Showing posts with label பதிவர் அறிமுகம். Show all posts
Showing posts with label பதிவர் அறிமுகம். Show all posts

Friday, April 22, 2011

பதிவர் அறிமுகம் 2

சின்ன குழந்தையாக இருந்தபோது நாம் அம்புலிமாமா கதைகள் படிச்சு ரசிச்சிருக்கோம், அதே மாதிரி இப்போ உள்ள சூழ்நிலைக்கேற்ப எளிமையான எழுத்தில் கதை எழுதி அதில் சூப்பரான அறிவுள்ள கருத்துகளை மனதில் பதிக்கும் விதமாக எழுதி வருகிறார் நான் கீழே சொல்லும் பதிவர். 

அவர் எழுத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது எனது அங்கலாயிப்பாக இப்போதும் இருக்கிறது.....!!!! 

அவருடைய பதிவுக்கு எப்போ  நான் கமெண்ட்ஸ் போட்டாலும், உடனே நன்றி சொல்லி மெயில் அனுப்பும் பண்பு எனக்கு இன்னும் அவங்க மீது மரியாதையை ஏற்படுத்தியது....

பாருங்க அவருடைய அறிமுகமே எவ்வளவு அக்கறையாக இருக்கிறது என்று..


எதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், 
வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே
 உங்கள் பாட்டியின் குறிக்கோள்.. 
 இப்படிக்கு 
ருக்மணி சேஷசாயி

இவர்கள் லிங்க் : http://chuttikadhai.blogspot.com/2011/04/65th.html

65th தன் கையே தனக்குதவி

தன் கையே தனக்குதவி.
ஒரு கிராமத்தில் கந்தசாமி  என்பவர் வசித்து வ்ந்தார்.அவருக்கு வடிவேலு என்ற ஒரு மகன் இருந்தான். அவ்வூரில் பத்தாம் வகுப்புப் படித்து வந்தான்.

அவர்களுக்கு அந்த ஊரில் கொஞ்சம் நிலம் இருந்தது. கந்தசாமி அந்த நிலத்தில் பயிரிட்டிருந்தார். நேரம் கிடைக்கும்போது வடிவேலுவும் பயிரைப் பாதுகாக்க வயலுக்குச் செல்வது வழக்கம்.அந்த வருடம் நல்ல மழை பெய்ததால் கந்தசாமியின் நிலத்தில் நல்ல விளைச்சல் கண்டிருந்தது. தினமும் காலைவேளையில் தன் மகன் வடிவேலுவை அழைத்துக் கொண்டு விளைந்து கதிர் முற்றிய பயிரைப் பார்த்துச் செல்வார். வடிவேலுவும் பயிர் பற்றிய கேள்விகளை அவரிடம் கேட்பான் கந்தசாமியும் மகிழ்ச்சியுடன் அவனது கேள்விகளுக்குப் பதிலுரைப்பார்.

      தினமும்வயல் வரப்பில் நின்று இவர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள். அந்த வயலில் விளைந்த பயிர்களுக்கிடையே ஒரு குருவி கூடு கட்டித் தன் குஞ்சுகளை வளர்த்து வந்தது. தினமும் அப்பாவும் மகனும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் அந்தக் குஞ்சுகள். மாலையில் வீடு திரும்பும் தங்களின் தாயிடம் வடிவேலுவும் கந்தசாமியும் பேசிக்கொண்டதைச் சொல்லும்.

      அன்று தாய்க் குருவி வழக்கம்போல இரை தேடப் புறப்பட்டது. புறப்படும் முன் தன் குஞ்சுகளிடம் அப்பாவும் மகனும் பேசிக் கொள்வதைக் கவனித்துத் தன்னிடம் கூறும்படிக் கூறிவிட்டுச் சென்றது. வழக்கம்போல கந்தசாமி தன் வயலுக்கு வந்து பார்வையிட்டார். 

      அந்த வயல் முழுவதும் கதிர் முற்றித் தலை சாய்ந்திருந்தது. கந்தசாமி தன் மகனைத் திரும்பிப் பார்த்தார்.
"வேலு, நம்ம வயலில் கதிர் முற்றித் தலை சாய்ஞ்சிடுச்சு. இனிமேல் அறுவடை செய்திடலாம். நீ நாளைக்கு நம்ம கதிரை அறுக்க ஆளுங்களைக் கூட்டி வந்துடு." என்று கூறியபோது வடிவேலுவும் "சரி அப்பா" என்று கூறினான். 

அன்று மாலையில் தங்களின் தாய்க் குருவி வந்தவுடன் குஞ்சுகள் கீச் கீச்சென்று கத்தித் தங்களின் அச்சத்தைத் தெரிவித்தன. செய்தி என்ன என்று கேட்டபோது குஞ்சுகள் அழுது கொண்டே அறுவடை நடக்கப் போவதைத் தெரிவித்தன.

அந்தத் தாய்க் குருவியோ சற்றும் அலட்டிக் கொள்ளாமல் தன் குஞ்சுகளுக்கு தைரியம் கூறிற்று."குழந்தைகளே, நிலத்துக்கு உரியவர் தன் மகனிடம் தானே சொல்லியிருக்கிறார். நீங்கள் பயப்படாமல் இருங்கள்."

சமாதானம் கூறிய தாய்க் குருவி மீண்டும் மறுநாள் இரைதேடப் புறப்பட்டது.அன்றும் கந்தசாமி வயலுக்கு வ்ந்தார்.
தன் மகனைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டார்."வேலு, நாளைக்கு நீயே போய் ஆட்களை அறுவடைக்குக் கூட்டிவா." என்று கடுமையாகக் கூறினார்.அவனும் "சரி அப்பா" என்று அச்சத்துடன் பதிலளித்தான்.

அன்று மாலை வழக்கம்போலத் தாய்க்குருவி தன் கூட்டிற்கு வந்தது. அன்றும் கந்தசாமியும் வடிவேலுவும் பேசிக் கொண்டதைக் கூறின குஞ்சுகள்.அவற்றைப் பார்த்துத் தாய்க் குருவி "பயப்படாதீர்கள். அவர் அறுவடை செய்ய மாட்டார். அவர் அறுவடை செய்வதாகத் தெரிந்தால் நான் வீடு மாற்றிவிடுவேன்." என்று கூறித் தைரியமாக இருக்கும்படிக் கூறியது தாய்க் குருவி.

மறுநாள் காலையும் இரைதேடப் புறப்பட்டது தாய்க் குருவி. வழக்கம்போல கந்தசாமி என்ன பேசுகிறான் என்பதைக் கேட்டுத் தன்னிடம் கூறும்படி கூறிச் சென்றது தாய் குருவி. அன்று கந்தசாமி வடிவேலுவுடன் வராமல் தனியே வ்ந்தார். கதிர்கள் படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கோபம் கொண்டார்.

பின் தனக்குள் பேசிக் கொண்டார்."சே, என்ன பையன் இவன். ஒரு ஏற்பாடும் செய்யாமல் விட்டு விட்டானே. இனி அவனை நம்பிப் பயனில்லை.நாமே களத்தில் இறங்கவேண்டியதுதான்." என்று புலம்பியவாறே வீடு நோக்கி நடந்தார்.  

மாலையில் வீடு திரும்பிய தாய்க் குருவியிடம் குஞ்சுகள் முறையிட்டன. நாளைக்கு அவரே களத்தில் இறங்கப் போகிறார். இச் செய்தியைக் கேட்ட தாய்க் குருவி" நான் வேறு இடம் பார்த்து வரும் வரை பத்திரமாக இருங்கள். நாம் வேறு வீடு கட்டிக்கொண்டு போய்விடலாம்." என்று கூறிச் சென்றது.

இப்போது வேறு வீட்டுக்குக் குடிவந்து விட்டது அந்தக் குருவிக் குடும்பம். அப்போது அந்தக் குருவிக் குஞ்சுகளில் சற்று கெட்டிக்காரக் குஞ்சு கேட்டது."அம்மா, மூன்று நாட்களாக இடம் மாற்றாத நீ இப்போது மட்டும் ஏன் மாற்றினாய்." 

"அதுவா, மூன்று நாட்களாக அந்த முதலாளி மற்றவர் உதவியை நாடினார். அதனால் அவர் வேலை நடக்காது என்று தெரிந்து  கொண்டேன். ஆனால்  இப்போது தானே அந்த வேலையைச் செய்வதாகக் கூறியபோது இனி அந்தவேலை முடிந்துவிடும் எனப் புரிந்து கொண்டேன். இனியும் நாம் அங்கிருப்பது நமக்கு ஆபத்து அதனால் வேறு பாதுகாப்பான இடத்தைத் தேடி வந்துவிட்டேன்."

"அம்மா, தன் கையே தனக்குதவி என்பதை அந்தப் பெரியவர் இப்போது புரிந்து கொண்டிருப்பார் இல்லையா?" என்று கூறிச் சிரித்தது அந்தப் பொல்லாத புத்திசாலிக் குருவி.

தாய்க் குருவியும் சிரித்தபடியே "அவர் புரிந்து கொண்டாரோ இல்லையோ நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்"என்று கூறித் தன் குஞ்சுகளை அணைத்துக் கொண்டது.


டிஸ்கி : உங்கள் கனிவான ஆதரவு கிடைத்தால் இன்னும் தொடருவேன்....


Tuesday, April 19, 2011

பதிவர் அறிமுகம்


எனது "அரபியின் ரகளை" பதிவை எதேச்சையாக படித்த பஹ்ரைன் பதிவர் M G : ரவிகுமார் அவர்கள், நானும் பஹ்ரைன்லதான் இருக்கிறேன் போன் பண்ணமுடியுமான்னு போன் நம்பர் பின்னூட்டத்தில் கொடுத்தார். படித்ததும் போன் செய்தேன். அருமையாக பேசினார். மிகவும் பாராட்டினார், அவரோடு உரையாடியது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. நண்பன் "கலியுகம்" தினேஷுக்கு அப்புறம் இவரை மீட் பண்ண இருக்கிறேன் விரைவில்.....

கீழே அவர் லிங்க்...


M G : ரவிகுமார்..

இவரின் பதிவை படித்து ஆச்சர்யமாக இருந்தது. அருமையான, உபயோகமான பதிவுகள்...!!! இப்பிடி இன்னும் எத்தனையோ நல்லா எழுதுற வலைபூக்கள் வெளிச்சத்துக்கு வராமலே இருப்பது ஆச்சர்யமா இருக்கு. இதோ அதில் ஒன்று M G : ரவிகுமாரின் [[இது கார்க்கி அவர்களின் வேண்டுகோள் படி]] பதிவு ஒன்று உங்களுக்காக....
இது உபயோகமுள்ளதா இல்லையான்னு பின்னூட்டத்துல சொல்லணும், இல்லைனா மொக்கையா [[கவிதை]] எழுதி கண்ணுல ரத்தகண்ணீர் வரவச்சிருவேன் ஹி ஹி ஹி ஹி.....


சிறப்பு அடையாள அட்டை - உதவுவோம்

டிஸ்கி: சக கார்க்கி அவரின் பதிவில் கேட்டுக் கொண்ட படி அவரின் பதிவை
அப்படியே எடுத்து இங்கே ஒட்டியுள்ளேன்!.....மிக்க நன்றி சகா!..

சென்ற ஆண்டிலிருந்து, பாரத அரசு, சிறப்பு அடையாள அட்டை வழங்குவதற்கு முயற்சிகள் எடுத்து ஆணையம் அமைத்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதன் தகவல்களை இங்கேகாணலாம்.

பாரத நாடு, மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாமிடத்திலுள்ளது, அதனால், இந்த சிறப்பு அடையாள அட்டை வழங்குதல் என்பது மிகவும் கடினமான பணி.
இந்தப் பதிவின் நோக்கமே, நம்மால் எப்படி இத்திட்டத்திற்கு உதவ முடியும் என்பதற்கான மெய்நிகர் கலந்துரையாடலே.

நம் நாட்டில், மதம், மொழி, இனம், சாதி, சாதிய உட்பிரிவு, நண்பர்கள் குழு, கலைக் குழு போன்ற லட்சக்கணக்கான (ஏன் கோடிக்கணக்கான) சங்கங்கள் உள்ளது. இதில் பதிவு பெற்ற / பதிவு பெறாத சங்கங்கள் என்று வகைப்படுத்தலாம். ஏனெனில், அரசின் பதிவு பெறாத சங்கங்கள் மூலம் தனி நபர் சேவையாற்ற முடியுமே ஒழிய, சிறப்பு அடையாள அட்டை ஏற்படுத்தும் பணியில் பங்கு கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை. எனினும், சிறப்பு அடையாள அட்டை ஆணையம் இவ்விஷயத்தில் தன்னார்வ தொண்டு புரிய விருப்பமுள்ள தனி நபர் மற்றும் நிறுவனங்களையும் பங்கு பெறுவதற்கு வழி வகைகளை செய்துள்ளது.

அதன் விவரங்கள் இங்கே.
இத்திட்டத்தில் பங்கு பேர விருப்பமுள்ள, தன்னார்வ தொண்டு புரிய விருப்பமுள்ள தனி நபர் மற்றும் நிறுவனங்கள் செய்ய வேண்டியது.

தனிநபர்:
முதலில் உங்களின் அனைத்து அரசு ஆவணங்களையும் சரியாக வைத்துக் கொண்டு, பின் வரும் மின்னஞ்சலுக்கு (webadmin-uidai@nic.in) தகவல் அனுப்பவும். பிறகு அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படவும்.(நண்பர்களே: அந்த மின்னஞ்சலுக்குரிய நடவடிக்கை போன்றவை இந்தப் பதிவைத் தாண்டிய விஷயங்கள், அதனால் சொல்ல முடியவில்லை).

நிறுவனங்கள் (பதிவு பெற்ற நிறுவனங்கள்):
பதிவு பெற்ற சபைகள், நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், நண்பர் குழு அமைப்புகள், நற்பணி மன்றங்கள் இந்த சிறப்பு அடையாள அட்டை திட்டத்தில் விருப்பமுள்ள உறுப்பினரையோ அல்லது உறுப்பினர் குழுவையோ
அமைக்கலாம்.
அவ்வாறு அமைக்கப்பட்ட உறுப்பினரோ/குழுவோ முதலில் அந்த அமைப்பினைச் சேர்ந்த உறுப்பினர்களின் பின் வரும் அரசு ஆணையங்களை சரி பார்க்கலாம்.
௧. பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate).
௨. பிறப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate).
௩. சமுதாயச் சான்றிதழ் (Community Certificate).
இம்மூன்றுமிருந்தால், ஒருவரின் அடிப்படை விவரங்கள் அரசில் பதிவு செய்யப்படுள்ளதாகக் கொள்ளலாம்.
இது தவிர,
௪. வாக்காளர் அடையாள அட்டை (Voter's Identity Card).
௫. குடும்ப அட்டை (Family/Ration Card).
௬. (தனிநபர்) நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number).
௭. கடவுச்சீட்டு (Passport).
மேற்கூறிய ஏழு ஆவணங்களிருந்தால், நம் நாட்டில் பிறந்த ஒருவரின் அனைத்து விவரங்கள் அரசில் பதிவு பெறப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.
(இந்த ஆவணங்கள் மட்டும் தானா, அல்லது வேறு ஏதாவது உள்ளதா என்பது தெரியவில்லை ?)
முதல் முயற்சியே, அவர்கள் உறுப்பினர்கள் மேற்கூறிய ஆவணங்கள் வைத்திருக்கிறார்களா என்பதை சரி பார்ப்பதே.
இரண்டாவதாக, இதில் எதாவது ஒரு ஆவணம் இல்லையென்றால், அதைப் பெற உதவுவது, அது சாத்தியமா ? (நம் நாட்டில் நிலவும் நடை முறைச் சிக்கல்கள் தெரிந்துள்ளதால்) தெரியவில்லை.

இறுதியாக, மேற்கூறிய ஆவணங்களை வைத்துள்ள உறுப்பினர் விவரங்களை, மென்பொருள் வடிவாக்கி, சேமித்து, மூன்றுக்கு மேற்பட்ட மென்தகட்டில் (CD/DVD) பத்திரப்படுத்திவிட்டு, இது தவிர தனியாக பத்திரப்படுத்திய மென்தகடை (CD/DVD)'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சமர்பிக்க வேண்டியது.
இவ்வாறு, ௧௦௦ (நூறு) உறுப்பினர் கொண்ட ௧௦ (பத்து) நிறுவனங்கள் செய்தால், குறிப்பிட்ட கால அளவிற்குள், ௧௦௦௦ (ஆயிரம்) இந்தியர்களின் தகவல்கள் 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்.

கல்வி நிறுவனங்களின் பங்கு:
பள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிலையங்கள் தங்களிடம் பயில்வோர் மற்றும் பணி புரிவோர் விவரங்களை 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு வழங்கலாம்'.
இதன் மூலம் அரசின் பணிச் சுமை குறைவதோடல்லாமல், கணிசமான தனி நபர்களின் துல்லியமான விவரங்கள் பிழையின்றி 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்.

பதிவராக:
தமிழ்ப் பதிவராக, நாமும் இவ்விஷயத்தில் சிறு அக்கறை எடுத்துக் கொண்டு, நம்மிடமுள்ள ஆவணங்களையும் சரி பார்த்து விட்டு, நம்மிடம் இல்லாத ஆவணத்தை பெற்று, நம்குடும்பத்தினர் ஆவணங்களையும் பெற்றுக்கொண்டு. தனி நபராக நம் நண்பர்கள் உறவினர்களின் தகவல்களை (குறைந்தது ஐம்பது நபர்கள்) 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சமர்பிக்கலாம்.
ஆயிரக்கணக்கான, தமிழ்ப் பதிவர்களில் பத்து பதிவர்கள் இதனைச் செய்தால், குறைந்தது ஐநூறு நபர்களின் தகவல்கள் பிழையின்றி 'சிறப்பு அடையாள அட்டை ஆணையத்திற்கு' சென்று சேரும்'.

இந்த பதிவினை பார்க்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், இந்தப் பதிவை தங்கள் நண்பர்கள், உறுப்பினர்கள் மற்றும் தாங்கள் உறுப்பினராக உள்ள வலைக் குழுக்களுக்கு பரிந்துரைப்பதின் மூலம், 'சிறப்பு அடையாள அட்டை திட்டம்' வெற்றியடையச் செய்யலாம்.
பதிவுலகின் மூலம் எத்தனையோ நல்ல விஷயங்கள் நடைபெறுகிறது, இது மட்டும் வெற்றியடையாமலா போய்விடும் ?

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!