ் கன்னியாகுமரி பஸ்நிலையம் செல்லுமுன், கன்னியாகுமரி போலீஸ் ஸ்டேசன் முன் நிற்க, அலறியடிச்சு கீழே இறங்கினேன் [குதித்தேன்] பஸ் சிட்டாக பறந்துவிட்டது...

போலீஸ்டேசன் விளக்குகள் ஒன்றுமில்லை, நகராட்சி விளக்குகளுமில்லை, கும்மிருட்டு, கடலலையின் இரைச்சல் எப்போதும் நான் கேட்பதை விட, கோரமாக இருந்தது...

ஊருக்கும் போக முடியாது, என்ன செய்ய என்று யோசிக்க...நண்பன் ஒருத்தன் அங்கே ஒரு லாட்ஜில் வேலை செய்வது நினைவுக்கு வர, பம்மி பம்மி நடந்து சென்றேன்...

லாட்ஜ் விளக்குகள் அணைக்கப்பட்டு, பேய் பங்களா போன்று காட்சி அளிக்க இன்னும் திகில், நண்பன் இல்லையென்றால் என்ன செய்வது ? கண்டிப்பாக கலவரக்காரனென்று போலீஸ் தூக்கி விடுவார்கள்...

மெல்லமாகப் போயி, பலமுறை கதவைத்தட்டியும், ஒரு சத்தமும் இல்லை...ரொம்ப நேரத்துக்குப் பிறகு, இங்கே ரூமில்லை மரியாதையாக போயிரு இல்லன்னனா போலீஸைக் கூப்பிடுவேன்னு, பீதியினில் கூடிய சத்தம்தான் வந்தது.

அதே அதே நண்பனின் குரல்தான்..."லேய் மக்கா நான்தான் மனோ வந்துருக்கேன்"ன்னு சொன்னதும், படாரென கதவு திறக்கப்பட்டு, இரண்டு கரங்கள் என்னை உள்ளே இழுத்து கதவை சாத்தியது.

"ஏலேய் நீ இந்த சாமத்துல இங்க என்னலே பண்ணுத ஊரே கலவரமாயி கெடக்கு ?"

விஷயத்தை சொன்னதும், அடப்பாவி நீ உயிரோடே வந்ததே பெரிய விஷயம், வா வந்து சாப்பிடு என்று சாப்பாடு தந்து, ஜலபுல ஜங் பண்ணிட்டு, "இன்னும் ரெண்டு மூன்றுநாள் நமக்கு ஊர் போகமுடியாது மக்கா, இங்கேதான் இருக்கணும், பஸ், ஆட்டொ, டாக்சி ஒன்னும் வராதுன்னு சொல்லி தூங்கவச்சான்.
அடுத்தநாள் காலம்பரமே எழும்பி, பீச் போயி, தரிசனங்கள் பண்ணிட்டு, வந்தேன், போலீஸ் பாதுகாப்புகள் பலமாக இருந்தது, பகல்ல பயமில்லை, பக்கத்து ஊர்தானேன்னு மனம் ரிலாக்ஸ் ஆச்சு...

ஆனாலும் அந்த சாமத்தில் நாகர்கோவில் குளத்து பஸ்நிலையத்தில் தனியாக நின்றது, இப்போதும் திகிலாகத்தான் இருக்கிறது...!

அடுத்தநாள் செய்திகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கொலை செய்திகள் வந்து கொண்டிருந்தன...!


5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ம்........ம்.........பயங்கரம் தான்//////அது ராம்கோபாலன் தான்.

    ReplyDelete
  3. பயங்கரமான அனுபவம்தான்!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!