Sunday, July 8, 2018

மனம் நிறைவான ஊர் பயணம் 6...!

கல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்ல நகைச்சுவை பேச்சில் லயித்துப்போனேன்...கல்யாணம் மிக சிறப்பாக குடும்பமாக நடந்தது, பஹ்ரைனில் இருந்தும் சொந்தங்கள் வந்திருந்தார்கள்...!

கல்யாணம் முடிந்து சாப்பாடு தொடங்கியதும் என் அத்தான் ஒருவர் டேபிளும் சேரையும் எடுத்துப்போட்டு, உக்காந்து மொய் எழுது மனோ"ன்னு உக்கார வச்சிட்டுப் போயிட்டார், நான்கைந்து பந்திகள் கடந்ததும் இன்னொரு மச்சினனை அங்கே உக்கார வச்சிக்கிட்டு நான் சாப்பிட போயிட்டேன்...

சாப்பாடு பிரமாதம், பாயாசமும், மோரும் அடடா...நெல்லை மாவட்ட கல்யாண வீட்டு சாப்பாடுன்னாலே நான் ஜெர்க்காவதுண்டு, இனி தைரியமா சாப்பிடலாம்.
மணமக்களை வாழ்த்திவிட்டு, வீட்டம்மா பெர்மிஷனோடு கிளம்பினேன் நெல்லைக்கு.... அடுத்து ஆபீசர் திருநெல்வேலியில் வெயிட்டிங் பண்ணிட்டு இருக்காரே...

கல்யாணம் முடிந்து மணமக்கள் மற்றும் பெண்வீட்டார் மறுவீடு [சங்கரன் கோவில்] காண புறப்பட...நானும் நெல்லை நோக்கி கிளம்பினேன்....சீயோன் மலையில் இருந்து பஸ்ஸில்தான் கிளம்பினேன், ஆட்டோ கூட்டி வந்த வழி வேறு, பஸ் வந்த வழி வேறு, வள்ளியூர் வந்து சேர ஒன்னரை மணி நேரம் ஆகிற்று...கிளம்பிட்டேன்னு ஆபீஸருக்கு போன் செய்து விட்டு, சார்ஜர் தீர்ந்ததால்...நெல்லை போயி ஆன் பண்ணலாம்ன்னு ஆஃப் செய்து வைத்துவிட்டேன்...பஸ்ஸின் நான்கு கால்களும் ரோட்டுக்கு வெளியே ஓடும்படி ரோடு போட்டு வச்சிருக்காங்க, உள்ளே இருக்கவன் சட்னி ஆகித்தான் வரணும் வெளியே... அம்புட்டு மேடு பள்ளம், சட்னி இடியாப்பமாகித்தான் வள்ளியூர் வந்திறங்கினேன்.

அங்கிருந்து திருநெல்வேலி பயணம், மழை மேகங்கள் அடிக்கடி இப்போ பெய்யட்டுமா அப்புறமா பெய்யட்டுமான்னு அடம் பிடிச்சிட்டே இருந்துச்சு.
திருநெல்வேலி பழைய பஸ்டாண்ட் அருகில் பழைய ஜன்னத் ஹோட்டல் பின்னாடி ஒரு பேப்பர் கடை இருக்கு, அங்கே நில்லுங்க என்று ஆபீசர் கூறியபடி நின்று கொண்டு, [நண்பர் திவானின் அப்பா கடைதான் அதுன்னு அப்புறமாத்தான் ஆபீசர் சொன்னார்] நெல்லை பழைய பேருந்து நிலையத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். ஜன்னத் ஹோட்டல் இப்போது வேறு  பெயரில் நடந்து கொண்டிருக்கிறது, நண்பர் திவானை காண முடியாமல்தான் வந்தேன்.

அதற்கிடையில் ஆபீசரும் வந்துவிட, " கொஞ்சம் வர லேட்டாகிருச்சு மனோ, எங்கள் வயதான உறவுக்காரர் ஒருவரை வழியனுப்ப ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் போக வேண்டியதாயிற்று என்று கரம் பிடித்து அழைத்து சென்றார்.
ஐந்து வருடம் முன்பு பார்த்த பழைய திருநெல்வேலி பேருந்து நிலையம், சற்று மாறியிருக்கிறது, ஜென்னத் ஹோட்டல் பெயர் மாறி இருக்கிறது, அன்பு நண்பர் திவானின் கல்தோசை சாப்பிட்ட இடம், பதிவர்களுக்கு ஆபீசர் தேளி மீன்கறி விருந்து வைத்த ஹோட்டலாச்சே, ஆபீசரை நண்பர்கள் யார் பார்க்க வந்தாலும் அது ஒரு சந்திப்பு இடமாக இருந்த நினைவுகள் எப்போதும் மறக்காதே ?!
நேராக ஆபீசர் கூட்டிப்போனது நண்பர் சுதன் ஹோட்டலுக்கு...அங்கே முன்பு விபத்தில் சிக்கி தப்பி பிழைத்த நண்பரை நலமாக சந்தித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது, அதைவிட சந்தோசம் சுதனின் அம்மா கேஷியர் இடத்தில் அமர்ந்திருக்க...சுதன் உதவியாளராக ஓடிக்கொண்டிருக்க...ஆஹா...இதைவிட சொர்க்கம் உலகில் ஏது !...[சுதன், இந்த நாட்களை கொண்டாடி விடுங்கள், வாழ்க்கையில் கிடைக்கும் இந்த சந்தோசம் எங்கும் உலகில் கிடைக்காது]

என்னைப்பார்க்க குமரேசன் செட்டியார், ஆபீசர் காளிமுத்து அவர்களும் வந்திருந்தனர், நான்குபேரும் ஹோட்டலில் அமர்ந்து அளவலாவிக் கொண்டிருந்தோம், அவித்த கொண்டைக்கடலை பரிமாறப்பட்டது, அது ஒரு புதுவித ருசியாக இருந்தது...
சுதன் வேலையில்  பிசியாக இருந்தாலும் எங்களருகில் அடிக்கடி வந்து பேசிக்கொண்டிருந்தார், அவங்க அம்மாதான் பெண் சிங்கம் போல அமர்ந்திருந்து என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார், எங்கே மகனை கடத்திட்டுப் போயிருவோனோன்னு...!

வீட்டம்மாவிடம் வாங்கி கட்டிக்க முடியாதுன்னுட்டு ஆபீசர் காளிமுத்து சார் விடை பெற, சுதனிடமும் விடைபெற்று கிளம்பினோம், திடீரென செட்டியாரும், ஆபீசரும் என்னமோ பிளான் பண்ணினாங்க..."அதோ அந்தா இருக்கு, இதோ இந்தா இருக்கு, எனக்கு தெரிஞ்சவர்தான், எனக்கும் தெரியும்"ன்னு பேசிகிட்டு வந்தாங்க...

என்ன ஆபீசர்ன்னு கேட்டேன், சுகர் செக் பண்ணுறீங்களா என்று கேட்டார், அது மும்பை போயி பண்ணிக்கிறேன் ஆபீசர் என்றேன், "இல்லை இப்போவே பக்கத்துல ஒரு சுகர் செக்கிங் லேப் இருக்கு வாங்க, இப்போவே ரிசல்ட்டும் சொல்லுவாங்க, இன்னும் அட்வான்டேஜ் என்னான்னா...மூன்று மாதங்கள் முன்னதான சுகர் அளவும் தெரிஞ்சிரும்"ன்னு வலுக்கட்டாயமாகத்தான் செட்டியாரும் ஆபீசரும் அழைத்து சென்றார்கள்.
ஆஹா...மாட்டிக்கிட்டோமேன்னு பிளட் கொடுக்க...கொஞ்ச நேரத்திலேயே ரிசல்ட் வந்துரும்ன்னு சொல்லியனுப்பினார் லேப் காரர், பீஸும் என்னை குடுக்க விடாமல் ஆபீசர் கட்டாயமாக கொடுத்துவிட்டார்.

வெளிநாட்டிலிருந்து ஊருக்கு [மும்பை] வந்ததும் வீட்டம்மா, இந்தமுறை சுகர் செக் பண்ணிட்டுப் போங்கன்னு செல்லமா சொன்னாங்க, விஜயனும் செக் பண்ண சொல்லிட்டு சுகரின் பாதிப்புகளை சொல்லி மிரட்டி வந்தார் [எப்பிடியாவது செக் பண்ண மாட்டானான்னுதான் ] அக்காக்கள் [ஒரு ஆள் BSC படிப்பு] கண்டிப்பாக செக் பண்ணுடான்னு மிரட்டிக்கிட்டு போனாங்க, நம்ம ஆபீசரும், செட்டியாரும்தான் கண்டிப்புக்காட்டி லேப்புக்கு கிட்டத்தட்ட தூக்கிட்டே போயிட்டாங்க...![நன்றிகள் ஆபீஸருக்கும், குமரேசன் செட்டியாருக்கு...]

நட்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் இல்லையா ?

தொடரும்...

படங்கள் யாவும் பழையது, விஜயன் எடுத்த படங்கள்...ஆங்...நம்ம போன்தான்  கோமாவுல இருந்துச்சே.

5 comments:

 1. அன்றைய இரவு கதைகளை மிகவும் டீடெய்லாக எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 2. அன்றைய தினத்தின் இரவு நிகழ்வுகளையும் தெளிவாக பதிவிடுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

  ReplyDelete
 3. சுகர் டெஸ்ட்டும் நல்லது தான் ஆனால் சாப்பாடுகளுக்கு தடை போடும் உளவுத்துறை ஆச்சே!)))

  ReplyDelete
 4. தினமும் ஊர்கள் மாற்றம் கண்டே வருகின்றது நாமதான் இப்படியே பழைய இடம் பழைய இடம் என்று நெஞ்சில் நினைவுகளை தேக்கி!)))

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!