Monday, September 26, 2011

வயோதிகம்... ஓய்வுக்கான காலமல்ல! - எழுபது வயதில் ஒரு புதுமுக நாவல் ஆசிரியை!


"அவர் பிரிஞ்ச நொடியில, நான் உடைஞ்சு நொறுங்கினப்ப... நரம்பும், சதையுமா இருந்த எனக்கு உயிர் கொடுத்தாங்க என் உறவுகள். அதுக்குப் பிறகுதான் எனக்குள்ளேயிருந்த இன்னொரு மனுஷியை தேடிக் கண்டுபிடிச்சேன். பொதுவா எல்லாரும் உடல் நலம் விசாரிக்க வர்ற வயசு... இந்த எழுபத்தி ரெண்டு. ஆனா, இப்போ எல்லாரும் உற்சாகப் பாராட்டு கொடுக்கத்தான் என்னைப் பார்க்க வர்றாங்க. காரணம், 'ஏன் முடங்கணும்?’னு எழுந்து வந்திருக்கற என் மனசுதான்!"

- வார்த்தைகள் அழகாக அணிவகுக்கின்றன சகுந்தலாவிடமிருந்து. எழுத்துலகில் கணிசமான கவனத்தை ஈர்த்து வரும் புத்தம் புது நாவலாசிரியர் இந்த முதியவர்!


வாழ்க்கை முழுக்க கைகோத்து வந்த கணவர் திடீரென்று 'கடந்து’ சென்ற பின், தொடரும் நாட்களை விரக்தியில் கரைப்பதுதான் வயதான பெண்களின் வழக்கம். ஆனால், இந்த அர்த்தமில்லா, அவசியமில்லா நியதியை அடித்து நொறுக்கிஇருக்கிறார் கோவையைச் சேர்ந்த இந்த சகுந்தலா.


எழுபதாவது வயதில் நாவல்கள் எழுத ஆரம்பித்து, இரண்டே ஆண்டுகளில் இதுவரை ஐந்து நாவல்களை எழுதி முடித்திருக்கிறார்! ஆன் லைன் பத்திரிகையில் அனல் பறக்க விமர்சனக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்! முறைப்படி டிரைவிங் கற்று
 லைசென்ஸ் வாங்கியிருக்கிறார்! இன்னும் பட்டாம்பூச்சி போல தன்னை பரபரபாக்கிக் கொள்ள உடலையும் மனதையும் இயக்கத்திலேயே வைத்திருக்கிறார்!

கோவையிலுள்ள அவருடைய வீட்டுக்குச் சென்றபோது... 'ஹலோ’ என்று வரவேற்றவர், "ரெண்டே நிமிஷம்... ஒரு மெயில் அனுப்பிச்சுட்டு வந்துடறேன்!’ என்று சில நொடிகளில் லேப்டாப்பை அணைத்து, நம் முன் வந்தமர்ந்தார்.

"சொந்த ஊர் சென்னை. காதல் திருமணம்தான். கணவர் சீனிவாசன் மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ். எங்களுக்கு ஒரு பொண்ணு பிறந்ததும்... 'பி.யூ.சி-க்கு மேல படிக்க முடியாம போச்சுனு வருத்தப்பட்டே இல்ல. நான் உன்னை படிக்க வைக்கறேன். விரும்பினதைப் படி’னு என்னவர் சொல்ல... மகளை வளர்த்துகிட்டே, தொலை தூரக் கல்வி மூலமா பி.காம்., எம்.ஏ., ஆங்கில இலக்கியம்னு படிப்பையும் வளர்த்துக்கிட்டேன்.
 நான் கடந்து வந்த ஷேக்ஸ்பியர், பைரன், வேர்ட்ஸ்வொர்த் இவங்கள்லாம் வாழ்க்கையைப் பத்தி நிறையவே சொல்லிக் கொடுத்தாங்க.

மகளுக்கு கல்யாணம், அவளோட வாழ்க்கைனு மகிழ்ச்சி ஒரு பக்கம் தோரணம் கட்டிக்கிட்டே இருக்க... கூடவே, சோதனைகளும் தொடர்ந்ததுதான் சோகம். அவருக்கு ஹார்ட் பிராப்ளம் வந்து போராடிக்கிட்டே இருந்தார். வாழ்க்கையை அழகா எதிர்கொள்ள கற்றுத்தந்த மனுஷன், ரெண்டு வருஷத்துக்கு முன்ன என்னோட கைகள்லயே இறந்துபோன நொடியில என்னோட உலகம் நின்னுடுச்சு"

- வார்த்தைகளுக்கு நடுவில் மௌனம் நிரப்பினார் சகுந்தலா.

"நடைபிணமா இருந்த என்னை மகள், மருமகன், பேத்தினு என்னோட உறவுகள்தான் தேத்தினாங்க. ஒரு கட்டத்துல, 'அவர் எனக்குத் தந்த இந்த துயரத்தை, நான் உயிரோட இருக்கும்போதே என்னைத் சுத்தி இருக்கறவங்களுக்கு கொடுத்துடக் கூடாது’னு மனசு தெளிஞ்சுச்சு. அழுது வடிஞ்ச கண்களை அழுந்தத் துடைச்சுட்டு, எல்லாரோடயும் பேச, சிரிக்க, பகிர்ந்துக்க, ஆலோசிக்கனு என்னைப் புதுப்பிச்சுக்கிட்டேன்.

'நீ காரோட்ட கத்துகிட்டு லைசென்ஸ் வாங்கிட்டா, ஆத்திர அவசரத்துக்கு ஹாஸ்பிட்டலுக்கு நீயே என்னை கூட்டிட்டு போயிடலாமே?’னு அடிக்கடி சொல்வார். அவர் போன பிறகாவது அதை நிறைவேற்றுவோமேனு அறுபத்தியேழா வது வயசுல டிரைவிங் லைசென்ஸை வாங்கினேன்" என்று நெகிழ்பவர், தான் நாவலாசிரியர் ஆன அந்த முக்கிய அத்தியாயம் பற்றித் தொடர்ந்தார்."அப்பப்போ கவிதை எழுதுவேன். ஆனா, யார்கிட்டேயும் காண்பிக்க மாட்டேன். அப்படித்தான் ரெண்டு வருஷத்துக்கு முன்ன நான் எழுதி வெச்ச கவிதையை யதேச்சையா எடுத்து வாசிச்ச பேத்தி ஐஸ்வர்யா, 'சூப்பர் பாட்டி!’னு புகழ்ந்ததோட மறுநாளே ஒரு பெரிய நோட்டும், பேனாவும் வாங்கிக் கொடுத்து 'கவிதை, கதைனு ஜமாய்ங்க பாட்டி. உங்களால நிச்சயமா முடியும்’னு சொன்னா.

அவளோட பேச்சே ஒரு உத்வேகம் தர, நாவல் எழுத முடிவு பண்ணினேன். என்னைச் சுத்தி நடந்த, நடக்கற விஷயங்களையும், மனிதர்களையுமே களமாகவும், கேரக்டர்களாகவும் வெச்சுக்கிட்டு எழுதத் துவக்கினேன். 'உறவும் உரிமையும்’ங்கிற தலைப்புல முதல்ல ஒரு நாவல் எழுதினேன்.

குடிகார கணவனால பாதிக்கப்பட்ட, எனக்குத் தெரிஞ்ச ஒரு இளம் பெண்தான் நாயகி. 'அக்கினிப் பூக்கள்’, 'பாலைவன சோலை’னு அடுத்தடுத்த படைப்புகள் வந்திறங்க ஆரம்பிச்சிடுச்சு. நாலு நாவல்களை எழுதி முடிச்சுட்டு வீட்டுலயே வெச்சிருந்தேன். சின்ன தயக்கத்தோட ஒரு பதிப்பகத்துக்கு அனுப்பி வெச்சேன். ரெண்டு மாசமா எந்த பதிலுமில்லை" என்பவருக்கு, நிகழ்ந்திருக்கிறது அந்த சுவாரஸ்ய திருப்பம்!

"ஒருநாள் காலையில ஒரு போன். பப்ளிகேஷன் உரிமையாளர் அருணன், 'சகுந்தலாம்மா... உங்க நாலு நாவல்களும் பிரின்டாகிடுச்சு. கூடிய சீக்கிரமே விற்பனைக்கு விட்டுடலாம்’னு சொன்னார். அந்த சந்தோஷத்துல துள்ளியே குதிச்சிடலாம்னு தோணுச்சு. இப்போ பல கடைகள், 'புக் எக்ஸ்போ'னு என்னோட புக்ஸை வாங்கி படிச்சவங்க போன் பண்ணி வாழ்த்துச் சொல்றாங்க. இதெல்லாம் மிகப்பெரிய உற்சாகத்தை எனக்குத் தர, ஐந்தாவது நாவல் ரெடியாகிட்டிருக்குது!

'சென்னை லைவ்நியூஸ்.காம்’ங்கிற ஆன்லைன் பத்திரிகையிலயும் கட்டுரைகள் எழுதறேன். சீக்கிரமே தனியா ஒரு வெப்சைட் ஆரம்பிக்கிற ஐடியாவும் இருக்கு. இப்படி துறுதுறுனு இயங்கறது மூலமா மனசுக்கு நிம்மதி மட்டுமில்லாம, பண வரவும் சாத்தியமாகுதே!" என்கிறார் லேப்டாப்பை வருடியபடி.

ஸ்ரீரங்கநாதரின் நட்சத்திரத்தையே தனது 'பென் நேமாக’ வைத்து 'ரேவதி’ என்ற பெயரிலேயே நாவல்களையும், கட்டுரைகளையும் எழுதி வரும் சகுந்தலா, "வயோதிகம்ங்கிறது ஓய்வெடுக்கற காலம்ங்கறதோ, ஒடுங்கி கிடக்க வேண்டிய காலம்ங்கறதோ கட்டாயமில்ல.

அந்த அசட்டுக் கற்பிதங்கள்ல இருந்து வெளிய வந்து, பேரன், பேத்திகளுக்கு கதைகள் சொல்றதுல இருந்து புதுசா ஒரு முயற்சியை எடுக்கறது வரைக்கும் எதைச் செஞ்சாலும் பூரண ஈடுபாட்டோட, உற்சாகத்தோட, சந்தோஷத்தோட செஞ்சா... அதுக்கான பலன் இந்த அந்திம நாட்களை இன்னும் அழகாக்கும்!" என்றார் கண்கள் கனிந்து!

நன்றி : அவள் விகடன்.

30 comments:

 1. நிச்சயமா பாட்டியை பாராட்டித்தான் ஆகணும்.அருமையான பாட்டி.அருமையான பகிர்வும் கூட.

  ReplyDelete
 2. பாட்டி ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாகிவிட்டார். இவரை பார்த்து ஏனையவர்களும் முன்னேற வேண்டும்

  ReplyDelete
 3. உண்மை, அனைவரும் கல்யாணம் செய்து சுயத்தை இழந்து... வாழ்க்கையை அனுபவிக்கும் பொழுது நாம் நாட்களை இழந்திருப்போம்... ஆனால் மன உறுதியை அல்ல

  ReplyDelete
 4. அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள் மனோ.

  ReplyDelete
 5. மிக அருமையான தன்னம்பிக்கைப் பதிவினை
  பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 6

  ReplyDelete
 6. நல்ல பகிர்வு... தன்னம்பிக்கைப் பாட்டி..

  ReplyDelete
 7. இந்த செய்தியை படிக்கிற பல பெண்களை ரீஃப்ரெஷ் செய்யவைக்கும்

  அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 8. மிகவும் அழகான பதிவு.சாதனை படைக்க வயது ஒரு தடை அல்ல. வாழ்க்கையின் திருப்பு முனைகள் எந்த வயதிலும் எந்த ரூபத்திலும் வரலாம். இது நானும் என் வாழ்வினில் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன்.

  பதிவுக்கு நன்றிகள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. நல்ல பகிர்வு. சின்னச்சின்ன விஷயங்களுக்கே மனது துவண்டு விடும் பலருக்கு இவர் வாழ்க்கை ஒரு வழிகாட்டி....

  ReplyDelete
 10. அட்ரஸ் மாறி வந்துட்டேனோ ...
  XQS ME...இது சி.பி ...ப்ளாக் தானே???

  ReplyDelete
 11. தயக்கத்துடன் எழுதுபவர்கள் ரேவதி அம்மாவை பாடமாக கொள்ளலாம்.

  ReplyDelete
 12. பாட்டி வயது அம்மாவுக்கே அவ்வளவு உத்வேகம்னா....நமக்கு எப்படி இருக்கவேணும்...
  எடுங்க எல்லோரும் பேனாவும் நோட்டும்...
  sorry...
  கீ போடும் மவுசும்...

  ReplyDelete
 13. கடைசியில நன்றின்னு போட்டு ஒரு வார்த்தை போடுறீங்களே அதைப் பார்த்தாலே கடுப்பாகுது... ஏன் சார் இப்படி...

  ReplyDelete
 14. தன்னம்பிக்கையை அதிகப் படுத்துகிறது .இந்த பதிவு .

  ReplyDelete
 15. மனோ அண்ணே பகிர்வுக்கு நன்றி...சொந்த சரக்கு தீந்து போச்சின்னு நெனைக்கிறேன் ஹிஹி!

  ReplyDelete
 16. அவரது தன்நம்பிக்கைக்கு தலைவணங்கு கின்றேன்

  ReplyDelete
 17. வாழ்க்கை முழுக்க கைகோத்து வந்த கணவர் திடீரென்று 'கடந்து’ சென்ற பின், //
  கணவர் இறந்து போனதை எவ்வளவு அழகா சொல்லி இருக்காங்க, பாருங்க

  ReplyDelete
 18. நல்ல பதிவு. அவரின் புத்தகங்களை வெளியிட்டிருக்கும் பதிப்பகம் எது என்பதை சொல்லியிருந்தால் வாங்கிப் படித்துப் பார்க்க வசதியாய் இருந்திருக்குமே...

  ReplyDelete
 19. மிக நிறைவான பகிர்வுக்கு நன்றி,தன்னம்பிக்கை பாட்டிக்கு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 20. // "வயோதிகம்ங்கிறது ஓய்வெடுக்கற காலம்ங்கறதோ, ஒடுங்கி கிடக்க வேண்டிய காலம்ங்கறதோ கட்டாயமில்ல//. சாதிக்க வயது ஒன்றும் தடையில்லை தன்னம்பிக்கை நிறைந்த அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.. இன்னும் நிறைய நிறைய வாழ்க்கையில் சாதிக்க வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 21. அவள் விகடனுக்கு நன்றி...... (பாவம் சிபி)

  ReplyDelete
 22. மிகவும் அருமையான பகிர்வை இங்கு பகிர்ந்து இருக்கீங்க

  சகுந்தலாம்மாவின் தைரியம் தன்ன்ம்பிக்கை எல்லா வெற்றிகளுக்கும் ஒரு ராயல் சல்யுட்.

  ReplyDelete
 23. வயதான அனைத்து பெண்களுக்கும் இது ஓர் உற்சாகப்பதிவு.

  ReplyDelete
 24. பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips [Reply To This Comment]

  அவள் விகடனுக்கு நன்றி...... (பாவம் சிபி)


  லொள்ளு!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 25. அருமையான பகிர்வு.

  எதையும் செய்ய வயது ஒரு தடையல்ல என நிரூபித்துவிட்டார் சகுந்தலா அம்மா இல்லை எழுத்தாளர் ரேவதி.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. சுறு சுறுப்பும், மன உறுதியும் இருந்தால் எப்போதும் ஜெயிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பாட்டி பற்றிய கட்டுரைப் பகிர்விற்கு நன்றி பாஸ்.

  ReplyDelete
 27. பகிர்ந்து கொள்வதால் சில செய்திகள் நம்மை ஊக்குவிக்கின்றன. இன்னும் கடக்க வேண்டிய பாதையின் முக்கியத்துவத்தை புரிய வைக்கிறது. நன்றி.

  ReplyDelete
 28. "நடைபிணமா இருந்த என்னை மகள், மருமகன், பேத்தினு என்னோட உறவுகள்தான் தேத்தினாங்க. ஒரு கட்டத்துல, 'அவர் எனக்குத் தந்த இந்த துயரத்தை, நான் உயிரோட இருக்கும்போதே என்னைத் சுத்தி இருக்கறவங்களுக்கு கொடுத்துடக் கூடாது’னு மனசு தெளிஞ்சுச்சு. அழுது வடிஞ்ச கண்களை அழுந்தத் துடைச்சுட்டு, எல்லாரோடயும் பேச, சிரிக்க, பகிர்ந்துக்க, ஆலோசிக்கனு என்னைப் புதுப்பிச்சுக்கிட்டேன்.

  துன்பத்தில் துவண்ட இதயத்தில் இருந்து கங்கைபோல்
  காவிரிபோல் நல்ல கருத்துக்கள் பொங்கி எழுவதை
  நானும் அனுபவ ரீதியாய்க் கண்டுள்ளேன் இப்போது இந்த
  அம்மாவோட துணிச்சலைக் கண்டு தலை வணங்குகின்றேன் .
  மிக்க நன்றி மனோ சார் அருமையான தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கு .
  அத்தோடு சின்ன மன வருத்தம் நீங்கள் பின் தொடரும் பட்டியலில்
  இந்த அம்பாளடியாளைக் காணவில்லையே என் ஆக்கங்கள் பிடிக்கவில்லையோ!.....

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!